ஒருவரைப் பார்த்த உடனே நம்மைக் கவர்ந்து இழுப்பது அவர்களின் முக வசீகரம் எனலாம். அதுவும் ஒரு பெண் என்று வந்து விட்டால் அவரின் நெற்றிப் பொட்டிலிருந்து உதட்டுச்சாயம் வரை உற்று நோக்கத் தூண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக முகத்தின் சருமப் பளபளப்பு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். இதற்குக் காரணம் சருமப் பராமரிப்பில் அவர்கள் செலுத்தும் பிரத்யேகமான கவனிப்பு என்று சொல்லலாம். நாமும் நம் முகத்தில் வித விதமான பொருட்களால் தயாரித்த ஃபேஸ் மாஸ்க் போட்டு சருமப் பளபளப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள மசூர் பருப்பு சாம்பார் செய்யவதற்கு மட்டுமல்ல, விதவிதமான ஃபேஸ் மாஸ்க் செய்யவும் பயன்படும். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. இரண்டு டேபிள்ஸ்பூன் மசூர் பருப்பை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து மசிய அரைத்துக் கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை பாலுடன் கலந்து முகத்தில் மாஸ்க்காக போட்டு வைத்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். முகத்தின் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
2. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்த மசூர் பருப்பு பேஸ்ட்டுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் மாஸ்க்காக போடவும். இருபது நிமிடம் கழித்து கழுவிவிட்டால் முகம் லேசான ஈரத்தன்மையுடன் பளிச்சென்று மின்னும்.
3. இரண்டு டேபிள்ஸ்பூன் மசூர் பருப்பு பவுடருடன் தயிர் கலந்து முகத்தில் மாஸ்க்காக போட்டு கழுவினால் வெயிலின் தாக்கத்தால் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறிய சருமம் மீண்டும் தன் ஒரிஜினல் நிறத்தைப் பெற்றுவிடும்.
4. மசூர் பருப்பு பவுடருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்ந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் மாஸ்க்காக போடலாம். இது முகத்தில் உள்ள கறைகளை நீக்கி முகத்தின் நிறம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னச் செய்யும்.
5. மசூர் பருப்பு பவுடருடன் ஆலுவேரா ஜெல் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் மாஸ்க்காக போட்டு வர சருமம் நீரேத்துடன் பளீரென்ற தோற்றம் பெறும்.