நன்னூல் ஆசிரியர் யார் தெரியுமா?

நன்னூல் ஆசிரியர் யார்
நன்னூல் ஆசிரியர் யார்
Published on

ண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய தமிழ்மொழியின் சிறப்புகளை அறியாதவர் இல்லை. செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழின் இலக்கணங்களை அது தோன்றிய காலத்திலிருந்து பல தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் உருவாக்கிச் செப்பனிட்டு வந்துள்ளனர். காலம் மாற மாற தமிழ் மொழியும் பல மாற்றங்களைக் கண்டு வந்தாலும் இலக்கணம்  மாறாமல் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அடிப்படையாக உள்ளது.

தமிழ் மொழியில் காலந்தோறும் புலவர்களால் எழுதப்பட்ட ஒவ்வொரு இலக்கண நூல்களும் ஒவ்வொரு சிறப்பினை பெற்றுள்ளது. ஒவ்வொரு இலக்கணமும் பண்டைய , இன்றைய காலத்தில் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றன. அப்படிப் படைக்கப்பட்ட இலக்கண நூல்களில் ஒன்று தான் நன்னூல்.

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பவணந்தி முனிவர் என்பவரே  இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார்.  தமிழ் இலக்கணத்தின் முதல் நூலாகக் கருதப்படும் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தைத் தழுவியும் அதனைச் சீர்திருத்தம் செய்தும் நன்னூல் எனும் மேம்படுத்தி அழியா இலக்கணச் செல்வத்தைத் தந்தவர்  ஆகிறார் பவணந்தி முனிவர்.

இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தவர் என்பது சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. மேலும் இவர் பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துகளையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறார்.

"திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனனாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே... "


இது நன்னூலுக்கு இவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் இறுதி வரிகள் ஆகும் . (பாயிரம் என்பது அந்நூலைப் பற்றி முழுமையாக அறிய அதில் உள்ள சிறப்புகளைக் குறிக்கும் முன்னோட்டம் ஆகும்.) பாயிரம் என்பதற்கு வரலாறு என்று பொருள். நூலில் உள்ள பொருளை கூறுவது பாயிரம். சிறப்புப்பாயிரம் மற்றும் பொதுப்பாயிரம் எனும் இரண்டு வகைகளையும், நூலின் முன்னுரையாகவும் இருப்பது இந்த நூலின் சிறப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகள் மீதுள்ள அன்பினால் தோன்றிய கலை: ராமாயணம் முதல் கலியுகம் வரை நிலைத்து நிற்கும் மதுபானி ஓவியம்!
நன்னூல் ஆசிரியர் யார்

இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசனாக இருக்கலாம்  என்பதும் பொன்மதிற் சனகை என்பது சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைக் குறிப்பதால் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு முரண்பாடாகக் கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதிலும் கருத்து வேறுபாடு உள்ளதாகத் தகவல் கூறுகிறது.

பவணந்தி முனிவர்
பவணந்தி முனிவர்static.hindutamil.in

இப்பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள சன்மதி முனி என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. ஈ‌ரோடு மாவட்டம் ,மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோவில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இருக்கிறது. நன்னூலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையாகும். நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் எனும் இரு அதிகாரங்களில் 10 இயல்கள் இலக்கணத்தின் சிறப்புகளை இயம்புகிறது.  462 நூற்பாக்களை உடைய இந்த நூலில்  7 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இருந்து பெறப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

தொகுப்பு:சேலம் சுபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com