யுனெஸ்கோ வியந்த ராஜஸ்தானின் கல்பேலியா: ஒரு துளி விஷமும், நளினம் பொங்கும் நடனமும்!

UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியா
UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியாAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாரம்பரிய கல்பேலியா (Kalbelia) என்பது ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் வாழும் நாடோடி பழங்குடியினரால் நிகழ்த்தப்படும் பாரம்பரியமிக்க இசை மற்றும் நடனக் கலையாகும்.

பாம்பாட்டிகளாக இருந்த இச்சமூகத்தின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் இந்தக் கலை 2010 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் "அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியலில்" (Intangible Cultural Heritage) அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ராஜஸ்தானின் உணர்வுபூர்வமான மற்றும் ஆன்மீக செழுமைமிக்க நாட்டுப்புற மரபுகளில் ஒன்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாலைவன வாழ்க்கையில் வேரூன்றிய இந்த உயிரோட்டமான கலை வடிவம், தாள லய அசைவுகள், மயக்கும் இசை மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கதை சொல்லும் கலையை ஒன்றிணைத்து, பழமையும் உயிரோட்டமும் ஒருங்கே கொண்ட ஒரு கலையை வழங்குகிறது.

கல்பேலியா இசையின் சிறப்பம்சங்கள்

இசைக்கருவிகள்:

ஆண்கள் பாரம்பரிய காற்று மற்றும் தாள வாத்தியங்களை இசைக்கின்றனர். முக்கியமாக பாம்புகளை வசீகரிக்கப் பயன்படும் புங்கி (Pungi) மற்றும் கஞ்சரி(Khanjari), டுஃப்லி (Duf), மோர்ச்சாங், தோலக் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

பாடல்கள்:

கல்பெலியா பாடல்கள் அனைத்தும் புராணக் கதைகள் மற்றும் வாய்வழி மரபுகளின் அடிப்படையில் பாடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வாய்மொழி மரபைக் கொண்டவை. இசை நிகழ்ச்சிகளின் போதே கலைஞர்கள் மேடையில் உடனடியாக வரிகளை உருவாக்கிப் (spontaneous) பாடும் கவிதைத்திறன் கொண்டவர்கள். இப்படி தன்னிச்சையாக வரிகளை இயற்றிப் பாடப்படும் பாடல்கள் மற்றும் இசை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வாய் வழியாகவே கடத்தப்படுகின்றன.

இச்சமூகத்தினர் பாம்புகளைத் தங்களது குடும்பத்தின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். எனவே இவர்களின் இசையும் நடனமும் நாகப்பாம்பின் நெளிவுசுளிவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியா
UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியா

உடைகள்:

பெண்கள் அணியும் பிரகாசமான கருப்பு நிறத்திலான லெஹெங்கா, அங்க்ராகா (Angrakha) ஆடைகளில் வெள்ளி இழைகள் மற்றும் கண்ணாடி மணிகளால் செய்யப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படும். மேல் உடல் துணியை 'அன்ராகி' என்றும், தலையில் அணிந்திருக்கும் துணியின் ஒரு பகுதி 'ஓதானி' என்றும் அழைக்கப்படுகிறது.

அதேபோல் கீழ் உடல் துணி 'லங்கா' என்று அழைக்கப் படுகிறது. இந்தத் துணிகள் அனைத்தும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் கலக்கப்பட்டு, பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கருப்பு ஆடை பாலைவன இரவைக் குறிக்கும் அதேவேளையில், அதன் வண்ணமயமான அலங்காரங்கள் கொண்டாட்டத்தையும் வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.

பாம்பின் அசைவுகளை ஒத்தபடி பெண்கள் உடலை நெளித்து சுழன்று வேகமாக ஆடும் முறை இக்கலையின் தனிச் சிறப்பாகும். இந்த நடனம் பெரும்பாலும் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களின் பொழுது மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் பக்தியை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்த்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
புதிய வீடு, வாகனங்களில் 'நஸர்பட்டு' வைப்பதன் ரகசியம் என்ன?
UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியா

முக்கியமாக ஹோலியின் பொழுது சிறப்பு நடனங்கள் ஆடப்படுகின்றன. இன்று இந்தியாவில் கல்பேலியா நடனம் ஒரு பிராந்திய கலை வடிவமாக மட்டுமில்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது.

கல்பேலியா நடனம் ஆழ்ந்த பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், அது நவீன மேடைகளுக்கும் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. இது இன்று அதன் நிகழ்ச்சிகள் அசைவுகளை பாதுகாத்துக்கொண்டே பெரிய நிகழ்வுகளுக்கு ஏற்ற நடன அமைப்புகளை உள்ளடக்கி உள்ளன.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் வியக்கவைக்கும் சாதனைகள்!
UNESCO intangible heritage India - பாரம்பரிய கல்பேலியா

ஒரு பழங்குடி சமூகத்தின் விளிம்புநிலை வாழ்க்கை எவ்வாறு உலகளாவிய அங்கீகாரம் பெற்றது என்பதை அறிவதன் மூலம், கலைகளின் வழியே தடைகளை வெல்லும் மனித ஆளுமையையும், இந்திய நாட்டுப்புற மரபுகளின் அசைக்க முடியாத ஆன்மீக பலத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com