
மொழி என்பது பிறரோடு உரையாடுவதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் ஒருவித ஆயுதம். அந்த ஆயுத பிரயோகம் நாம் பிறந்த பின்பு நம் பெற்றோர்களால் நமக்கு கற்றுத் தரப்படுகிறது. தாய்மொழியை வைத்து நம்மைப் பற்றியும் நம் சுற்றுப்புறத்தைப் பற்றியும் தெரிந்துகொள்கிறோம்.
நம் விருப்பத்தின் பெயரில் பல மொழிகளைக் கற்பதால் நமக்கு என்ன பயன்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது பல நன்மைகளைக் கொண்ட ஒரு மதிப்புமிக்க பொக்கிஷமாகும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதால் தகவல் தொடர்பு (Communication), கலாச்சார புரிதல் (Cultural understanding) மற்றும் ஒரு மனிதனின் அறிவாற்றல் வளர்ச்சி, ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன. இந்த பரந்த உலகில் பன்மொழி பேசுபவர்கள், பல்வேறு பின்னணியில் உள்ளவர்களுடன் சுலபமாகவும், சாதாரணமாகவும் தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம், நம்மை பற்றியோ அல்லது பிறரின் கலாச்சாரங்களை பற்றியோ உலகெங்கும் பரப்ப முடியும். இதனால் மனிதர்கள்தான் பிறந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும்போது, அவர்களால் இவ்வுலகை எந்த ஒரு வித்தியாசமுமின்றி பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்.
என்னென்ன நன்மைகள் இதனால்?
பல மொழிகளைக் கற்றுக்கொள்வதால் நாம் பெறப்போகும் தனித்துவமான நன்மைகளில் ஒன்று அறிவாற்றல் மேம்பாடு (Cognitive enhancement) . பல மொழி பேசும் நபர்கள், பிரச்னையைத் தீர்க்கும் திறன், அதிகரித்த நினைவாற்றல் மற்றும் பல்திறன் (Multi tasking) கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மொழிகளைக் கற்றுக்கொள்வது டிமென்ஷியாவை (Dementia) தடுத்து, எந்த வயதிலும் நம் ஞாபகச் சக்தி குறையாமல் தக்க வைக்க உதவுகிறது. தொழில் துறையில் கால் பதிக்க விரும்புவர்கள் பல மொழிகளை அறிந்திருப்பது தங்களின் தொழில் வாய்ப்புகளைக் கணிசமாக உயர்த்தி அதிக லாபம் பெறவும் உதவுகிறது. இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் சர்வதேச வணிகம், சுற்றுலா மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் பன்மொழி திறன் அதிகம் தேவைப்படுகிறது. காரணம், உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க மற்றும் தொழிலை விரிவுபடுத்த பன்மொழி தெரிந்திருக்கும் நபர்கள் இன்று அனைவராலும் தேடப்பட்டு வருகின்றனர்.
வெவ்வேறு கலாச்சாரங்கள் பற்றிய சிந்தனையை நாம் அவர்களின் மொழிகளை வைத்து கற்கும்போது, நம் வாழ்வில், தேவைப்படும் சூழ்நிலைகளில், வெவ்வேறு சிந்தனை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் நுண்ணறிவுகளை நாம் பெறுவோம். கூடுதலாக, பன்மொழி பேசுவது தன்னம்பிக்கை மற்றும் தகவமைப்பு திறனையும் (Adaptability) அதிகரிக்கிறது.
இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் இதேபோல் பல மொழிகளைக் கற்று தங்கள் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர். புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பெங்காலி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராக அறியப்பட்டார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையை உருவாக்கியுள்ளார். பிரபல எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.
ஆக, பல மொழிகளைக் கற்றுக்கொள்வது என்பது, ஒருவரின் அறிவாற்றல், கலாச்சாரம் மற்றும் தொழில் சம்பந்தமாக பல நன்மைகளை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த திறனாகும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வளப்படுத்தபடுகிறது. மனிதர்களிடம் உள்ள கலாச்சார இடைவெளிகள் குறைகிறது மற்றும் பல வாய்ப்புகளின் கதவைத் திறக்க உதவுகிறது.
மொழியானது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, நாம் எதற்காக வாழ்கிறோம் என்ற அர்த்தத்தை தெரிந்துகொள்ள உதவுகிறது.