உலகில் பெரும்பான்மையான நாடுகள் மே ஒன்றாம் தேதியை “மே டே” என்று தொழிலாளர் தினமாகக் கொண்டாடும் போது, வட அமெரிக்கா செப்டம்பர் முதல் திங்கள்கிழமையில் கொண்டாடுவதின் காரணம் என்ன? சரித்திரத்தை சற்று புரட்டிப் பார்ப்போம்.
“எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரம் எங்கள் நேரம்” என்ற பாடலுடன் உழைக்கும் வர்க்கத்தின் பொது வேலை நிறுத்தம் மே மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் என்ற இடத்தில் தொடங்கியது. அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த போராட்டத்தில், மே மாதம் நான்காம் தேதி தொழிலாளர் கூட்டத்தைக் கலைக்க இருநூறு காவலர்கள் கொண்ட படை வந்தது. அன்று நடந்த கலவரம் மற்றும் காவல்துறை அடக்கு முறையில் எட்டு காவலர்கள் உட்பட, இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனை “ஹே மார்க்கெட் படுகொலை” என்பார்கள். புலம் பெயர்ந்து வந்திருந்த அராஜகவாதி களையும், அவர்களுக்குத் துணை நின்ற இடதுசாரி தீவிரவாதிகளையும் அரசு சிறையில் அடைத்தது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைக்காகப் போராடவும் “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற அமைப்பு தொடங்கியது.
இது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு,1916ஆம் வருடம், தொழிலாளர் கோரிக்கையான எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை முன்வைத்து தொடர் போராட்டம் தொடங்கிய மே மாதம் ஒன்றாம் தேதி “உலக தொழிலாளர் தினம்” என்று உலக நாடுகள் ஒப்புக் கொண்டு அன்று விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஆனால், இதற்கு 22 வருடங்களுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் கனடா அரசுகள் செப்டம்பர் முதல் திங்களை தொழிலாளர் தினமாக அங்கீகரித்து விட்டன. அதனால் :அமெரிக்காவில் நடந்த ஹே மார்க்கெட் படுகொலையுடன் தொடர்புடைய மே ஒன்றாம் தேதியை அமெரிக்கா ஏற்கவில்லை.
இடதுசாரி கொள்கை, பொது உடைமை கோட்பாடு ஆகியவை வட அமெரிக்க நாடுகளின் கொள்கைக்கு எதிரானது. ஹே மார்க்கெட் போராட்டம், கம்யூனிஸ்ட் கொள்கை உடையவர்களால் வழி நடத்தபட்டது என்பதும், அமெரிக்கா, கனடா நாடுகள் மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாக அங்கீகாரம் செய்யாததற்கு ஒரு காரணம் எனலாம்.