அமெரிக்காவில் இன்று பழங்குடி மக்கள் தினம்!

அமெரிக்காவில் இன்று பழங்குடி மக்கள் தினம்!
Published on

த்தாலியைச் சேர்ந்த கிரிஸ்டபர் கொலம்பஸ், சைனா மற்றும் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆசையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 1492ம் ஆண்டு புறப்பட்டார். அக்டோபர் 12, பஹாமா வந்தடைந்தார். பின்னர் க்யூபா சென்ற அவர், அதை சைனா என்று நினைத்தார். பின்னர் நிறைய தங்கக் கட்டிகள், உணவு மசாலா ஆகியவற்றுடன் ஸ்பெயின் திரும்பினார். இதுமட்டுமல்லாமல், அடிமையாக வேலை செய்ய நிறைய சிவப்பிந்தியர்களை சிறைப் பிடித்துச் சென்றார்.

கொலம்பஸ் அமெரிக்காவில் கால் பதித்த நாளான அக்டோபர் 12ம் தேதியை கொலம்பஸ் நாளாகக் கொண்டாட வேண்டுமென்று, இத்தாலியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய வம்சாவளியினர் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். 1937ம் வருடம், கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் வேண்டுகோளின்படி, அப்போதைய அதிபர் ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட், ‘கொலம்பஸ் தின’த்தை பொது விடுமுறை நாளாக அறிவித்தார். அக்டோபர் மாதம், இரண்டாவது திங்கட்கிழமை ‘கொலம்பஸ் தினம்’ என்று முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் எல்லா மாநிலங்களும், இந்த நாளை விடுமுறையாக ஒப்புக் கொள்வதில்லை. ‘கொலம்பஸ் தினம்’ கொண்டாடுவதற்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கின்றன. இந்த நாள், கிறித்துவ மதத்தின் கத்தோலிக்க பிரிவுடன் தொடர்பு கொண்டதால் சிலர் இதை எதிர்க்கின்றனர். அமெரிக்க பூர்வ குடி மக்கள் மற்றும் பலர், கொலம்பஸ் கொண்டாடத்தக்க மனிதரில்லை என்று கருதுகின்றனர். அமைதியாக இருந்த நாட்டில் நுழைந்து அதனை ஐரோப்பாவின் காலனியாக மாற்றினார். உலகளாவிய அடிமை வியாபாரத்தை ஊக்குவித்தார். பூர்வ குடி மக்களை அடிமையாக மாற்றியதுமல்லாமல், கொடூரமான முறையில் சித்திரவதை செய்தார். ஐரோப்பாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் பெரியம்மை, குளிர் காய்ச்சல் போன்ற தீவிர வியாதிகளைக் கொண்டு வந்தனர். அதனால் லட்சக் கணக்கான பழங்குடியினர் உயிரிழந்தனர். புதியதாகக் குடியேறியவர்கள், அவர்கள் வாழ்வதற்காக பூர்வகுடி மக்களைக் கொன்று குவித்தனர். இவையெல்லாம் பழங்குடி மக்களின் குற்றச்சாட்டு.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பதை பலர் ஒப்புக் கொள்வதில்லை. கொலம்பஸ் வருவதற்கு முன்பே இங்கு லட்சக்கணக்கில் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்கின்றனர். சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு தரை மார்க்கமாக மக்கள் வந்ததாகக் கூறுகின்றனர். அதைப்போல பாபிலோனிலிருந்து புதிய கண்டத்துக்கு மக்கள் வந்ததாகவும் வரலாறு உண்டு. கொலம்பஸ் புதிய கண்டத்துக்கு வருவதற்கு 500 வருடங்களுக்கு முன்பு எரிக்சன் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கப்பல் தலைவர் தன்னுடைய மாலுமிகளுடன் அமெரிக்கா வந்ததற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறுகின்றனர். சைனாவைச் சேர்ந்த அட்மிரல் ஜெங்ஹீ கொலம்பஸ் வருவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா கண்டம் வந்தார். ஆனால், கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகுதான் அதிக அளவில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வருவது தொடங்கியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2021ம் வருடம் கொலம்பஸ் தினத்துடன், பழங்குடி மக்கள் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார். ‘பழங்குடி மக்கள் தினம் சட்டம்’ இந்த வருடம் அக்டோபர் 2ஆம் தேதி, அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் நாடு முழுவதும், அக்டோபர் இரண்டாம் திங்கட்கிழமை ‘பழங்குடி மக்கள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, ‘பழங்குடி மக்கள் தினம்’ அல்லது ‘கொலம்பஸ் தினம்’ என்று அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

ஐரோப்பா நாட்டிலிருந்து மக்கள் வருவதற்கு முன்னால், அமெரிக்காவில் இருந்த பழங்குடி மக்களின் வரலாறு, மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. மாணவர்களின் பாடத்திட்டங்களில் இதற்கான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com