

இந்தியாவில் உள்ள சில மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடு முழுக்க பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். விலைவாசியில் தொடங்கி அரசியல் வரை என்று பல மாற்றங்களை இந்தத் தேர்வு முடிவுகள் தீர்மானிக்கும். அவை எந்தெந்த மாநிலங்கள் என்று தெரிந்துகொள்வோம்.
உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகம் சற்று தனித்துவமானது. இங்கு நிகழும் மாநிலத் தேர்தல்கள் பெரும்பாலும் தேசிய அரசியலுக்கான தொனியைக் காலம்காலமாய் வடிவமைத்து வருகின்றன. இதில் உத்தரப் பிரதேசம் தனித்து நிற்கிறது. 80 மக்களவை இடங்களுடன் நாடாளுமன்றத்திற்கு (Parliament) மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. இங்கு வலுவாகச் செயல்படும் எந்தவொரு கட்சியும் மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் கணிசமான சூழ்நிலையை அமைத்து தருகிறது. அப்படி வரலாற்று ரீதியாக பார்த்தால் உத்தரப் பிரதேசத்தில் ஏற்படும் மாற்றங்கள் தேசிய போக்குகளில் பிரதிபலித்துள்ளன. எனவே, இதன் சட்டமன்றத் தேர்தல்கள் உள்நாட்டு அரசியலில் ஒரு சோதனைக் களமாக பார்க்கப்படுகிறது.
பீகார் : பீகாரும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தைவிட சிறியதாக இருந்தாலும் அதன் 40 மக்களவை இடங்களால் அரசியல் ரீதியாக ஒரு முன்னணி மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இப்போது முடிந்துள்ள மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் NDA அல்லது INDIA போன்ற கட்சிகள் கூட்டணிகளின் வலிமையை ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரதிபலிக்கின்றன.
மேற்கு வங்கம்: இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் 42 மக்களவை இடங்களைக் கொண்டுள்ளது; இதுவும் அரசியல் ரீதியாக முக்கிய மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இங்குள்ள தேர்தல் முடிவுகள் கிழக்கு இந்தியாவில் ஓர் அதிகார சமநிலையைத் தீர்மானிக்கின்றன (determine the balance of power). சொல்லபோனால் மாநிலக் கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு எவ்வாறு சவாலாக இருக்க முடியும் எனும் போக்கு இங்குதான் ஆரம்பமாகிறது.
மகாராஷ்டிரா: அதேபோல் 48 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா அங்கு மலைபோல் கொட்டிக்கிடக்கும் பொருளாதாரத்திற்கும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை காரணமாக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது; குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில். இறுதியில் இங்கு நிகழும் கட்சிகளின் செல்வாக்கு ஏற்ற இறக்கம் தேசியக் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றங்களை வரவைக்கலாம்.
தமிழ்நாடு : தமிழ்நாட்டில் 39 மக்களவை இடங்கள் மற்றும் அரை நூற்றாண்டுக்கு மேல் வலுவாக காணப்படும் மாநிலக் கட்சிகளின் இருப்பால் இம்மாநிலமும் இந்திய அளவில் செல்வாக்கு மிக்கதாக உள்ளது. மாநிலக் கட்சிகள் தேசிய கூட்டணியோடு களம் கண்டு வரும் தேர்தல் முடிவுகள்; தேசிய அளவிலான அரசாங்கத்தில் நம் மாநிலப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வாய்ப்புகளை உருவாக்கி பல மாற்றங்களை வரவைக்கின்றன.