மரப்பாச்சி பொம்மைகளின் மகத்துவம் என்ன?

மரப்பாச்சி பொம்மைகளின் மகத்துவம் என்ன?

நவராத்திரி கொலுவில் மரப்பாச்சி: பண்டைய காலம் தொட்டே நவராத்திரி கொலு வைக்கும்போது, ஆண் - பெண் உருவம் கொண்ட இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை அலங்கரித்து கீழ்ப்படியின் நடுவே வைத்து பின்னர் மற்றைய பொம்மைகளை வைப்பது வழக்கம். விஜயதசமியன்று இரு பொம்மைகளையும் மெதுவாக படுத்தாற்போல வைத்துவிட்டால், இதர பொம்மைகளை ஒன்றிரண்டு நாட்கள் சென்றபின் எடுத்து வைத்துக் கொள்ளலாமெனக் கூறுவதுண்டு. இறைவன் - இறைவியாக மரப்பாச்சி பொம்மைகளை நினைத்து வழிபடுவது உண்டு.

அன்றைய கால கட்டத்தில் மரப்பாச்சி பொம்மைகளை நன்கு அலங்கரித்து திருமணம் நடத்தி, தெரிந்தவர்களை அழைத்து அன்னதான விருந்தோம்பல் செய்வது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் திருமணமாகாமல் வீட்டிலிருக்கும் மகன் அல்லது மகளுக்குத் திருமணமாகுமென்கிற நம்பிக்கை இருந்தது. அதேபோல் திருமணங்களும் நடைபெற்றன.

விளையாடல் பொருட்களில் மரப்பாச்சி: திருமணத்துக்கு முதல் நாள் சோப்பு, சீப்பு, பவுடர் போன்ற பல விளையாடல் பொருட்களை ஒரு தட்டில் அழகாக வைத்து பெண் வீட்டார் மணமகனுக்கும், மணமகன் வீட்டார் மணமகளுக்கும் அளிக்கையில், குறிப்பாக அதில் இரு மரப்பாச்சி பொம்மைகளை வைத்திருப்பார்கள். எதனால்?

அப்போதெல்லாம் திருமண சமயம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் கிடையாது. தவிர, புகைப்படம் எடுத்தாலே ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற மூடநம்பிக்கையும் இருந்தது. புகுந்த வீடு செல்கையில், மணமகள் இந்த மரப்பாச்சி பொம்மைகளைத் தனது தாய் - தந்தையாக பாவித்து தன்னுடன் அவர்கள் வருகிறார்கள் என்கிற பாதுகாப்பு உணர்வுடன் எடுத்துச் சென்று, தினமும் வணங்குவது வழக்கத்தில் இருந்தது!

குழந்தையும் மரப்பாச்சியும்: திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பிறந்த பின், அதற்கு சளி, தும்மல், ஜலதோஷம் போன்ற இடர்கள் ஏற்படுகையில் மரப்பாச்சி பொம்மையை சந்தனக் கல்லில் சிறிது தேய்த்து தாய்ப்பாலில் அதைக் குழைத்து தீப விளக்கொளியில் சூடு காட்டி, குழந்தையின் நெற்றியில் பற்றுப் போட, குழந்தையின் துயர் நீங்கி சமாதானப்படும். மேலும், குழந்தைக்குப் பல் முளைக்கையில், ஏதாவது கையில் கிடைத்தால், அப்பொருளை எடுத்துக் கடிக்க ஆரம்பிக்கும். அச்சமயம், குழந்தை கையில் மரப்பாச்சி பொம்மையைக் கொடுத்தால், குழந்தை அதை கடிக்கும். மரப்பாச்சி பொம்மையிலுள்ள மருத்துவ குணம், குழந்தையின் உடம்பினுள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

கருங்காலி, தேக்கு, செம்மரம், ஊசியிலை மரம் போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களை வெட்டித் தயாரிக்கப்படுவதால், மரப்பாச்சி பொம்மைகள் நோயினை எதிர்க்கும் சக்தி உடையதாக உள்ளன. மேலும், குடும்ப உறவுமுறைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பல்வேறு மரப்பாச்சி பொம்மைகள் உதவியாக இருந்தன. மரப்பாச்சிகள் வழிபடக் கூடியவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com