சிதிலமடையும் ஆரணியின் இரண்டு அரண்மனைகள்... தமிழக அரசு புனரமைக்குமா?

Arani palace
Arani palace
Published on

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சி பட்டு நெசவு மற்றும் அரிசிக்குப் பெயர் போனது. ஆர் + அணி என்பதே ஆரணி என்றானது. ஆர் என்றால் அத்திமரம் என்று பொருள். அத்தி மரங்கள் அணி அணியாக இருந்ததால் இந்த பகுதி ஆரணி என்று அழைக்கப்பட்டது.‌ இது பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இருந்தே முக்கிய பகுதியாக இருந்து வந்துள்ளது. மன்னர்கள் இப்பகுதி கோவில்களுக்குப் பல தான தர்மங்கள் செய்துள்ளனர்.

இந்தக் கட்டுரையில் ஆரணியின் இரண்டு அரண்மனைகளைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த ஆரணிப் பகுதி, கிபி 1640 முதல் கிபி 1948 வரை (ஜமீன்தாரி முறை இந்தியாவில் ஒழிக்கப்படும்வரை) ஆரணி ஜாகிர்தாரர்களால் ஆளப்பட்டது. கிபி 1630களில் சிவாஜியின் தந்தை ஷாஹாஜி இப்பகுதியில் படையெடுத்து வந்தபோது தனக்கு உதவியாக இருந்த வேதாஜி பாஸ்கர் பந்த் என்பவருக்கு ஆரணி ஜாகிரைப் பரிசளித்தார். இது ஆரணியையும் அதனைச் சுற்றி இருந்த 192 கிராமங்களையும் உள்ளடக்கிய பகுதி. பின்னர் சிவாஜி கிபி 1677 இல் இப்பகுதியில் படையெடுத்த போது வேதாஜி பாஸ்கர் பந்த் சிவாஜிக்கு ஒத்துழைப்பு அளித்த காரணத்தால், அவருக்கு ஜாகீர்தாரர் பதவி சிவாஜியால் உறுதி செய்யப்பட்டது. பாஸ்கர் பந்த் அவர்களின் வாரிசுகள் ராவ் சாகிப் என்ற பட்டத்துடன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்.

கிபி 1825 ஆம் ஆண்டு சத்திய விஜய நகரம் புதிய தலைநகராக ஆரணியின் ஜாகிர்தாரராக இருந்த வெங்கடநாத ராவ் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆரணி ஜாகிர்தார்களின் ஆச்சாரியாராக இருந்த மூல உத்திராதி மடத்தின் ஜீயரான சத்திய விஜய தீர்த்தாரு என்பவரின் பெயரின் படி இந்த தலைநகரம் சத்திய விஜயநகரம் என்று பெயரிடப்பட்டது.

இங்கு ஜாகீர்தாரர் மிகப்பெரிய அரண்மனையை உருவாக்கினார். அது ஸ்ரீவிலாஸ் என்றும் திவான் கானே அரண்மனை என்றும் அழைக்கப்பட்டது.  அது இரண்டு மாடிகளைக் கொண்டு ஐரோப்பிய மற்றும் முகலாய கட்டடக் கலையை கொண்டு அருமையாக கட்டப்பட்டது. வட்டமான தூண்களும் வழவழப்பான சுண்ணாம்பு பூச்சுகளும் கொண்டு மிகவும் அழகாக கட்டப்பட்டது. இதற்கு அருகிலேயே தர்பார் மண்டபமும் ராணியின் அரண்மனையும் உள்ளன. உள்ளே நுழைந்த உடனேயே உள்ள பொய்க்கதவு மரக்கதவிற்கு நேராக இருந்து எதிரிகளைக் குழப்பி, மக்களைக் காக்க உதவுகிறது. கூரைகளிலும் பல்வேறு வேலைப்பாடுகள் உள்ளன. தூண்களிலும் பல்வேறு சுண்ணாம்பு பூச்சு சிலை வேலைப்பாடுகள் உள்ளன. இத்தகைய அருமையானதொரு அரண்மனை இன்று சிதிலமடைந்து உள்ளது. சில இடங்களில் கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது. இதற்கு சீக்கிரம் மராமத்து வேலைகள் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் அழிந்துவிடும் அபாயத்திலுள்ளது.

இதையும் படியுங்கள்:
காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!
Arani palace

அடுத்தபடியாக கிபி 1860 களில் சீனிவாச ராவ் சாகிப் அவர்களால் கட்டப்பட்ட பூசி மலை குப்பம் என்ற வேட்டையாடும் பகுதியில் உள்ள பிரம்மாண்ட பிரெஞ்சு மாளிகை. இது ஆரணியிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ளது. இது ஆரணி ஜாகிர்தார்களால் அவர்களது விருந்தினர்களை கௌரவிக்க பயன்படுத்தப்பட்டது. இது பல்வேறு கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டு இருந்ததால் கண்ணாடி மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பிய கட்டடக்கலைக்கு ஒரு உதாரணமாக உள்ளது. இங்குள்ள மதராஸ் கூரையில் இரும்பு சாளர கட்டைகள் பயன்படுத்தப்பட்டது, அக்காலத்தில் புதியதொரு முயற்சி. அவை கட்டடத்திற்கு இன்னும் அதிக வலுவை கொடுக்கின்றன. இது இரண்டடுக்கு பிரம்மாண்ட மாளிகையாக அமைந்துள்ளது. இங்கு புறாக்கள் வளர்ப்பதற்கு என்று புறா கூண்டு உள்ளது.  இந்தக் கட்டடமும் இப்பொழுது சிதிலமடைந்துள்ளது.

ஆரணி சென்றால், இவற்றைக் காணத் தவறாதீர்கள். தமிழக அரசு இந்த இரு கட்டடங்களையும் மராமரத்து செய்து, நல்லதொரு சுற்றுலாத்தலமாக ஆரணியை மாற்றும் என நம்புவோம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com