நீங்கள் என்றும் இளமையாகவே இருக்க வேண்டுமா? வெளியே சென்றால் முகம் பளிச்சென்று தெரிய வேண்டுமா? அப்படியானால் நீங்கள் அரிசி கிரீம் முயற்சிக்க வேண்டும். இன்றைய காலத்தில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல்வேறு வகையான கிரீம்களை பல வழிகளில் முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் அரிசி கிரீம் மிகவும் பிரபலமாகி வருகிறது.
அரிசி நம் இந்திய உணவுப் பழக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அழகு சாதனப் பொருட்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியில் உள்ள வைட்டமின்கள் தாது உப்புக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றன. இந்தப் பதிவில் முகத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் அரிசி கிரீம் எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம்.
அரிசி கிரீம் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கப் அரிசியை நன்றாகக் கழுவி 3-4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், ஊற வைத்து அரிசியை மிக்ஸியில் நைசாக அரைத்து, ஒரு துணியில் வடிகட்டி, பால் போன்ற திரவத்தை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த அரிசி பாலில் சிறிதளவு பால் பவுடர் அல்லது தேன் கலந்து கிரீம் போல தயாரிக்கவும்.
இந்த க்ரீமை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.
அரிசி கிரீமின் பயன்கள்:
அரிசியில் உள்ள வைட்டமின் பி, இ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்து, சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். இது முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகளை குறைத்து சருமத்தை ஒரே சீராக மாற்றுகிறது.
அரிசி கிரீம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமம் எளிதில் உலர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளும். அரிசியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளைக் குறைத்து வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்துகின்றன.
மேலும், இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இதனால், அலர்ஜி பாதிப்பு குறைந்து சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். வெளியே செல்லும்போது சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்க அரிசி கிரீம் பெரிதும் உதவும்.
அரிசி கிரீம் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான முகப்பூச்சு. இது பக்க விளைவுகள் இல்லாமல் சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த கிரீமை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். ஒருவேளை இதைப் பயன்படுத்தும் போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுகவும்.