தோல்பாவைக் கூத்து பற்றித் தெரியுமா?

தோல்பாவைக் கூத்து பற்றித் தெரியுமா?

- அ.கா.பெருமாள்

தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி சம்பாஷணை செய்து ஆட்டிக் காட்டுவது இக்கலையின் தாத்பரியம். இசை,  ஓவியம், பல குரலில் பேசுவது, நடனம், நாடகம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை (கலை) இது. தோல்பாவைக் கூத்து உலகளாவிய கலை. இந்தியாவில் தமிழகம், கேரளம், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர்.

இக்கலை பற்றிய பழைய சான்று மகாபாரதத்தில் வருகிறது. பரதசாஸ்திரம் இதைச் சாயா நாடகம் எனக் குறிப்பிடும். புராணங்கள், தத்துவங்களை விளக்க இக்கலையை உவமையாகக் கொள்ளுகிறது

தமிழகத்தில் இக்கலையை கணிகரின் ஒரு பிரிவினராகிய மண்டிகர் நடத்துகின்றனர். இச்சாதியினர் மட்டுமே இக்கலையை நடத்த முடியும் என்பது நியதி. இவர்களின் தாய்மொழி மராட்டி. தஞ்சை மராட்டிய ஆட்சியின் (1676-1855) இறுதிக்காலத்தின் போது தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் தென்மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

தோல்பாவைக் கூத்து குடும்பக்கலை. இக்கலைக் குழுவில் 5 முதல் 9 கலைஞர்கள் இருப்பர். தலைமைக் கலைஞரான பாவையாட்டி, ஹார்மோனியம் இசைப்பவர், மிருதங்கம் அல்லது கஞ்சிரா அடிப்பவர், அனுமதிச்சீட்டு வழுங்குபவர் என இக்குழு அமைந்திருக்கும். தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் பாவையாட்டி வசனம் பேசியும், பாட்டுப்பாடியும், சில இசைக் கருவிகளை இசைத்தும் நிகழ்ச்சியை நடத்துவார். பெண்கள் பாவை யாட்டும் வழக்கம் தமிழகத்தில் பிரபலமாக இல்லை.

இப்போது இக்கலை நிகழ்ச்சியில், ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, கட்டை, பாவுரா, கக்கர் ஆகிய இசைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். முந்திய காலங்களில் துந்தனம், இரட்டைக்கொட்டு ஆகிய கருவிகள் இருந்தன. (கக்கர் என்பது மணிச் சலங்கை.)

கதாபாத்திரங்களின் குரலை மாற்ற வேண்டிய
இடங்களிலும்,  அனுமன் ஆகாயத்தில் பறக்கும்போதும் பாவுரா என்ற இசைக்கருவி பயன்படுத்தப்படும்.

பாவை, ஆட்டுத்தோலால் செய்யப்படுவது. தோலைப் பதப்படுத்தி படம் வரைந்து பாவையைத் தயார் செய்யும் வேலையையும் பாவையாட்டியே செய்கிறார். பாவைகளின் மேல் ஒளி ஊடுருவ வேண்டும் என்பதால் பாவைகளின் ஆபரணங்களில் துவாரங்கள் இடப்படும். பொதுவாக ஒரு கலைக்குழுவில் 150 முதல் 200 பாவைகள் இருக்கும்.

இக்கலையின் முக்கிய உபகரணம் விளக்கு. இருள் நிறைந்த நேரத்தில் திரைச்சீலையின் மேல் பொருத்தப்பட்ட தோல்பாவையின் மீது விளக்கு ஒளிபட்டு ஊடுருவி அதன் நிழல் திரையில் தெரிவதன் மூலம் பாவை உயிர் பெறும். ஆரம்பக் காலத்தில் எண்ணெய் விளக்கையும், பின்னர் பெட்ரமாக்ஸ் விளக்கையும் பயன்படுத்தினர். இப்போது மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோல்பாவைக் கூத்துக்குரிய பாடு பொருள்: ராமாயணக் கதை, அரிச்சந்திரன் கதை. உட்பட 12 பகுதிகளாக நடப்பது. நல்லதங்காள் கதைக்கு வசூல் அதிகம்.

ஒரு காலத்தில் இது பெரியவர்களின் கலையாக இருந்தது. இப்போது பெருமளவுக்குக் தமாஷ் காட்சிகளுக்கு இடமளிக்கும் சிறுவர் கலையாகவே மாறிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com