
விடுகதை தெரியும், பழமொழி தெரியும்... விடுமொழி என்றால் என்ன தெரியுமா..? ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து, காலப் போக்கில் பழமொழியாய் மாறிப் போனவைகளே விடுமொழிகள் எனப்படுகின்றன.
விடுமொழி 1:
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்"
இத்தொடர், உண்மையில், ஒரு காலத்தில், ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?’ என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்கு விடை ‘காளான்’ ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை, பழமொழியாக மாறிவிட்டது.
விடுமொழி 2:
"எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கா..?"
இத்தொடர், உண்மையில், ஒரு காலத்தில், ‘எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு..?அவன் யார்?’ என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்கு விடை ‘அணில்’ ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை, பழமொழியாக மாறிவிட்டது.
விளக்கம்: அணில் உணவைக் கையில் வைத்திருப்பது ஒரு பிச்சைக்காரன் தன் உணவை இரு கைகளிலும் ஏந்தி இருப்பதைப் போலத்தானே தோன்றுகிறது. அதனால்தான் 'எடுக்கிறது பிச்சை' என்ற தொடர் அணிலைக் குறிக்க வந்தது. அது மட்டுமின்றி அணில் உணவுக்காக மட்டும் தான் மரத்தில் இருந்து கீழே வரும். அது கிடைத்துவிட்டால் போதும், விடுவிடு என்று தான் வாழும் மரத்தின் உச்சாணிக் கொம்புக்கே சென்று அமர்ந்துகொள்ளும். ஏறுகிறது பல்லாக்கு என்ற தொடர் இதையே குறிக்கிறது.
விடுமொழி 3:
“பந்திக்கு முந்து படைக்கு பிந்து”
அதன் விளக்கமாக, பந்தியில் சென்று சீக்கரம் சாப்பிட வேண்டும். படை என்றால் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று விளையாட்டாக ஒரு விளக்கத்தைச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையான பொருள் அதுவல்ல...
“பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்”... அனைவரும் நினைப்பது போன்று இது ஒரு பழமொழியன்று. இது ஓர் ஒரு விடுகதை..
பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும். அது என்ன? எனும் விடுகதையே நாளடைவில் பழமொழியாக மாறிவிட்டது.
அதற்கான விடை கட்டை விரல் அல்லது பெருவிரல்.
பந்தியில் கட்டை விரல் முந்திச் சென்று தேவையானதை எடுத்து வாய்க்குள் உணவாகத் தள்ளுகின்றது. அதனால் பந்திக்கு முந்தும் என்றும், படையில் முதன்மைான போர்க்கருவி வில்லும் அம்பும் ஆகும். வில்லில் கட்டை விரலானது பின்புறமாக நாணை (வில்லின் கயிற்றை) இழுக்க உதவும். எவ்வளவு பின்னால் நாணானது இழுக்கப்படுகின்றதோ அவ்வளவு தொலைவு முன்னால் அம்பானது சென்று எதிராளியைத் தாக்குகின்றது. ஆகையால் “படைக்குப் பிந்தும் ”என்று சொல்லப்படுகின்றது.
இதுபோன்ற விடுமொழிகள் உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்களேன் நண்பர்களே!