பிரிட்டிஷ் முகலாயக் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும் விக்டோரியா நினைவு மண்டபம்!

விக்டோரியா நினைவு மண்டபம்
விக்டோரியா நினைவு மண்டபம்
Published on

பிரிட்டிஷ் பாரம்பரியக் கட்டடக் கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பல பழைமையான கட்டடங்களைக் காணலாம். அவற்றுள் ஒன்றுதான் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் அமைந்துள்ள விக்டோரியா நினைவு மண்டபம். கொல்கத்தா நகரின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கும் விக்டோரியா நினைவு மண்டபம், பிரிட்டிஷ் கட்டடக் கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பிரிட்டிஷ் ராணி விக்டோரியா 1901ம் ஆண்டு, ஜனவரி மாதம் இறந்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 6ம் தேதி கொல்கத்தா டவுன் ஹாலில் ஒரு பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் கர்சன், ராணி விக்டோரியாவுக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். அவரது ஆலோசனையின் பேரில், ஆங்கிலேயரின் நட்பை விரும்பிய இந்தியாவின் பல்வேறு இளவரசர்கள் இந்தத் திட்டத்துக்கு ஏராளமாக நிதி உதவி அளித்தனர். இந்த பிரம்மாண்டமான நினைவிடத்தை கட்டுவதற்கு பிரிட்டிஷ் அரசு எந்த பணம் உதவியும் செலவிடவில்லை.

விக்டோரியா நினைவு மண்டபம் உள்தோற்றம்
விக்டோரியா நினைவு மண்டபம் உள்தோற்றம்

அக்காலத்திலேயே இந்த நினைவுச் சின்னத்தின் மொத்த கட்டுமானச் செலவு ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஆகும். 1906ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி அப்போதைய வேல்ஸ் இளவரசராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்த நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து இந்த பாரம்பரிய நினைவுச் சின்னம் 1921ம் ஆண்டு முறையாக பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த விக்டோரியா மகாராணி நினைவிடத்தின் கட்டடக்கலை இந்தோ - சராசெனிக் பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இக்கட்டடத்தில் முகலாய பாணியையும் காணலாம். இந்தக் கட்டடம் உண்மையிலேயே பிரிட்டிஷ் மற்றும் முகலாய கட்டடக் கலையின் கலவையாகவே காட்சி அளிக்கிறது.

விக்டோரியா நினைவு மண்டபம் வெளித்தோற்றம்
விக்டோரியா நினைவு மண்டபம் வெளித்தோற்றம்

விக்டோரியா நினைவு மண்டபம் 64 ஏக்கர் நிலப்பரப்பளவில் எழில் கொஞ்சும் தோட்டக்கலையோடு அமைந்துள்ளது. இந்த நினைவு மண்டபத்தினுள் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சிலரின் சிலைகளும் காணப்படுகின்றன. மண்டபத்தின் முன்பு விக்டோரியா மகாராணியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா நினைவு மண்டபம் உள்தோற்றம்
விக்டோரியா நினைவு மண்டபம் உள்தோற்றம்

ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா மகாராணியின் நினைவிடம், ஆங்கிலேயர் காலத்தின் பல சுவாரஸ்யமான சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் அரச பிரிவில் பிரிட்டனின் ராணிகள் மற்றும் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய்களின் ஓவியங்கள் மற்றும் சிலைகள் நிறைய காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதியில் ரவீந்தர்நாத் தாகூர் மற்றும் அன்னை தெரசா ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சில அரங்குகள், பழங்கால கொல்கத்தாவின் பழைய ஓவியங்களையும் காளி தேவியையும் காட்சிப்படுத்துகின்றன. தேசிய தலைவர்களின் ஓவியங்களும், வாட்கள், துப்பாக்கிகள் போன்ற பழைய ஆயுதங்களும் நினைவு மண்டபத்தில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. பிரிட்டிஷ் முகலாயக் கட்டடக் கலைக்கு மாபெரும் சான்றாகவும், இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகவும் மகாராணி விக்டோரியா நினைவிடம் விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com