
சிலர் நம்மைக் கடந்து செல்லும்பொழுது அவர்களிடமிருந்து மனதை மயக்கும் வகையில் வாசனை வெளிப்படும். ஒரு நிமிடம் நின்று அவர்கள் என்ன சென்ட் அல்லது பாடி ஸ்ப்ரே உபயோகிக்கிறார்கள் என்று நினைப்போம். டியோடரண்ட், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம் மூன்றுமே ஒரே மாதிரியான பலன் கொடுக்கும் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் என்று தனி முறை உள்ளது. சரியான முறையில் பயன்படுத்தினால் மாலை வரை அந்த நறுமணம் நம்மை சூழ்ந்து நிற்கும்.
டியோடரண்ட்:
டியோடரண்ட் என்பது வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தைக் குறைக்கவும், இனிமையான நறுமணத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக ஸ்ப்ரே, ரோல்-ஆன் அல்லது கிரீம் வடிவில் பல்வேறு பிராண்டுகள் மற்றும் பல வகைகளில் கிடைக்கிறது. சில டியோடரண்ட்கள் குறிப்பாக ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்காகவும் பல டியோடரண்ட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
வியர்வை அதிகம் வரும் மக்கள் இதனை பயன்படுத்தலாம். இது வியர்வையை குறைக்காது என்றாலும் வியர்வையால் ஏற்படும் நாற்றத்தை குறைக்க உதவும். குளித்த உடனேயே அக்குள் பகுதியில் மட்டும் லேசாக தடவ நல்ல பலன் கிடைக்கும்.
பாடி ஸ்ப்ரே:
பாடி ஸ்ப்ரே என்பது டியோடரண்ட் மற்றும் வாசனை திரவியங்களுக்கு இடையில் உள்ள இலகுவான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தை அளிக்கும். இது உடல் துர்நாற்றத்தைப் போக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் பல்வேறு வகையான நறுமணங்களில் கிடைக்கின்றது. உடல் துர்நாற்றத்தை போக்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு குறிப்பிட்ட நறுமணத்தை விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து பாடி ஸ்ப்ரையை தேர்வு செய்யலாம்.
பாடி ஸ்ப்ரேவை நம்மிடமிருந்து சிறிது தூரத்தில் வைத்து மார்பு, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் லேசாக ஸ்பிரே செய்யலாம். கீறல்கள், புண், காயங்கள் இருக்கும் இடங்களிலும், முகத்திலும் படுவதை தவிர்க்கவும். அத்துடன் குறிப்பாக சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலும் பயன்படுத்த வேண்டாம். சிறிதளவு ஸ்ப்ரேவே நம்மை வாசமுடன் வைத்திருக்க உதவும்.
பெர்ஃப்யூம்:
இவை வாசனை எண்ணைகள் மற்றும் பலவிதமான நறுமணப் பொருட்களின் கலவையாகும். இதில் பூக்கள், மசாலாப் பொருட்கள், மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் நறுமணப் பொருட்கள் அடங்கும். உடலில் நறுமணத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் இந்த வாசனை திரவியங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக பலவகையான வாசனை திரவியங்கள் கிடைக்கின்றன.
உடலில் அல்லது ஆடைகளில் இனிமையான வாசனையை வழங்க பயன்படுத்தப்படுகிறது. குளித்த பிறகு உடல் ஈரம் இல்லாமல் நன்கு உலர்ந்ததும் கழுத்து, மணிக்கட்டு போன்ற இடங்களில் லேசாக தடவலாம். இதுவே போதும் வாசனை நீண்ட நேரம் நிலைக்க உதவும்.