வாழை எங்கள் வீட்டில் நன்றாக தழைத்து வந்தது. ஆனால், இப்போது இலைகள் கொத்துக் கொத்தாக சுருண்ட நிலையில் நோய் வந்தாற்போல காணப் படுகிறது. வெட்டினால் அடுத்தடுத்து வரும் கன்றுகளும் அதே போல்தான் வளருகின்றன. வாழையைக் காப்பாற்ற துரிதமாக என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வாழைக்கு Bunch Top Virus நோய் வந்துள்ளது. இந்த நோய் வந்த மரங்கள் வளர்ச்சி குன்றி, கொத்து கொத்தான சுருண்ட இலைகளுடன் காணப்படும். வைரஸ் நோயாதலால் இதற்கு மருந்து கிடையாது. நோயினால் தாக்கப்பட்ட மரத்தை மண்ணிலிருந்து கிழங்கோடு தோண்டி எடுத்து எரித்து அல்லது எறிந்துவிடுங்கள். அப்போதுதான் மறுமுறை வராமலும் மற்ற வாழை மரங்களுக்குப் பரவாமலும் தடுக்க முடியும். பிடுங்கிய குழியில் சுண்ணாம்பைக் கரைத்து ஊற்றுங்கள். வேறு இடத்தில் குழி எடுத்து நடுங்கள். இதே இடத்தில்தான் நடவேண்டும் என்றால், 3, 4 மாதம் கழித்து நடலாம். கன்று வாங்கும்போது வைரஸ் நோயால் தாக்கப்படாததா என்று விசாரித்து வாங்கவும்.
எங்கள் வீட்டில் உள்ள கொய்யா மரம் நன்கு காய்த்து வந்தது. இப்போது பழத்தின் அளவு சிறியதாகிவிட்டது. எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. பழத்தின் ஒரு பகுதி மெத்தென்று உள்ளது. அதிலிருந்து அழுகிய வாடை வருகிறது. இது எதனால்? இந்தக் குறையைப் போக்க என்ன வழி?
Fruit fly எனப்படும் பழ ஈ உங்கள் மரத்தைத் தாக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த ஈ முதலில் கொய்யாக் காய்களில் ஓட்டை போட்டு அதனுள்ளே முட்டை இடுகிறது. காய்கள் பழமாகும் சமயத்தில் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பழத்தைத் தின்ன ஆரம்பிக்கின்றன. பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் கிருமிகளும் ஓட்டை வழியாக பழத்தினுள் நுழைந்து தாக்க ஆரம்பிக்கின்றன. இதனால் பழம் அழுக ஆரம்பிக்கிறது. அதிலிருந்து துர்வாடையும் வருகிறது. அழுகிய பழங்கள் கீழே விழுகின்றன. கீழே விழுந்த பழங்களிலிருந்து வெளிவரும் நன்கு வளர்ந்த புழுக்கள் மண்ணில் கூட்டுப் புழுக்களாகிவிடுகின்றன. நாளடைவில் கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் நன்கு வளர்ந்த பழ ஈக்கள் மீண்டும் மரத்தைத் தாக்க ஆரம்பிக்கின்றன. இதுதான் இந்த பழ ஈக்களின் வாழ்க்கைச் சக்கரம். ஆகவே, கீழே விழுந்துள்ள அழுகிய பழங்கைள எல்லாம் பொறுக்கி குழி தோண்டி புதையுங்கள். மரத்தைச் சுற்றியுள்ள மண்ணை நன்கு கிளறி விடுங்கள். இதனால் வெளியே தெரியும் கூட்டுப் புழுக்களை காக்கை, கோழிகள் கொத்தித் தின்று விடும். மரத்துக்கு மாலத்தியான் 50 EC மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.பி என்ற விகிதத்தில் கலந்து மரம் நனையுமாறு அடியுங்கள். 15 நாட்கள் இடைவெளியில் நான்குமுறை அடியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மரத்தை இந்த ஈக்கள் பிரச்னையில் இருந்து காக்கலாம்.
கவனிக்க: மாலத்தியான் மருந்தடித்த 3 நாட்கள் கழித்துதான் பழங்களைச் சாப்பிடலாம்.
தென்னை மரத்திலிருந்து பூக்கள் குறும்பைகள் கொட்டுகின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் மரத்துக்கு ஒழுங்காக உரம் வைக்கிறீர்களா? வருடத்திற்கொருமுறை உரம் வைப்பது மிகவும் அவசியம். மரத்தில் மைக்ரோ, நியூட்ரின்ட் குறைபாடு இருந்தால் இப்படி பூக்களும் குறும்பைகளும் கொட்டும். தென்னைக்கு என்று இதற்கான மிக்சர் உரம் – பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டு வருடத்திற்கொரு முறை வையுங்கள். போரக்ஸ் 100 கிராம் வாங்கி வையுங்கள். பூக்கள், குறும்பைகள் கொட்டுவது நின்று காய் பிடிக்கும்.
(மங்கையர் மலர், ஜனவரி 1998)