உலகின் கலை மற்றும் கலாச்சார வரலாற்றில், நூல் கொண்டு கைகளால் நெய்யப்பட்ட சில படைப்புகள், காலத்தைக் கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் முக்கியமானவை, ஈரானின் (பாரசீகம்) கையால் நெய்யப்பட்ட கம்பளங்களும் (Persian Rugs), பிரான்ஸ் அரசவையின் கோபெலின் (Gobelin) தரைவிரிப்புகளும் ஆகும். இரண்டுமே வெறும் தரைவிரிப்புகள் மட்டும் அல்ல; அவை ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாறு, கலை நுட்பத்தையும், நாட்டின் செல்வச் செழிப்பையும் கூறும் கலை நுட்பங்கள்.
வரலாற்றுப் பின்னணி:
பாரசீகக் கம்பளங்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டவை. இந்த நெசவுக் கலை பாரசீக நாடோடி மக்களின் தினசரி தேவைக்காக தொடங்கி, படிப்படியாகப் பேரரசர்களின் அரசவைக் கலையாக மாறியது. 16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் சபாவித் (Safavid) வம்சத்தின் ஆட்சியின் கீழ் இவை உச்சம் தொட்டன.
கலை நுட்பம்:
பாரசீகக் கம்பளங்கள் பிரத்தியேகமாக கைகளால் பின்னப்பட்ட முடிச்சுகளைக் கொண்டவை. ஒரு சதுர அங்குலத்தில் ஆயிரக்கணக்கான முடிச்சுகளை உருவாக்கும் நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றின் வலிமைக்குக் காரணம், செம்மறியாட்டு கம்பளி மற்றும் பட்டு போன்ற பொருட்கள்தான். வடிவங்கள், மலர்கள், விலங்குகள் மற்றும் குர்ஆன் வசனங்களின் சிக்கலான வடிவமைப்புகள் இவற்றின் சிறப்பு. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்துவமான வடிவங்கள் உள்ளன.
பாரசீகக் கம்பளங்கள் ஒரு கலைப் படைப்பாக மட்டுமல்லாமல், குடும்பச் சொத்தாகவும் கருதப்படுகின்றன. இவற்றின் ஆயுள் பல தலைமுறைகள் நீடிக்கும். இது ஈரானியர்களின் அடையாளம், விருந்தோம்பல் மற்றும் ஆன்மீகச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸின் கோபெலின் தயாரிப்புக்கூடம், 17 ஆம் நூற்றாண்டில், பதினான்காம் லூயி மன்னரின் (King Louis XIV) ஆட்சிக்காலத்தில், நிதியமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் (Jean-Baptiste Colbert) நிறுவப்பட்டது. இது அரச குடும்பம் மற்றும் உயர்குடியினரின் அரண்மனைகளை அலங்கரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கூடம்.
கோபெலின் தரைவிரிப்புகள் முக்கியமாக நேர் செங்குத்து நெசவுத்தறியில் நெய்யப்படுகின்றன. இவை கம்பளங்களை விட, ஓவியங்களுக்குச் சமமான தரத்துடன் உருவாக்கப்படுகின்றன.
இவற்றில் மிக உயர்தரமான கம்பளி மற்றும் பட்டு நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓவியங்களை சிறப்பாக்க , பலநூறு வகையான வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் வடிவமைப்புகள் அரசவைக் ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்களைப் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் வரலாறு, புராணக் கதைகள் மற்றும் மன்னரின் வெற்றிகள் ஆகியவை இவற்றின் கருப்பொருளாக இருக்கும்.
கோபெலின் தரைவிரிப்புகள் பிரெஞ்சுக் கலை ஆதிக்கத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. இவை அதிகாரத்துவத்தையும், ஐரோப்பியச் சமகால ஓவியக் கலையின் பிரம்மாண்டத்தையும் வெளிப்படுத்தும் அரசவைக் கலைப் பொக்கிஷங்கள் ஆகும்.