குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஒரே விஷயம் பொம்மைகள். பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்களும் ஒரு வகையில் பிரம்மாவுக்கு ஒப்பானவர்களாக கருதப்படுகிறார்கள். பொம்மைகளுக்காகவே ஒரு நகரம் இருக்கிறது தெரியுமா? அதுதான் கர்நாடகாவில் உள்ள சென்னப்பட்டிணம். பெங்களூரூ நகரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய நகராட்சிதான் சென்னப்பட்டிணம். உள்ளூர்வாசிகள் இந்த ஊரை ‘சன்னபட்ணம்’ என்றும் அழைக்கின்றனர்.
இந்த ஊரில் காலை வைக்கும்போதே, ‘டாய் சிட்டி வெல்கம்ஸ் யூ’ (Toy City Welcomes You) என்கிற வளைவு பயணிகளை வரவேற்கிறது. பாரம்பரியமிக்க மர பொம்மைகளுக்குப் பெயர்பெற்றது என்பதால் இந்நகரம், ‘பொம்மைகளின் நகரம்’ (கன்னடத்தில் ‘கோம்பேகலா நாகரா’) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பொம்மைகள் பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் தயாரிக்கப்படுகிறது.
இந்நகரில், இத்தொழிலில் ஈடுபடுபட்டுள்ளவர்கள் மூன்று, நான்கு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். திப்பு சுல்தான் காலத்திலே இந்நகரில் இந்த பொம்மைக் கலை தோன்றியது என்றும் உள்ளூர் கைவினைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக பெர்சியாவிலிருந்து கைவினைஞர்களை வரவழைத்தார் என்றும் கூறப்படுகிறது.
பொம்மை தொழிலுக்காகவே தமது வாழ்க்கையை தியாகம் செய்தவரான பாவாஸ் மியான் என்பவர், சென்னபட்ணாவின் ‘பொம்மைகளின் தந்தை’ எனப்படுகிறார். இவர், பொம்மைகளைத் தயாரிப்பதற்காக ஜப்பானிய தொழில்நுட்பத்தை ஏற்று உள்ளூர் கைவினைஞர்களுக்கு அவர்களின் கலையை மேம்படுத்த உதவியதாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக இந்த பொம்மைகளைத் தயாரிப்பதில் வெப்பாலை மரமே முதன்மை மரமாக இருந்து வந்துள்ளது. தற்போது ரோஸ்வுட் மற்றும் சந்தனம் மரங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன. காலப்போக்கில் பாரம்பரிய வெப்பாலை மரத்தோடு கூடுதலாக இரப்பர், சைக்காமோர், சிடார், பைன் மற்றும் தேக்கு உள்ளிட்ட மரங்களும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொம்மைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாயங்கள் மற்றும் லாக் ஆகியவை 100 சதவிகிதம் இயற்கையானவை என்பதால் இவை குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பானவையாக உள்ளது.
அன்றைய காலத்தில் மர பொம்மைகள் முழுவதும் கைகளால் மட்டுமே இழைத்து உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த மாற்றத்தில் இயந்திரங்களின் உதவியுடன் பொம்மைகள் தயாராகிறது. மரத்தை வெட்டுவது முதல் கடைவது வரை அனைத்திற்கும் கடைசல் இயந்திரங்கள் வந்துவிட்டன. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகளை அரசே மொத்தமாக கொள்முதல் செய்து, ‘காவேரி கைவினை பொருள் அங்காடிகள்’ மூலம் விற்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்நாடக கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் (கே.எச்.டி.சி) இப்பொம்மைகளைச் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குகிறது. பொம்மை தொழிலாளர்களுக்காக அரசு இலவச வீடு, லேத் பட்டறை போன்ற வசதிகளையும் செய்து தந்துள்ளது. என்றாலும், இந்த கைவினைக் கலைஞர்களின் உழைப்பிற்கு ஏற்ற பொருளாதாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மிகவும் சிறிய பொம்மைகள், தொங்கும் சாவிக்கொத்து முதல் குழந்தைகளுக்கான ஆடும் குதிரை பொம்மை வரை ஏராளமான மர பொம்மைகளும் மேஜை போன்ற பொருள்களும் இங்கு தயாராகின்றன. இங்கு வரும் வெளிநாட்டவர்களும் இதன் மதிப்பு அறிந்து இந்த பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.
சென்னபட்டணம் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத இந்நகர மரபொம்மைகளை வாங்கி அந்தக் கலைஞர்களுக்கும் கலைக்கும் ஆதரவளிப்போம்.