கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ளது பிரசித்தி பெற்ற மலர்ச்சந்தை. இங்கு பூக்கள் மட்டுமல்ல, மலர்களை அழகான மாலைகளாகக் கட்டுவதிலும் பிரசித்தி பெற்ற ஊர். இந்த ஊரில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம். மலை குன்றுகளுக்கு இடையே இந்த ஊர் உள்ளதால் இயற்கையான தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை பூக்களை விளைவிப்பதற்கும் பூக்களை பின்னுவதற்கும் சரியான சூழலாக அமைந்துள்ளது. இங்கு கட்டப்படும் மாணிக்க மாலைக்கு தனி வரலாறு உண்டு.
மாணிக்க மாலை என்பது மாணிக்கக் கற்களை கோர்த்து செய்வது என நினைத்து விடாதீர்கள். இயற்கையாக மலரும் பூக்களை வைத்துதான் மாணிக்கம் மாலை கட்டப்படுகிறது. சாதாரண பூமாலைகளைத் தொடுப்பது போன்று அல்லாமல் பாய் பின்னுவது போன்று கோர்த்து மாணிக்கம் மாலைகள் உருவாக்கப்படுகின்றன. சாதாரண பூ மாலைகள் உருளை வடிவில் கட்டப்படும். ஆனால், மாணிக்க மாலைகள் பட்டை வடிவில் கட்டப்படுகின்றன.
இந்த மாலையை பார்ப்பதற்கு பட்டையாக பாய் விரித்தாற்போல் இருக்கும். வெள்ளை அரளி பூவையும் சிவப்பு அரளி பூவையும் பறித்து சம அளவில் கட்டும்போது அது மாணிக்கம் போன்று தோற்றமளிக்கும். அதனால்தான் இதற்கு மாணிக்கம் மாலை என்று பெயர் பெற்றது. வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே மாணிக்கமாலை செய்ய பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்காக வெள்ளை அரளிப்பூ, சிவப்பு நிற வண்ணத்துக்காக சிவப்பு அரளி பூ மற்றும் பச்சை நிறத்துக்காக நொச்சி இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூக்கள் சம்பா நாரால் கோர்க்கப்படுகின்றன. இது பார்ப்பதற்கு பாய் விரித்தது போன்று வித்தியாசமாக இருப்பதுடன், நான்கு நாட்கள் ஆனாலும் வாடாமல் அழகாக இருக்கும்.
இந்த மாணிக்க மலைளில், சுவாமிக்கு அணிவிக்கும் மாலை, தோரண வாயில்களில் தொங்கவிடும் நிலை மாலை, கொத்துமாலை என நிறைய வகைகள் இருக்கின்றன. மாணிக்க மாலை நான்கு நார்கள் எடுத்து நான்கு நார்களாலும் பூக்களை கட்டுவது இதன் ஸ்பெஷாலிட்டி. மாணிக்க மாலையில் ஒரு முழம் கட்டவே இருபது நிமிஷம் ஆகுமாம். சின்ன மாலையை கட்ட நான்கு மணி நேரம் ஆகும்.
திருவிதாங்கூர் மகாராஜா இதனைப் பார்த்த பிறகு இந்த மாலை தங்கத்தின் மீது மாணிக்கத்தை வைத்தது போன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதனால் அன்றிலிருந்து இது தோவாளை மாணிக்க மாலை என அழைக்கப்படுகிறது. அந்த மகாராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க தினமும் பத்மநாப ஸ்வாமிக்கு மாணிக்க மாலை சாத்தப்பட்டு வருகிறது. இன்றளவும் தினமும் தோவாளையில் கட்டப்படும் மூன்று ஜோடி மாணிக்க மாலைகள் பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பத்மநாப ஸ்வாமி கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் திருவிழாவின்போது பல்லக்கில் ஸ்வாமி எழுந்தருளும்போதும் தோவாளை மாலை அணிவிப்பது வழக்கம்.