அன்று இலைதலைகளை உடையாக்கி வலம் வந்தனர். படிப்படியாக நாகரீகமும் அறிவியலும் வளர வளர உடைகளிலும் மாற்றங்கள் வந்தன. பருத்தி ஆடைகள் முதல் தோல் ஆடைகள் வரை விதவிதமான வகைகளில் கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் நம்மிடையே வந்து மகிழ்வித்தன. அதிலும் பெண்களுக்கு தனிக் கவனத்துடன் நெய்யப்பட்ட நவீன ஆடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பது தற்போதைய நாகரீகமாகிவிட்டது.
அது ஒரு கோவில் .அங்கு வந்த ஒர் இளம்பெண் கால்களை இறுக்கிப் பிடித்த கால்சராய் (லெகின்ஸ்) அணிந்து வந்திருந்தாள். அர்ச்சகர் அனைவரையும் கீழே அமரும் படி சொல்ல அந்தப் பெண் சட்டென்று அமர முடியாமல் தடுமாறியது அங்கிருந்த அனைவரின் பார்வைக்கும் சென்றது. அது மட்டுமின்றி எதிர்பாராத விதமாக அந்த லெகின்ஸ் பட்டென்று தையல் விட்டுப் போனதும் அந்தப் பெண்ணுக்கு முகம் வாடிப் போய் அந்த இடத்தை விட்டு அகன்றாள், அப்போது உடன் வந்த அவள் தாய் “இதுக்குதான் இதையெல்லாம் இங்கே போட்டுக்கிட்டு வராதேன்னு சொன்னேன். இடத்திற்குத் தகுந்த டிரஸ் பண்ணுன்னு சொல்றப்ப எல்லாம் எப்படி கடுப்பாவே?” இப்ப பார் என்று பேசியபடி கடந்து சென்றார்.
இடத்திற்கேற்ற ஆடைகள் அணிவதிலும் அவரவர் உடலுக்கு பொருந்தும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதிலும் கவனம் இருப்பது முக்கியம். மேலைநாட்டு நாகரீகம் நம் நாட்டில் நுழைய மாறிப்போனது உணவுடன் உடைகளும்தான். பெண்கள் சேலையை மறந்து சுடிதாருக்கும் இளம்பெண்கள் இறுகப் பிடிக்கும் உடைகளுக்கும் பழகி விட்டார்கள் .காரணம் இதில் இருக்கும் வசதிகள். எளிதாக எங்கும் எடுத்துச் செல்லவும் விரைவாக உடுத்தவும் உதவும்.
நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் இந்த ஆடைகள் இருப்பதில்லை. இதுபோன்ற ஆடைகளை வாங்கும்போது, தரமானவையாக தேர்ந்தெடுத்து, தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் சரும வல்லுனர்கள். இவ்வகை ஆடைகள் இறுகப் பிடிப்பதால் காற்று புகும் வசதியின்றி சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தக்கூடும். சருமத் துளைகளில் சேரும் அழுக்கை வியர்வை மூலம் வெளியேற முடியாமல் தடுப்பதால் உடலில் அதிக வெப்பம் உண்டாகி அரிப்பு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் நேரக்கூடும். சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க இது போன்ற ஆடைகளை நாள் முழுவதும் அணியாமல் தவிர்ப்பது நல்லது .வெளியே பொய் விட்டு வந்ததும் லெகின்ஸ் போன்ற ஆடைகளைக் களைந்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சருமப் பாதுகாப்பிற்கு நல்லது.
திருமணங்கள், கோவில்கள், துக்கஇடங்கள் போன்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் வெவ்வேறு உணர்வுகளைத் தருபவை என்பதால் அந்தந்த இடங்களுக்கு ஏற்ற உடைகளை மற்றவர் கண்களை உறுத்தாமல் அணிந்து செல்வதில் கவனம் இருந்தால் முன் சொன்ன அந்த இளம்பெண் போல தர்மசங்கடத்தில் சிக்குவதை தவிர்க்கலாம்.