தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பல மேற்கத்திய விஷயங்கள் நம்மிடம் பரவி வருகின்றன. அவற்றில் காதலர் தினம் எனப்படும் வேலன்டைன் தினமும் ஒன்று. இதில் வேடிக்கை என்னவென்றால் இது காதலர் தினமாக மட்டுமல்லாமல், அன்றைய தினம் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர்கூட தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு கொண்டாடும் தினமாகிவிட்டது. வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு எல்லாம் வேலன்ட்டைன் தின பரிசுகளை வழங்குகிறார்கள். சமீபத்தில் இந்த ஆண்டின் வேலன்ட்டைன் தினமும் இவ்வாறு கொண்டாடப்பட்டது.
வேலன்டைன் தினம் நமக்கு அவசியமற்றது என்பதையும் தாண்டி அந்தத் தினத்தை வெறுப்பவர்களும் உண்டு. வணிகர்கள் இந்த வெறுப்பையும் சமீபத்திய வேலன்டைன்ஸ் தினத்தில் பயன்படுத்தி காசு பார்த்திருக்கிறார்கள். வினோதமான சில நிகழ்வுகள் இன்று நடந்தேறியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைக் குறித்து இங்கு பார்ப்போம்.
ஜேம்ஸ் லீ கால்மைன் என்ற பெண்மணிக்கு சமீபத்தில்தான் அவரது காதல் முறிந்து இருந்தது. இந்த நிலையில் காதலர் தினம் கொண்டாடும் எண்ணம் அவருக்கு சிறிதும் இல்லை. நண்பர்களுக்கு பூங்கொத்து வழங்குவது, சாக்லேட் அளிப்பது போன்றவற்றையெல்லாம் அவர் வெறுத்தார். சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் காதலர் தின வெகுமதிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்குக் கோபம் வந்தது.
அவர் இந்த காதலர் தினத்துக்கு வித்தியாசமான ஒரு செயலில் ஈடுபட்டார். சான் அன்டோனியோ என்ற விலங்கியல் பூங்காவுக்கு தான் ஒரு கொழுத்த எலியை காதலர் தினத்தன்று பரிசாக அளிக்க முன்வந்தார். விலங்கியல் பூங்காவும் அதை ஏற்றுக்கொண்டது. அந்த எலிக்கு தனது முன்னாள் காதலனின் பெயரை வைத்தார்! ஏதோ ஒரு கொடிய விலங்கு அந்த எலியைத் தின்னும் காட்சியை மனதில் நினைத்து மகிழ்ந்தார். தனது காதலனுக்கு தண்டனை வழங்கிவிட்ட திருப்தி அவருக்கு ஏற்பட்டது.
ஆனால், இது போதாது என்று அந்த விலங்கியல் பூங்காவுக்கு ஒரு நன்கொடையை அளித்துவிட்டு, தான் வழங்கிய அந்த எலியை ஏதோ ஒரு விலங்கு உண்ணுவதை வீடியோ எடுத்து தனக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் பிறகு வேறு சிலரும் எலிகளை அந்த விலங்கியல் பூங்காவுக்கு நன்கொடையாக அளித்தனர். அவரவரும் தாங்கள் வெறுக்கும் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பெயரை அந்த எலிக்கு வைத்து அது உண்ணப்படுவதை ரசித்தனர். இதுபோன்று எலிகளை வளர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் விலங்கியல் பூங்காவுக்கு வெகுமதியாக அளிப்பதற்கு என்று சில வணிக நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
மார்க்கோ டி ஜேன் விண்டோ என்பவர் பிப்ரவரி 14 அன்று, 'எதிர் காதலர் தினம்’ (Anti Valentine’s Day) என்ற பெயரில் லண்டனில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை சில வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் வெகு விரைவில் விற்கப்பட்டு விடுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியின்போது சந்தித்த சிலர் காதலர்களாகி இருக்கிறார்கள்.
சந்தைப்படுத்துவதற்கான ஒரு குழு இருந்தால், அவர்களை திருப்தி செய்து காசு பார்க்க வணிக நிறுவனங்களில் காத்துக்கொண்டிருக்கின்றன. கொஞ்சம் புதிய சிந்தனை இருந்தால் போதும், அது பெரும் பலன் அளிக்கிறது.
'யாருக்கோ எதற்காக வேலன்ட்டைன் தின பரிசை அளிக்க வேண்டும்? உங்களை விட நீங்கள் விரும்புபவர் யாராக இருந்து விட முடியும்? உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள்’ என்பது போன்ற விளம்பரங்களும் தோன்றிவிட்டன.