‘ஈரானிலிருந்து குழாய்கள் வழியாக பெட்ரோல் நமக்கு நேரடியாக வரும்’ என்று நீண்டகாலமாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈரானிலிருந்து ஏற்கெனவே வந்து சேர்ந்துவிட்ட ஒரு பிரிவு நம்முடனே தங்கியிருக்கிறது. அதுதான் பார்சி இனம். அவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தவர்கள் அல்ல.
ஒரு காலத்தில் ஈரானில் பார்சிக்களின் மதமான ஜொரோஸ்ட்ரியனிஸம் முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஆனால், நாளடைவில் அங்கு இஸ்லாம் பரவிய பிறகு இந்த மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் பார்சிக்களில் பலரும் இந்தியாவை வந்தடைந்தனர். அவர்களில் மிகப் பலரும் மும்பையில் வேரூன்றத் தொடங்கினார்கள். நிலங்களை அதிக அளவில் வாங்கிப் போட்டனர். ரியல் எஸ்டேட் வணிகத்திலும் கொடிகட்டிப் பறந்தனர்.
இவர்களின் முக்கிய தெய்வம் அக்னி பகவான்தான். இந்துக்களும் நெருப்பை வழிபடுகிறார்கள். என்றாலும் ஒருவிதத்தில் இந்த இரண்டு மதங்களும் நெருப்பைப் பற்றிய கண்ணோட்டத்தில் மாறுபடுகின்றன.
இந்துக்களில் பலரும் இறந்த உறவினர்களின் உடலை நெருப்பில் தகனம் செய்வதுண்டு. நெருப்பு எதையும் பொசுக்கிய பிறகும் புனிதமானது என்கிற கண்ணோட்டம் அவர்களுக்கு. ஆனால், பார்ஸிக்களைப் பொறுத்தவரை புனிதமான நெருப்பில் களங்கம் நிறைந்த உடலைப் போடக்கூடாது என்பதே.
தங்கள் இனத்தில் யாராவது இறந்தால் அந்த உடலை ஓர் உயர்ந்த கோபுரம் போன்ற பகுதியில் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். அந்த உடல்களை கழுகுகள் தின்றுவிடும். இந்த கோபுரங்களை, ‘மெளன கோபுரங்கள்’ (Towers of silence) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் மூன்று வித திறந்தவெளிகள் இருக்கும். ஒன்றில் ஆண்கள், ஒன்றில் பெண்கள், மற்றொன்றில் குழந்தைகள் ஆகியோர்களின் உடல்கள் கிடத்தப்படும்.
பெரும் அடுக்குமாடிக் கட்டடங்கள் உருவாகத் தொடங்கிய பிறகு மேல் மாடிகளில் வசிப்பவர்கள் கழுகுகள் பிரேதங்களைக் குதறும் காட்சியைக் கண்டு திடுக்கிட்டார்கள். ஆனால், காலப்போக்கில் இந்தக் காட்சியை பார்க்க முடியாமல் போனதே பல பார்சிக்களை திடுக்கிட வைத்தது.
நம் நாட்டில் ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் கழுகுகளும், வல்லூறுகளும் இருந்தன. ஆனால், தற்போது இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் வல்லூறுகளின் உணவுதான். அவற்றின் முக்கிய உணவு ஆடு, மாடுகள்தான். பசுவின் இறைச்சியை இங்கு பலரும் சாப்பிடுவதில்லை. எனவே, பசுக்களின் தோலை மட்டும் உரித்துக்கொண்டு இறைச்சியை வீசி எறிந்து விடுகிறார்கள். எனவே, வல்லூறுகளுக்கு இவை தடையின்றிக் கிடைத்தன.
ஆனால், பிரச்னை ஒருவித மருந்தினால் வந்து சேர்ந்தது. தீவிர நோயினால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வலி நிவாரணியை இந்திய மருத்துவர்கள் சில வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த மருந்தை உட்கொண்டு அதன் பிறகு இறந்த கால்நடைகளை சாப்பிட்ட கழுகுகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தன.
இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கழுகுகள்தான் உள்ளன. சில சமயம் பிரேதங்கள் கழுகுகளால் உண்ணப்படாமலேயே கோபுரங்களில் கிடந்ததை பார்ஸி இன மக்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல், பிரேதத்தின் மேலே கண்ணாடிகளைப் பொருத்தி சூரிய வெப்பத்தை பிரேதங்களின் மீது பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் அவற்றை எரிக்க முயன்றனர். ஆனால், மழைக் காலங்களில் இதற்கும் தடை ஏற்பட்டது.
வேறு வழியில்லாமல் கழுகுகளையும், வல்லூறுகளையும் தாங்களே வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் பார்சி இனத்தவர். தங்கள் உடல் அப்படியே கிடப்பதை விட, தகனம் செய்யப்பட்டு விடலாம் என்று கருதும் பார்சி இனத்தவரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
இந்திய வணிகத்துக்கு வலிமை சேர்த்தவர்கள் பார்சிகள். ரத்தன் டாட்டா, நுஸ்லி வாடியா ஆகியோர் பார்சிக்கள்தான். மற்றபடி நமக்கு நன்கு அறிமுகமான பலரும் கூட பார்சிகள். எடுத்துக்காட்டுகள் - தாதாபாய் நவ்ரோஜி, ஹோமி பாபா. இந்திய ராணுவத்தில் தனிப்புகழ் பெற்றிருந்த மானக் ஷாகூட ஒரு பார்சிதான். தற்போது இந்த இனத்தவரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. இப்போது இந்தியாவில் வெறும் 23,000 பார்சிகள்தான் இருக்கிறார்களாம்.