
கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசையான பதிவு தான் வரலாறு. மனிதன் கடந்து வந்த பாதையை அறியவும், புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது. பல சுவாரஸ்யமான வரலாற்று உண்மைகள் நம்மில் பலருக்கு தெரியாது. தெரிந்து பரவசமடையவே இந்த தொகுப்பு...
இங்கிலாந்து நாட்டின் மெர்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'டெர்பி பிரபு' பாலம் வெறும் 14 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அவசரபாலம் எதற்காக தெரியுமா? 7 ம் ஹென்றி மன்னர் அந்த ஆற்றை ஒரே ஒரு முறை தான் கடந்து செய்வதற்காகத்தானாம். துரிதகதியில் பாலம் கட்டப்பட்டிருந்தாலும், அந்த பாலம் 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஜம்மென்று நிற்கிறது.
ஆஸ்திரேலியப் பத்திரிகை நிபுணரான எட்வர்டு ஹனி என்பவர் பல்வேறு நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களில் இன்னுயிரை நீத்த எண்ணற்ற தியாகிகளை இந்த உலகம் மறந்துவிடக் கூடாது என நினைத்தார். இதற்கு மவுன அஞ்சலியே சிறந்த வழி என்ற எண்ணம் அவர் மனதில் உதயமாயிற்று. இது 1939 ம் ஆண்டு நவம்பரில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவரை பக்கிங்காம் அரண்மனைக்கு மன்னர் வரவழைத்தார். மெளன அஞ்சலிக்கு ஒத்திகை நடத்தப்பட்டது. முதலில், 5 நிமிடங்கள் மெளனம் செலுத்த வேண்டும் என்று ஹனி சொன்னார். அது சற்று அதிகமாக பட்டதால், இரண்டு நிமிடமே போதும் என்று நேரம் குறைக்கப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு இரண்டு நிமிட மெளன அஞ்சலி முறை நடைமுறைக்கு வந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு வீசி அழித்த பி-29 வகை விமானத்தை தயாரித்த நிறுவனம், புகழ் பெற்ற கார் நிறுவனமான 'கிறிஸ்லர்' ஆகும். அதுபோல அவர்களின் குண்டுகளை எதிர்க்க ஜப்பான் பயன்படுத்திய 'ஜுரோஸ்' விமானத்தை தயாரித்தது 'மிட்சுபிஷி' கார் நிறுவனம் ஆகும். ஆனால், அதன் பின்னர் கிறிஸ்லர் நிறுவனமும், மிட்சுபிஷி நிறுவனமும் இணைந்து, வர்த்தக ஒப்பந்தம் செய்து, 'டைமண்ட் ஸ்டார்' என்ற பெயரில் கார் தயாரித்து விற்பனை செய்தார்கள்.
வில்லியம் ஹில் என்ற பத்திரிகை ஆசிரியர் தனது 14 ஆவது வயதிலிருந்து 90 ஆவது வயது வரை ஒரு நாள் விடாது டைரி எழுதியிருக்கிறார். இந்த டைரிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்வாடர்ஸ்டாண்டு பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஹெர்மன் வான் மிட் நைட் என்பவர் ஜெர்மனியில் உள்ள வுர் டெம்பர்க் ராஜ்ஜியத்தின் பிரதமராக 39 வருடம் இருந்தவர். இவர் நள்ளிரவில் பிறந்தவர். இவருக்கு திருமணமும் நள்ளிரவிலேயே நடந்தது. இவர் நள்ளிரவில் தான் சாப்பிடுவார். அப்போது தான் கோப்புகளில் கையெழுத்திடுவார். தமது நாய்க்கும், இரண்டு வேலைக்காரிகளுக்கும் 'மிட் நைட்' எனப் பெயரிட்டார். நள்ளிரவில் பிறந்தவர்களுக்கு பெரும் ஆதரவளித்தார். நள்ளிரவிலேயே அவர் உயிர் பிரிந்தது!
ஜெர்மனியின் பவேரியா பகுதியில் டிரினிட்டி எனும் மூன்று அடுக்குகளுடன் கூடிய சர்ச் உள்ளது. இதில் மூன்று கோபுரங்கள் உள்ளன. அதில் மூன்று விதானங்களும் அதில் மூன்று ஜன்னல்களும் உள்ளன. தேவாலய கட்டடத்திற்கு மூன்று கதவுகளும், மூன்று பெரிய சிலுவைகளும், மூன்று சிறிய சிலுவைகளும், மூன்று ஜப மேடைகளும், மூன்று மாடிப்படி வரிசைகளும், மூன்று தூண்களும், மூன்று விளக்குகளும், மூன்று கன்னி மேரி சிலைகளும் இருக்கின்றன. இதை கட்டிய ஜார்ஜ் பீன்ட் ஜோபர் எனும் கட்டடக் கலைஞர், அவரது குடும்பத்தில் மூன்றாவது சிற்பி. இந்த சர்ச் கட்டி முடிக்க 33 மாதம் , 33 வாரம், 33 நாட்களும் ஆனது.
1791 ம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் இரவு நேரம் ஓட்டலில் உரையாடிக் கொண்டிருந்த நண்பர்களிடையே ஒரு சவால் எழுந்தது. அதாவது, ஒரு புத்தம் புதிய வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தை மிக விரைவில் பிரபலமாகவும் வேண்டும் என்பதே சவால்! நாடக அரங்கத்தில் மேனேஜராக பணி புரிந்த டாலி என்பவர் பளிச் சென்று உருவாக்கிய புதிய வார்த்தைதான் தமிழில் 'புதிர்'களுக்கு பயன்படுத்தும் 'குவிஸ்' (Quiz). அது மட்டுமல்ல, அன்றிரவு பூராவும் கண் விழித்து நகரெங்கும் 'Quiz' என்று சாக்பீஸ் கொண்டு எழுதி வைத்தார் அவர். மறுநாள் முழுவதும் மக்கள் 'அதென்ன குவிஸ் என்று எங்கு பார்த்தாலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது?' என்று ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அந்த வார்த்தை ஒரே இரவில் பிரபலமானது.
1793 ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் அரசி மேரி அன்டாயனெட்டுக்காக உயிரையே துச்சமாக மதித்து ஒரு வழக்கில் வாதாடி வென்றார் கிளாட் சொவியூ லாகார்ட் (1756-1841) என்ற வழக்கறிஞர். இதற்காக அரசியிடம் ஏகப்பட்ட தொகையை வக்கீல் ஃபிஸாக பெற்றிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்! அது தான் இல்லை, அவர் பெற்ற சன்மானம் என்ன தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது. அரசியின் ஒரு 'கத்தை' தலைமுடி.
1964 ம் ஆண்டு "பெஸ்ட் மேன்" (Best man) என்று ஒரு படம் ஹாலிவுட்டில் தயாரித்தார்கள். அதில் ஒரு ஜனாதிபதி ரோல் உண்டு. அதற்காக பல நடிகர்களை டெஸ்ட் எடுத்தார்கள். அசிஸ்டெண்ட் ஒரு புதிய நடிகரை அழைத்து வர, தயாரிப்பாளர் "என்னையா இது..? ஜனாதிபதி ரோலுக்கான முகவெட்டு, கம்பீரம் எதுவும் இல்லாம இது மாதிரி ஆளுதான் அகப்பட்டாரா...?" என்று எரிந்து விழுந்தார். நிராகரிக்கப்பட்ட அந்த நடிகர் தான் பிற்பாடு நிஜமாகவே அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அவர் தான் 'ரொனால்ட் ரீகன்'.
மனிதகுலம் கடந்து வந்த விநோத பாதைகளையும், தலைசிறந்த ஆச்சரியங்களையும் அறிந்துகொள்வதன் மூலம் உலகளாவிய பொது அறிவையும், வரலாற்றுப் பார்வையும் மேம்படுத்தி உங்கள் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.