மனிதனுக்கே உரிய தனித்துவமான விஷயங்களில் ரசனையும் ஒன்று. ஒவ்வொரு பொருளையும் ருசிப்பதைப் போலவே, மனிதனுக்கு மனிதன் ரசனையும் வேறுபடத்தான் செய்கின்றன.
நம்முடைய வரலாற்றில் மனிதன் கண்டுபிடித்த அத்தனை பொருள்களும் மிக அற்புதமானவை. இசை, சினிமா, கலாச்சாரம், ஓவியம் என நாம் ரசிப்பதற்கு கோடிக்கணக்கான விஷயங்கள் நம் கண் முன்னே கொட்டி கிடக்கின்றன. பழைய பாடல்களை இப்போதும் கூட கேட்கும்போது நம் மனம் அதனை ஆழ்ந்து ரசிப்பதுண்டு.
இவற்றை தாண்டியும் மிகப்பெரிய ரசனை எதில் உண்டு என்றால் நிச்சயம் அது இலக்கியங்களில் உண்டு என்று தான் சொல்ல வேண்டும். மனிதன் ஒவ்வொரு பொருளையும் அணு அணுவாய் ரசித்து வாழ்ந்து இருக்கிறான் என்று சொன்னால் அது மிகையாகாது.
புலவர் ஒருவர் மாலை வேளையில் தெருக்களை நோக்கி நடந்து செல்கிறார். அது குளிர் காலமானதால் வாடைக்காற்று பலமாக வீசுகிறது. அவ்வாறு நடந்து செல்லும்போது அனைத்தையும் கவனித்துக் கொண்டே செல்கிறார்.
முல்லை கொடியில் இருந்த வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. அந்த வாசத்தை நுகர்ந்து கொண்டே சென்றவர் மன்னனின் கோட்டையை அடைகிறார். தன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவருக்கு ஆழமான சோகத்தை தருகின்றன.
வானம் இருண்டு கிடப்பதால் இரவும் பகலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. பூக்களின் வாசத்தை வைத்து மட்டுமே மாலை வேளை வந்ததை உணர முடிகிறது. மீண்டும் வெளியே செல்ல முடியாமல், வீட்டின் உள்ளே ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் கால்கள் நோகின்றன. உடம்பை குளிர்ச்சிப்படுத்தும் சந்தனக்கல் வேலை இன்றி கிடைக்கிறது. தண்ணீர் கூசாக்கள் பயன்பாடு இன்றி கிடக்கின்றன. விசிறிகளின் மேல் சிலந்திகள் வலை பின்னி கொண்டிருக்கின்றன. தெருக்களில் குடிகாரனின் நடமாட்டத்தைத் தவிர வேறு நடமாட்டமே இல்லை.
காதலியோ போர்க்களம் சென்ற காதலனை நினைத்து வருந்துகிறாள். ஆதலால் அவளுக்கு வாடை காற்று துயரம் மிகுந்ததாய் இருக்கிறது. ஆனால் அவள் காதலனோ போர்க்களத்தில் காயம் பட்ட குதிரைகளையும், போர் வீரர்களையும் மிகுந்த அக்கறையோடு பார்த்துக் கொள்கிறான். போர்க்களத்தில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த வாடைக்காற்றானது அவனுக்கு மிகுந்த இன்பத்தை தருகிறது.
இப்படி வாழ்வில் ஒவ்வொரு அங்கத்தையும் அணு அணுவாய் அனுபவித்து ரசனையோடு புலவர் ஒருவர் எழுதிக் கொண்டே செல்கிறார். கண்ணுக்கு இனிய காட்சிகளையும், மனதிற்கு ரம்யமான ரசனையையும் உடலை நடுங்கச் செய்யக்கூடிய வாடைக்காற்று அளித்ததால் அதனை நெடுநல்வாடை என வாயார புகழ்கிறார்.
ரசனை என்பது ஆடை ஆபரணங்களிலும் , கூட கோபுரங்களிலும் இல்லை. அது மனிதனின் மனதிற்குள் தான் இருக்கிறது. புல்லையும் பூண்டையும் ரசிக்க கற்றுக் கொண்டவனுக்கு செயற்கையாக கட்டமைக்கப்படும் எந்த ஒரு பூந்தோட்டமும் தேவைப்படுவதில்லை. இப்படி ஒரு ரசனையான வாழ்வியலை வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் எழுதிய நூல்களை கற்பதன் மூலம் நாமும் அந்த ரசனையின் ருசியை சுவைத்துப் பார்க்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை!