ஒரு சுடர் வெளிச்சத்தில் ஒளிரும் ஆயிரக்கணக்கான கண்ணாடிகள்! மன்னர்களின் மாயாஜாலம் இதுதான்!

Amber fort
Amber fort
Published on

ந்தியாவின் வரலாறு என்பது அரசர்களின் வீரம், கலாச்சாரம், கலை மற்றும் கட்டடக் கலை ஆகியவற்றின் சங்கமமாகும். ஆம்பர் கோட்டை(Amber fort) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில், ஆரவல்லி மலைத் தொடரின் ஓரத்தில் அமைந்துள்ளது. கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மாவோட்டா ஏரி (Maota Lake) இந்த கோட்டைக்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறது.

வரலாறு: ஆம்பர் பகுதி ஆரம்ப காலத்தில் மீனா பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கச்ச்வாஹா ராஜபுத்திர வம்சம் இந்த பகுதியை கைப்பற்றி, தங்கள் ஆட்சியை நிறுவியது. கச்ச்வாஹா வம்சத்தினர் பல நூற்றாண்டுகள் ஆம்பர் பகுதியைத் தங்கள் தலைநகராக வைத்திருந்தனர். இதன் காரணமாக ஆம்பர் அரசியல், ராணுவ மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட நகரமாக வளர்ச்சி பெற்றது.

கட்டுமான வரலாறு: ஆம்பர் கோட்டையின் கட்டுமானம் 1592 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கோட்டையை கட்டியவர் கச்ச்வாஹா வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான ராஜா மான் சிங்-1 ஆவார். இவர் முகலாய பேரரசர் அக்பரின் முக்கிய சேனாதிபதிகளில் ஒருவராக இருந்தார்.

ராஜா மான்சிங்-1 தொடங்கிய கட்டுமானத்தை, அவரது வாரிசுகளான மிர்சா ராஜா ஜெய் சிங்-1, சவை ஜெய் சிங்-II உள்ளிட்ட அரசர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தினர். இதனால் ஆம்பர் கோட்டை ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட கோட்டையாக இல்லாமல், பல தலைமுறைகளின் கலைப்பணிகளை இணைத்த ஒரு மாபெரும் கட்டடமாக மாறியது.

ஆம்பர் நீண்ட காலம் கச்ச்வாஹா வம்சத்தின் தலைநகரமாக இருந்து காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரித்ததும், நீர் பற்றாக்குறை ஏற்பட்டதும், நிர்வாக சிக்கல்கள் உருவானதும் காரணமாக, 1727 ஆம் ஆண்டு மஹாராஜா சவை ஜெய்சிங் II, புதிய நகரமான ஜெய்ப்பூரை நிறுவினார். இதன் மூலம் தலைநகரம் ஆம்பரிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது.

கட்டடக் கலை சிறப்பு: ஆம்பர் கோட்டை ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டடக்கலை கலவையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோட்டையில் சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை மார்பிள் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயர்ந்த மதில்கள், பெரிய வாயில்கள், மாளிகைகள், மன்றங்கள் ஆகியவை கோட்டையின் வலிமையையும், அழகையும் வெளிப்படுத்துகின்றன. பாதுகாப்புக்காக கோட்டை மலை உச்சியில் அமைக்கப்பட்டு, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம்பர் கோட்டையின் முக்கிய பகுதிகள்

1.சூர்ஜ் போல் (Suraj Pol): இது கோட்டையின் முக்கிய நுழைவாயிலாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால், காலை சூரிய ஒளி நேரடியாகப் படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

2. ஜலேப் சௌக் (Jaleb Chowk): இது கோட்டையின் முக்கிய மைய வளாகம். போர் முடிந்து திரும்பும் வீரர்கள் இங்கு திரண்டதாக வரலாறு கூறுகிறது.

3. தீவான்-இ-ஆம் (Diwan-i-Aam): பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசரிடம் நேரடியாக தெரிவிக்க பயன்படுத்தப்பட்ட மன்றமாகும்.

4. தீவான்-இ-காஸ் (Diwan-i-Khas): அரச குடும்பத்தினருடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்ட தனியார் மன்றம் இதுவாகும்.

5. ஷீஷ் மஹால் (Sheesh Mahal): ஆம்பர் கோட்டையின் மிகவும் பிரபலமான பகுதி. ஆயிரக்கணக்கான சிறிய கண்ணாடித் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த மாளிகையில், ஒரு சிறிய விளக்கு ஏற்றினாலே முழு அறையும் நட்சத்திரங்கள் போல ஒளிரும் என கூறப்படுகிறது.

6. சுக்நிவாஸ்: கோடைகால வெப்பத்தை தணிக்க, நீர்வழி அமைப்புகள் மற்றும் காற்றோட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட சிறப்பு அறைகள்.

இதையும் படியுங்கள்:
அழகு மட்டுமல்ல, ஆபத்தும் கூட... கோஹினூர் வைரத்தின் சபிக்கப்பட்ட வரலாறு!
Amber fort

2013 ஆம் ஆண்டு, 'Hill Forts of Rajasthan' என்ற தலைப்பின் கீழ், ஆம்பர் கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் நகரின் பெருமைக்கு அடையாளமாக விளங்கும் இந்த கோட்டை, எதிர்கால தலைமுறைகளுக்கும் இந்திய வரலாற்றின் மகத்துவத்தை உணர்த்தும் பொக்கிஷமாக நிலைத்து நிற்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com