
கழுத்து நகைகள் வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அவை நம் மத நம்பிக்கைை, சடங்குகள், திருமண அடையாளங்கள், சமூக நிலை மற்றும் தனிப்பட்ட பாணியின் பிரதிபலிப்புகளாகும். கழுத்தில் நகைகள் அணியும் பொழுது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். அதிக பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். தமிழ் பாரம்பரிய கழுத்தணிகள் முத்தாரை, கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை மற்றும் சுண்டைக்காய் மாலை
முத்தாரை:
முத்தாரை என்பது பண்டைய காலத்தில் பெண்கள் இடையிலோ கழுத்திலோ அணிந்த ஒரு வகை அணிகலனைக் குறிக்கும். இது பொதுவாக பல முத்துக்களால் கோர்க்கப்பட்ட நெக்லஸ் ஆகும். இதை ஒட்டியாணம் அல்லது கழுத்தணி என இருவகையாகவும் அணியலாம்.
காசு மாலை:
தங்க காசுகளைக் கொண்டு கோர்க்கப்படும் இந்த மாலை மிகவும் பிரபலமானது.
ஓணப்பதட்டு நகைகள்:
தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் இவை கழுத்தணிகள், காதணிகள், வளையல்கள் போன்ற வடிவங்களில் காணப்படும். 9 ரத்தினக் கற்களைக் கொண்டு செய்யப்படும் இந்த நகைகள் தமிழ்நாட்டுப் பெண்களால் பல நூற்றாண்டுகளாக அணியப்பட்டு வரும் பாரம்பரிய நகையாகும்.
சரப்பளி:
சரப்பளி என்பது செயினிலேயே மிக நீளமாக போட்டுக் கொள்ளும் ஒரு அணிகலன்.
சவுடி:
சவுடி என்பது கழுத்தை ஒட்டியும் இருக்காது; மிகவும் நீளமாகவும் இருக்காது. தட்டையாக கழுத்தில் அணியக்கூடிய அணிகலன் இது.
மணியாரம்:
மணியாரம் என்பது மணிகளால் அழகாக கோர்க்கப்பட்டு கழுத்தில் ஆரமாக அணிவது. இதில் ஒற்றைச்சரம், இரண்டு சரம், மூன்று சரம் என்றுள்ளது.
சன்னவீரம்:
கழுத்தில் அணியக்கூடிய சன்னவீரம் மாலை என்பது பிராமணர்கள் அணியும் பூணூலைப் போன்ற ஒரு பாரம்பரிய அணிகலனாகும். இது பாரம்பரிய தமிழ் அணிகலன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கண்டிகை:
கழுத்தைச் சுற்றிலும் ஒட்டி அணியப்படும் நகையான இது இன்றைய காலத்து 'சோக்கர்' போன்ற அணிகலனை ஒத்தது. கண்டம் என்றால் கழுத்து; அந்த இடத்தில் அணியப்படுவதால் கண்டிகை என்ற பெயர் பெற்றது. கண்டிகை என்பது பொதுவாக கழுத்தில் அணியும் மணிகளால் ஆன மாலை அல்லது நகைகளைக் குறிக்கும். ருத்ராட்சம், பதக்கம் போன்ற பல்வேறு வகையான கழுத்தணிகளும் கண்டிகை என்று பொதுவாக அழைக்கப்படும்.
முத்துமாலை:
முத்துக்களால் செய்யப்பட்ட இந்த மாலை தனிச் சிறப்புடையது.
கழுத்தணிகளில் கடுமணி மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, கோதை மாலை, அரும்புச்சரம் என ஒவ்வொரு நகையும் அதன் கலாச்சார பின்னணியையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. அணிகலன்கள் பெண்களின் அழகை மேம்படுத்துவதுடன், சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தன.