
ஜப்பானிய நாட்டுப்புற கதைகளில் மிகவும் பிரபலமானது தான் ஜோரோகோமோ (Jorogumo). இது ஜப்பானில் இருக்கும் மக்களால் நம்பப்படும் ஸ்பைடர் பேய் ஆகும். இது பொதுவாக காட்டுக்கு நடுவில், குகைகளுக்குள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும். 'ஜோரோ' (joro) என்றால் 'பெண்', 'குமோ' (kumo) என்றால் 'சிலந்தி' ஆகும்.
ஜப்பானில் Golden Silk Orb Weavers என்ற சிலந்தி இனம் இருக்கிறது. அந்த சிலந்தி மற்ற சிலந்திகளை ஒப்பிடுகையில் அளவில் பெரிதாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். மேலும் இது அதிக வருடங்கள் வாழும். அங்கிருந்த மக்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், இந்த சிலந்திக்கு 400 வயது ஆகிவிட்டால் அவற்றிற்கு சக்திகள் கிடைக்கும் என்று நம்பப்பட்டிருக்கிறது.
400 வருடம் ஆன பிறகு இந்த சிலந்திகளால் அதனுடைய உருவத்தை அழகான பெண்ணின் உருவமாக மாற்றிக் கொள்ள முடியுமாம். இந்த பெண்ணாக மாறிய சிலந்திகள் ஜப்பானிய பாரம்பரிய உடையை அணிந்துக் கொண்டு 'பிவா' என்னும் இசைக்கருவியை கையில் வைத்திருக்குமாம்.
ஆண்கள் யாராவது இதன் அழகைப் பார்த்துவிட்டு அதனுடைய இசையின் திறமையை பார்த்துவிட்டு அருகில் சென்றால் அவர்களுக்கு விஷத்தை செலுத்தி அதனுடைய சிலந்தி வலையில் சுற்றிவிடுமாம். இந்த சிலந்தி பிண்ணும் வலை மிகவும் உறுதியாக இருக்குமாம். இதனிடம் மாட்டியவர்கள் அதை எவ்வளவு தான் பிய்த்துக் கொண்டு வர முயற்சித்தாலும் முடியாதாம்.
அதனுடைய சிலந்தி வலையில் மாட்டியவர்களை இந்த ஜோரோகோமோ கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். ஒரு சிலந்தி அதனுடைய இரையை எப்படி அதனுடைய வலையில் வைத்து ரொம்ப நாளாக சாப்பிடுமோ அதேப்போல ஜோரோகோமோ செய்யுமாம். மேலும் இந்த ஜோரோகோமோ நெருப்பை கக்கக்கூடிய குட்டி சிலந்திகளை கன்ட்ரோல் பண்ணுமாம்.
ஒருவேளை யாருக்காவது இந்த ஜோரோகோமோ பற்றிய உண்மை தெரிந்துவிட்டால், நெருப்பு கக்கும் ஸ்பைடர்களை இரவோடு இரவாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வீட்டையே எரித்துவிடுமாம். மற்ற நாட்டுப்புற கதைகளில் வரும் கேரக்டர்களை ஒப்பிடுகையில் இந்த ஜோரோகோமோ அப்படி ஒன்றும் பயங்கரமான கேரக்டர் கிடையாது.
ஒருவேளை ஒரு ஆண் பெண்ணை பார்த்து சுலபமாக மயங்காதவனாக இருந்தால், அவன் ஜோரோகோமோவை அழித்துவிடலாம். சாமுராயிடம் ஜோரோகோமா வந்ததாகவும் அவன் இதை வெட்டிக் கொன்றதாகவும் நிறைய கதைகள் இருக்கின்றன.
எப்போதுமே அழகான பெண் இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பதுப் போலவே கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனித மனது அதை கேட்குமா? ஆபத்தை தேடித் தான் அதுவும் போகிறது.