கலைகளை வளர்க்கிறோம். நல்ல ரசிகர்களை உருவாக்குகிறோமா?

கலைகளை வளர்க்கிறோம். நல்ல ரசிகர்களை உருவாக்குகிறோமா?

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

“பத்ம விபூஷன் லால்குடி ஜெயராமன் ஒரு முறை தன் கச்சேரியை முடித்தபிறகு, அரங்கினை நிரப்பியிருந்த மூத்த ரசிகர்களிடையே பேசும்போது, 'நான் எனது அடுத்த தலைமுறையை இசைக்கு அறிமுகப்படுத்தி அவர்களை இசைக்கலைஞர்களாக உருவாக்கிவிட்டேன். உங்களுடைய அடுத்த தலைமுறையைக் கச்சேரிகளுக்கு அழைத்து வந்து அவர்களிடையே ரசிப்புத் திறனை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்,' என்று கூறினாராம். 

நிறைய இசைப் பள்ளிகள், நிறைய குருமார்கள் எத்தனையோ குழந்தைகளுக்குச் சங்கீதத்தைக் கற்றுக்கொடுத்து அவர்களைச் சங்கீதக் கலைஞர்களாகப் பரிமளிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், எத்தனை ரசிகர்களை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்? 

ஒரு ஆசிரியரிடம்  வருடத்திற்கு 25 குழந்தைகள் பாட்டு கற்றுக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு 30 வருடங்களுக்கு அவர் தொடர்ந்து கற்றுத் தரும்போது, அந்த கூட்டத்திலிருந்து ஒரு சிலரே  கச்சேரி செய்யும் திறமை பெறுகிறார்கள். ஆனால், அந்த ஒவ்வொரு மாணவரிடையே நாம் ரசிப்புத் தன்மையை வளர்க்கும் போது, அத்தனை பேரும் ரசிகர்களாக உருமாறுகிறார்கள்.  

நான்கு அல்லது ஐந்து வயது தொடங்கி பாட்டும் நடனமும் கற்றுக்கொள்ள வருபவர்கள் தன்னுடைய உயர்கல்விப் படிப்பை மேற்கொள்ளும் போது தாங்கள் கற்றுக் கொள்ளும் கலையை விட்டு, விலகுவது ஏன்? கலை மீதான அவர்களின் தாகத்தை நாம் முழுவதுமாகத் தூண்டவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம் அல்லவா?

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் 'த்வனி' என்று நாங்கள் தொடங்கி இருக்கும் அமைப்பில் இசைப் பள்ளியும் உண்டு. வெகு சிலரே இங்கு சங்கீதம் கற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால், அத்தனை பேருக்கும் சங்கீதத்தை மகிழ்ச்சியோடு கற்றுக்கொள்ள நாங்கள் வழி காட்டுகிறோம்.  எங்கள் மாணவர்களுக்காக நாங்கள் இசைப் போட்டிகள் நடத்தும்போது,  குழந்தைகள் முன்னிலையில் நடுவர்கள் முதலில் கச்சேரி வழங்குவர். அந்தக் கச்சேரியின் அடிப்படையில் சில கேள்விகள் குழந்தைகளிடம் கேட்கப்படும்.  அதேபோல், ஆறு முதல் எட்டு வயது வரை பிரிவில் 25 குழந்தைகள் இருந்தால், அந்த 25 குழந்தைகளும் பாட வேண்டும். அதை மற்ற குழந்தைகள் அனைவரும் கேட்க வேண்டும். பல நேரங்களில் தன் குழந்தையின் வாய்ப்பு முடிந்ததும் தன் வேலை முடிந்துவிட்டது என்று கிளம்பும் எத்தனையோ பெற்றோர்களை நாம் காண்கிறோம். அடுத்தவர்களைக் கவனிக்க, அடுத்தவர்கள் பாடுவதை, ஆடுவதை ரசிக்க, அடுத்தவர் திறமையை மதிக்கத் தெரிய வேண்டும். இந்த எண்ணம் அந்தக் குழந்தைகளுக்கும் இருப்பதில்லை; பெற்றோர்களுக்கும் இருப்பதில்லை. எங்கள் நிறுவனம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் பெற்றோர்களும் குழந்தைகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.

பரதநாட்டியத்தைப் பெரும்பாலும் பெண் குழந்தைகள்தான் கற்றுக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் ஆண், பெண் பாகுபாடுதானே?  நாங்கள் நடத்தும் நடன வகுப்பிற்கு மாணவியின் தந்தை மற்றும் சகோதரரை அழைத்து வரச் செய்து, தன் மகளோ அல்லது சகோதரியோ என்ன கற்றுக் கொள்கிறாள் என்பதை தெரிந்துகொள்ளச் செய்கிறோம். அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்க முயற்சிக்கிறோம்.

அதே போல், எதைச் செய்தாலும் நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் மேடைப் பின்னணியும் நேர்த்தியாக இருக்கும். எங்கள் நிறுவனத்தின் பேனரை அரங்கில் காணமுடியாது. 10, 12 வருடங்களுக்கு முன்னாலேயே நாங்கள் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விட்டோம். கலை வளர்ப்பதில் சமுதாயப் பொறுப்பும் இருக்கிறது என்பது எங்களுடைய எண்ணம்.

'த்வனி'யில் நாங்கள் ஏற்பாடு செய்யும் கச்சேரிகளில் சங்கீதம் சார்ந்த நல்ல விஷயங்களை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, பகிர்ந்து கொள்ளும் திறமை மிக்கக் கலைஞர்களை அழைத்து பங்கேற்கச் செய்கிறோம். இப்பொழுது youtube இல் நீங்கள் பார்க்கும் எந்த விஷயங்களுக்கும் கட்டுப்பாடு கிடையாது. எது நல்ல சங்கீதம்?  தரமான நிகழ்ச்சி என்ன? என்பதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. தரமான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து எங்களுடைய உறுப்பினர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னால் அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு விளக்கம் தரும் வகையில் நிகழ்ச்சி வழங்குவோம். உதாரணமாக, Dr. பத்மா சுப்ரமணியம் அவர்களின் மாணவி கவிதா திருமலை நடன நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார் என்றால்,  அதற்கு முன்னால், அந்த நடன வழியின் சிறப்பம்சம் என்ன? அந்த நடன நிகழ்ச்சியில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?  எதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு விளக்க உரை நிகழ்த்துவார்.

லால்குடி பாணியைக் கற்றுத் தேர்ந்த ஒருவர் கச்சேரி செய்யும் போது, அந்த பாணியின் சிறப்பை உணர்ந்து ரசிக்கும் வகையில் உரை நிகழ்த்தி அதன் பிறகு கச்சேரி செய்வார்கள். இவ்வாறு, குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்க்கும் ரசிப்புத் தன்மையை வளர்க்கும்போது,  வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

 கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டு இருந்தபோது, எங்கள் 'த்வனி' அமைப்பு, கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில், சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களை நிகழ்ச்சிகள் வழங்கச் செய்தோம். கேரளத்தின்   கலாமண்டலம் குழுவினர் 'கதக்களி' நடனத்தில், 'துரியோதனன் வதம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியை வழங்கினார்கள். சென்னையிலிருந்து நடனக்கலைஞர்கள் வீரஜா மற்றும் ஷ்யாம்ஜித் இருவரும் திருச்சூர் சென்று கலைஞர்களுக்கு ஒளிப்பதிவில் உதவி செய்தனர்.

அதேபோல் 'கர்நாடிக் குவார்டெட்' கலைஞர்கள் அவரவர் இல்லங்களில் இருந்தபடி 'ரைஸ்' என்ற ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்து அனுப்பினார்கள்.

தரமான இந்த நிகழ்ச்சிகளை 'த்வனி' வலைத்தளம் மூலம் எங்கள் உறுப்பினர்களிடைய பகிர்ந்துகொண்டோம். நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் நாங்கள் பிரத்தியேகக் கவனம் செலுத்தி வருகிறோம். தரமான நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் ரசிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறோம்.

நம் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கைச் சூழலில் கச்சேரிகளையும் நடன நிகழ்ச்சிகளையும் கலைஞர்கள் வழங்க இருக்கிறார்கள். இந்தியாவில் மும்பையின் First Edition Arts என்ற ஒரு அமைப்பு நடத்தும் இந்த நிழ்ச்சியில் 'த்வனி' தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது.

இசைக் கலைஞர் ரஞ்சனி சிவகுமார் 'தம்புரா ஒரு வாத்தியம்' என்ற தலைப்பில் ஒரு விளக்க உரையை நிகழ்த்தினார். பாரதி ராமசுப்பன் கலந்து கொண்ட, தஞ்சை நால்வர் இயற்றியவை குறித்த கலந்துரையாடல்,  ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் ‘வீணை தனம்மாள் பாணியைப் பற்றி…’  போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வழங்குகிறோம். கலைஞர்களிடம் கூட, பொருளாதாரத் தேவை உள்ள பக்கவாத்தியக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வகையில் கலைஞர்களுக்கு உதவி செய்வதும் சாத்தியமாகிறது.

 இசைக் கலைஞர்கள் நிஷா ராஜகோபால் மற்றும் ரஞ்சனி சிவகுமார் இருவரும் இந்தியாவில் இருந்தபடி தொழில்நுட்ப உதவியோடு எங்கள் இசைப் பள்ளியில்
இசை வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். எங்கள் ஊரில் உள்ள நடனக் கலைஞர்களுடன் இணைந்தும் நாங்கள் நல்ல நடன நிகழ்ச்சிகள் பல வழங்குகிறோம்.

சங்கீதம் கற்றுத் தர வேண்டும். சங்கீதத்தை வளர்க்க வேண்டும். அதே நேரத்தில், மக்களிடையே நல்ல ரசனையையும் வளர்க்க வேண்டும்.”

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் 'த்வனி' அமைப்பின் சார்பாக நம்முடன் இதுவரை பேசியவர், அதன் இயக்குனர்களுள் ஒருவரான சங்கர் ராமச்சந்திரன். இவர் வேறு யாருமல்ல. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேரன். நுணுக்கமான விஷயங்களில் கவனம், எதைச் செய்தாலும் ஒரு நேர்த்தி! – கல்கியின் எழுத்துகளில் நாம் உணர்ந்ததை அவருடைய பேரனும் வெளிப்படுத்துவதில் வியப்பென்ன!!

உணர்வு பூர்வமாக சிந்திக்கும் சங்கர் ராமச்சந்திரன் அவர்களிடம் தற்காலத்திலும் இசைத் துறையில் காணப்படும் பாகுபாடு குறித்து… குறிப்பாக, gender bias குறித்து கருத்து கேட்டோம்...

"சமுதாயத்தில் வெளிப்படும் பெரும்பாலான பாகுபாடுகள், உதாரணமாக, ஆண், பெண் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு, தோற்ற வெளிப்பாடு (appearance bias) குறித்த பாகுபாடு இப்படி அனைத்தும், இசைத் துறையிலும் பிரதிபலிக்கிறது என்பது உண்மையே!

இந்த பாகுபாடு குறித்து அலசுவதற்கு முன்பாகவோ, அல்லது அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் நாம் இறங்குவதற்கு முன்பாகவோ, முதலில் ‘ஆமாம்! இத்தகைய பாகுபாடு இருக்கிறது’ என்பதை எவ்விதச் சாக்குப்போக்கும் சொல்லாமல், உணர்ந்து, நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். 

அப்படி முழு மனதுடன் ஒப்பு கொள்ளாவிட்டால் பிரச்னைக்கான தீர்வில் எந்த முன்னேற்றமும் இருக்காது." 

எதிர்காலத்திலாவது இத்தகைய தவறுகள் திருத்தப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் அவரிடமிருந்து விடை பெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com