
வாழைப்பழம் உடலுக்கு ஊட்டம்தரும் பழம் மட்டுமல்ல. தலை முடிப் பராமரிப்பிற்கும் உதவும் என்பது பலருக்குத் தெரியாது. வாழைப்பழத்தில் முக்கியமான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கரிம எண்ணெய்கள் உள்ளன. வாழைப்பழத்தைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போடுவதால் அது முடிக்கு ஊட்டம் தந்து வலுவூட்டுகிறது. இது ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும்.
வாழைப்பழ ஹேர் மாஸ்க் போடும் முறைகள்;
1. பழுத்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்;
ஒரு பெரிய பழுத்த வாழைப்பழத்தை தோல் உரித்து மென்மையான பேஸ்ட் போல பிசைந்து கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் தலை முடியை கொண்டை போட்டு ஷவர் கேப் கொண்டு மூடி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
2. தேன் மற்றும் வாழைப்பழ மாஸ்க்
பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலையிலும் முடியிலும் நன்கு தடவவும். தலைமுடியை ஷவர் கேப்பினால் மூடி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவும்.
3. தயிர் + வாழைப்பழம்;
பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து அந்தக் கலவையை தலையில் தடவி முன்பு சொன்னது போலவே 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவும்.
4. ஆலிவ் எண்ணெய் + வாழைப்பழம்;
ஒரு பழுத்த வாழைப்பழம் பிளஸ் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவும்.
5. முட்டை மற்றும் வாழைப்பழம்;
ஒரு முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளவும். அதை நன்றாக ஒரு ஸ்பூன் கொண்டு நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும். ஒரு பழுத்த வாழைப்பழத்தை மென்மையான பேஸ்ட் போல பிசைந்து, அதில் முட்டையை சேர்த்து, நன்கு கலக்கவும். பின்னர் அந்தக் கலவையை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவும்.
வாழைப்பழ ஹேர் மாஸ்க் நன்மைகள்;
1. ஆழமான கண்டிஷனிங் தருகிறது;
வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதம் முடியின் வேர்க்காலில் ஆழமாக ஊடுருவி, ஈரப்பதத்தை அளித்து, உடைந்த உலர்ந்த முடி இழைகளுக்கு புத்துயிர் தருகின்றன. முடியின் அமைப்பை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.
2. பளபளப்பு;
முடிக்கு இயற்கையான பளபளப்பு மற்றும் அழகிய தோற்றத்தை தருகிறது.
3. முடியை பலப்படுத்துகிறது;
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மயிர்கால்களுக்கு ஊட்டம் தந்து, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.
4. முடி உதிர்வது நிற்கிறது;
முடி உதிர்வது நின்று முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தலைமுடியை மென்மையாக நேர்த்தியாக வைக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகள், உச்சந்தலையின் அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்கின்றன. பொடுகை எதிர்த்து போராடுகின்றன. பொடுகினால் முடி உதிர்வது நின்று, நல்ல முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது வாழைப்பழ ஹேர் மாஸ்க் போட்டு நல்ல கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.