
சில வருடங்களுக்கு முன், நாங்கள், வாடிகன் சென்றதும், அங்கே பிரபல சிஸ்டைன் சேபல் (Sistine Chapel) க்கு சென்றதும் மறக்க முடியாத நினைவுகளாக மீண்டும் மேலோங்கின. அந்த Chapel ல்தான் College of Cardinals என்னும் கத்தோலிக்கச் சபையின் உயர் குருமார்கள் ஒன்றுகூடி புது போப் ஆண்டவர் அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த குருமார்கள்.
போப் மறைந்த 15 அல்லது 20 நாட்களுக்குப் பிறகு, பிரம்மாண்டமான மைக்கேல் ஆஞ்சலோவின் சித்திரம் வரையப்பட்டிருக்கும் சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel) ன் கூரை (ceiling ) கீழே இவர்கள் அனைவரும் கூடுவார்கள்.
90 முதல் 120 குருமார்கள்வரை இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் வாக்குச்சீட்டு தரப்படும். ஃபோன், பத்திரிகை டிவி போன்ற வெளி உலகத்தொடர்பே இல்லாமல், பல சுற்றுக்கள் வாக்கெடுப்பு நடத்தி, புது போப் அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். காலை மாலை என்று வாக்கெடுப்பு தொடர்ந்து நடக்கும். (1922 ம் ஆண்டு, ஐந்து நாட்கள் வாக்கெடுப்பு நடந்திருக்கிறது).
இதில் முக்கிய அம்சம் சேப்பலில் இருக்கும் 60 அடி உயர சிம்னி. முடிவு தெரிந்துகொள்ள அந்த சிம்னியைப் பார்த்தபடி பல கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் காத்திருப்பார்கள். (பல சேனல்கள்)
ஏன் தெரியுமா?
ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பு முடிந்ததும் வாக்குச் சீட்டுக்கள் எரிக்கப்பட்டு விடும். அந்தப் புகை அந்த சிம்னி வழியே வெளிவரும்.
கரும் புகையாக வந்தால் இன்னும் போப் தேர்வு முடியவில்லை என்றும், வெண்புகையாக வரும்போது போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றும் செய்தி அறிவிக்கப்படுகிறது. (அதற்கேற்றபடி கெமிகல்கள் உபயோகப்படுத்தப்படும்)
மூன்றுக்கு இரண்டு மெஜாரிட்டி பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரிடம் சம்மதம் கேட்கப்படும். அவர் சம்மதித்ததும், அவருக்கான உடைகள் அளிக்கப்படும்.
உலகிலேயே மிகப்பெரிய சர்ச் செயின்ட் பீட்டர் பசிலிகா (St. Peter's Basilica) இந்த சர்ச், சிஸ்டைன் சேப்பல் இரண்டுமே வாடிகன் அரண்மனையான அப்பஸ்டலிக் அரண்மனை (Apostolic Palace) வளாகத்துக்குள்ளேயே அருகருகே இருக்கின்றன.
தலைமை குரு பசிலிக்காவின் பால்கனிக்கு வந்து போப் ஆண்டவர் தேர்வானதை அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு அறிவிப்பார். பின்னர் புதிய போப் ஆண்டவர் அவர்கள், அந்த பால்கனிக்கு வந்து காட்சியளித்து மக்களை ஆசீர்வதிப்பார்.
மறைந்த போப் உடல், பாரம்பரிய முறைப்படி, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படும்.
பசிலிக்கா உள்ளே ஆல்டர் என்னும் வெண்கல விதானம் கொண்ட மிக உயர்ந்த பீடம் இருக்கிறது. அங்கே நின்றுதான் போப் முக்கிய உரைகள் நிகழ்த்துவதாக சொன்னார்கள்.
வாடிகன் அரண்மனை வளாகம் மிகப்பெரியது. போப் ஆண்டவரின் அலுவலகம் மற்றும் இருப்பிடம் இதற்குள்தான். மேலே, போப் ஆண்டவர் தன் இருப்பிடத்தில், அமர்ந்து வெளியே பார்க்கும் ஜன்னல் ஒன்றை சுட்டிக் காட்டினார்கள். சில நாட்கள் அங்கே அவரைப் பார்க்க முடியும் என்றார்கள். நாங்கள் போன அன்று பார்க்க முடியவில்லை.
இதில் வாடிகன் நூலகம், மியூசியம், கத்தோலிக் சர்ச்சின் அலுவலகங்கள் போன்றவை இருக்கின்றன. மியூசியத்தில் ரோம் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் சித்திரங்களும், சிற்பிகள் வடித்த வெண்கல, பளிங்குச் சிலைகளும் அந்தக் காலத்தை பிரதிபலிக்கும் அற்புதங்கள்.
குறிப்பாக, மைகேல் ஏஞ்சலோ வடித்திருக்கும் ஏசுநாதரைத் தன் மடியில் தாங்கிக்கொண்டிருக்கும் மேரி மாதாவின் பிரம்மாண்ட சிற்பம், மிகப்பிரபலம்.
சேப்பலிலும், சர்ச்சிலும் பக்கவாட்டு சுவர்கள், கூரை எல்லா இடங்களிலும் ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள். அனேகமாக மைக்கேல் ஏஞ்சலோ வரைந்தவை, வண்ணங்களில் உயிரோவியமாய் காட்சி தருகின்றன.
அதிலும் கூரை ஒவியங்கள் அண்ணாந்து பார்த்து வியக்கவைப்பவை. எல்லாமே பல நூற்றாண்டுகள் கடந்தவை.