
1) இயற்கையான முறையில் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவோம். நம் சருமத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள விட்டமின் ஈ மற்றும் புரதம் மிகவும் அவசியம். விட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
2) புரதம் என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது முட்டைதான். முட்டை நம் சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்க உதவுவதுடன், நீரேற்றமாக வைத்திருக்கவும், வயதான தோற்றத்தை மெதுவாக்கவும் உதவுகிறது. பொலிவான சருமம் பெற வாரத்திற்கு இருமுறையாவது முட்டை மாஸ்க் போடுவது நல்லது.
3) முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம், மெக்னீசியம், கால்சியம், ஃபோலேட்டுகள், அல்புமின் உள்ளிட்ட விட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு நாம் அழகான, ஆரோக்கியமான சருமத்தைப் பெற முடியும்.
4) சருமத்தை டோனிங் செய்ய:
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்து போகும் வரை காத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தை இறுக்கமாக்கவும் உதவும்.
5) பருக்களும் வடுக்களும் மறைய:
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ பருக்களால் ஏற்படும் வடுக்களும், கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
6) தேவையற்ற முடிகளை நீக்க:
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நெற்றி, மூக்கின் இரு பக்கங்களிலும், தாடைப் பகுதியிலும், உதட்டின் மேல் பகுதியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விட நம் முக அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். இதனை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
7) Scrubbing & ஃபேஸ் பேக்:
முட்டையின் வெள்ளைக் கருவை வைத்து scrubbing and face pack செய்ய நம் முகத்தில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும். முட்டை வெள்ளைக் கருவுடன் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட முகம் பளிச்சென்று மின்னும்.
8) முட்டை ஃபேஸ் பேக் தயாரிக்க:
ஃபேஸ் பேக் தயார் செய்ய முதலில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை விடவும். அத்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து சற்று வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி விட முகச்சுருக்கங்கள் மறைந்து முகம் இளமையாக பளபளவென ஜொலிக்கும். இதனை வாரம் இரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
9) முட்டை ஸ்ட்ராபெரி பேக்:
முட்டையின் வெள்ளை கருவுடன் 4 ஸ்ட்ராபெரி துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, சிறிது மஞ்சள் பொடி, சிறிது தயிர் கலந்து பேஸ்ட் செய்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட மிருதுவான சருமத்தைப் பெறலாம்.
10) முட்டை ஓட்ஸ் பேக்:
சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். தொட்டுப் பார்க்க பிசுபிசு என இருக்கும். இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஓட்ஸ் சிறிதளவு எடுத்து நன்றாக அடித்துக் கொண்டு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கழுவிவிட பிசுபிசுப்பு தன்மை நீங்குவதுடன், முகப்பருக்கள் வருவதும் முற்றிலும் நீங்கி விடும். முட்டையின் வெள்ளை கருவிற்கு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கும் தன்மை உண்டு.
வெயிலினால் ஏற்படக்கூடிய சரும எரிச்சல் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து ஆரோக்கியமான, மிருதுவான சருமத்தினை பெற உதவும் முட்டையை பயன்படுத்தி அழகு பெறலாமே!