

உங்கள் சருமம் கண்ணாடி போல் பளபளப்புப் பெறவேண்டுமா? அப்போ ஆயுர்வேத மருத்துவம் கூறும், இந்த பழக்க வழக்கங்களைக் காலை நேரம் கடைப்பிடித்துப் பாருங்களேன்.
இன்றைய சூழலில் அழகைப் பராமரிக்கப் பயன் படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள் பலவும் இரசாயனம் கலந்ததாகவே உள்ளன. அவை நம் சருமத்தை அழகுறச் செய்வதற்குப் பதில் தீய விளைவுகளையே தருகின்றன எனலாம். உள்ளும் புறமும் ஆரோக்கியம் நிறைந்த அப்பழுக்கில்லா சருமம் பெற விரும்புவோர், கலப்படப் பொருட்களுக்கு மாற்றாக, ஆயுர்வேதம் பரிந்துரைக்கும், தினசரி காலை வேளைகளில் பின்பற்றக் கூடிய சில பழக்கங்களைக் கைக்கொண்டு நன்மையடையலாம்.
அழகு என்பது ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு என்கிறது ஆயுர்வேதம். உண்மையும் அதுதான். உடலின் தோஷங்கள் சமநிலையில் இருக்கும்போது சருமம் இயற்கையாக மினு மினுப்புத் தோற்றம் தரும். ஜீரணம், அதாவது அக்னி, வலுப்பெற்று விளங்குமானால் உடல் நச்சுக்களற்று நலம் பெறும். பருக்களுடன், சோர்வடைந்த நிலையில், மங்கிய நிறமுள்ள சருமத்தை ஆயுர்வேதம் குணப்படுத்த மட்டும் செய்யாது. குறைபாடுகளின் உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களையும் கண்டுபிடித்து குணப்படுத்தக் கூடியதும் ஆயுர்வேதம். சரும ஆரோக்கியத்திற்கு நாம் காலை நேரம் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்:
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு டம்ளர் இளஞ் சூடான தண்ணீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சை ஜூஸைக் கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரைப்பை குடல் உறுப்புகள் விழிப்புணர்வு பெற்று ஜீரண மண்டல செயல்பாடுகளை தொடங்குவதற்கு தயாராக உதவி புரியும்.
பின் வாய்க்குள் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, 5-10 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு நன்கு கொப்பளித்து துப்பிவிடவும். 'ஆயில் புல்லிங்' எனப்படும் இச்செயல், மிச்சம் மீதமுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, சருமம் தூய்மை பெறச் செய்துவிடும்.
கும்குமாடி (Kumkumadi), நல்பமராடி (Nalpamaradi) போன்ற மூலிகைத் தைலங்கள் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய் வைத்து உடலில் மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், நச்சுக்கள் நீங்கவும் உதவும். அதன் விளைவாக சரும ஆரோக்கியம் அதிக வலிமை பெறும்.
பச்சைப் பால் (Raw milk), தூய, கலப்படமற்ற சந்தனப் பவுடருடன் ரோஸ் வாட்டர் கலந்த பேஸ்ட், முல்தானி மிட்டி, வேப்பிலைத் தூள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி முகத்தை மென்மையாக சுத்தப்படுத்தவும். பச்சரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள், சந்தனம், பால், ரோஸ் வாட்டர் போன்ற இயற்கையான
பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் "உப்தான்" (Ubtan) என்ற சரும சுத்திகரிப்புப் பசையை, குளியல் சோப்பிற்குப் பதில், உடலில் பூசி வாரம் இருமுறை குளித்துவரவும்.
இது சருமத்தைப் பொலிவாக்கவும், இறந்த செல்களை நீக்கவும், தோலின் நிறத்தை மேம்படுத்தவும், ஈரப்பதம் தரவும், முகப்பருக்களைக் குறைக்கவும் உதவிபுரியும். ரோஸ் வாட்டர் அல்லது வெள்ளரி ஜுஸை சருமத்தின் மீது ஸ்பிரே பண்ணலாம். இது சருமத்திற்கு நீரேற்றமும் குளிர்ச்சியும் தரும்.
பாதாம் எண்ணெயுடன் ஆலுவேரா ஜெல் சேர்த்து கலந்து சருமத்தில் பூசி வர சருமம் பள பளப்புப் பெறும்.
சூரியக்கதிர்களால் சருமத்திற்கு உண்டாகும் பாதிப்பை தடுக்க இரசாயனம் கலந்த SPF களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சந்தனப்பேஸ்ட், ஆலுவேரா ஜெல் மற்றும் இரசாயனக் கலப்பில்லாத சன்ஸ்கிரீன் போன்றவைகளை உபயோகிக்கலாம்.
உட்கொள்ளும் உணவில் ஸ்வீட்ஸ், பொரித்த உணவுகள், பாக்கெட்களில் அடைத்து வரும் ஸ்னாக்ஸ், கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிடுதல் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். சாதத்தில் நெய் சேர்த்து உண்பது, வெந்நீர் அருந்துவது, ஃபிரஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது ஆகியவையும் சருமம் ஆரோக்கியம் பெறஉதவும்.