
இந்தியாவின் உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி உள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிரதமர் பதவியை அடைந்தாலும், ஒரு சில மாநிலத்தை சேர்ந்தவர்கள் இதுவரை பிரதமர் பதவியை அடைந்ததில்லை. இந்தியாவில் அதிக பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தான் தேர்வாகியுள்ளனர்.
விடுதலைப் பெற்ற பின்னர் நாட்டின் முதல் பிரதமராக பண்டிட் ஜவகர்லால் நேரு இருந்துள்ளார். இவர் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர் ஆயினும், இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் உத்தர பிரதேசத்தில்தான். இவர்கள் அரசியலில் வளர உத்தரப் பிரதேசம் முக்கிய காரணமாக இருந்தது.
நேருவிற்கு அடுத்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமர் ஆனார். இவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மைந்தர் தான். நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலம், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. இங்கு ஒரு கட்சி 80 சதவீத இடங்களை பிடித்தால் போதும் நாடு முழுக்க உள்ள கட்சிகளிடம் சமரசம் செய்து ஆட்சியை பிடித்து விடலாம்.
ஒரு கணக்கின் படி பார்த்தால் நாட்டின் 8 பிரதமர்களை உ.பி மாநிலம் தான் உருவாக்கியுள்ளது. நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சவுத்ரி சரண் சிங், ராஜீவ் காந்தி, சந்திரசேகர், விஸ்வநாத் பிரதாப் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களும் இதில் அடங்கும்.
மொரார்ஜி தேசாய் உ.பியை சேராத இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் இருந்து முதன் முதலாக பிரதமர் பதவியை பிடித்தவர் என்ற பெருமைக்குரியவர். நாட்டின் முதல் பிரதமர் பதவிக்கு குஜராத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் படேலிற்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஆயினும், அவர் உள்துறை அமைச்சர் பதவியை ஏற்று நாட்டை ஒருங்கிணைத்தார்.
தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி , குஜராத் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் , உ.பியின் வாரணாசி தொகுதியில் தான் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி பார்க்கையில் தற்போதும் நாட்டு பிரதமரை உ.பி மக்களவை தொகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கின்றனர்.
தென்னிந்திய மாநிலங்களில் இருந்து முதல் முறையாக பி.வி. நரசிம்மராவ் பிரதமரானார். அவர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்த முதல் பிரதமர் ஆவார். நரசிம்மராவுக்குப் பிறகு, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எச்.டி. தேவகவுடா பிரதமரானார். வேறு எவரும் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பிரதமர் பதவிக்கு வரவில்லை.
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரகண்ட், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மே.வங்கம், ஒரிஸா, ஹரியானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், கோவா, தமிழ்நாடு, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து இதுவரை ஒருவர் கூட பிரதமர் பதவிக்கு வந்ததில்லை.