

வெள்ளரிக்காய் சாறு, பால் இரண்டையும் கலந்து உடல் முழுவதும் பூசி ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் உடல் பளபளப்பாகும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி நன்றாக அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழிவினால் முகம் ப்ளீச் செய்யப்பட்டு பிரஷ்ஷாகவும் பளபளப்பாக காணப்படும்.
பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து பாலேட்டில் கலந்து முகம், கை, கழுத்து, கால்களில் தடவி ஊற வைத்து குளித்தால் சருமம் நிறம் மாறி பளபளப்பாகும்.
பீட்ரூட்டை தோல் சீவி துருவி அதன் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பழகு பெறும். உதடுகளில் வெண்ணையை பூசி வந்தாலும் உதடு மென்மையாகும்.
ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து கழுவினால் கைவிரல் நகங்கள் உடையாமல் இருக்கும்.
வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால் நகத்தைச் சுற்றி வரும் புண்கள் குணமாகும்.
தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் புருவங்கள் மிருதுவாகவும், வசீகரமாகவும் இருக்கும். விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் புருவ ரோமங்கள் நன்றாக வளரும்.
கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்களுக்கு நல்ல பலன் தரும். கிராம்பை வாயில் மென்று வர வாய் நாற்றம் அகலும்.
எலுமிச்சை பழத்தோலை காயவைத்து பொடி ஆக்கி அதனுடன் உப்பு சேர்த்து நல்லெண்யில் குழைத்து பற்களை துலக்கி வந்தால் பற்கள் பளபளவென மாறும்.
பாத வெடிப்பு குறைய தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள், மருதாணி விழுது கலந்து பாத ஓரங்களில், சேற்றுப் புண்களிலும் தேய்த்து வந்தால் நாளடைவில் புண்கள், வெடிப்பு மறையும்.
சின்ன வெங்காயத்தை மை போல் அரைத்து மயிர் கால்களில் படும்படி தேத்து குளித்து வந்தால் முடி உதிர்வது கட்டுப்படும்.
பசுமையான கருவேப்பிலையை பால் விட்டு அரைத்து தலை முடியில் பேக் போட்டு ஒருமணி நேரம் கழித்து தலையை வெறும் நீரில் கழுவி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி நன்றாக செழித்து வளரும்.
நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சாற்றை கலந்து சூடாக்கி முடியில் தேய்த்து குளித்து வர இளநரை மறையும்.
துளசி இலையை நன்கு மைய அரைத்து நீர் விட்டு வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீயக்காய்த்தூள் போட்டு குளித்தால் பேன் வராது.
வெந்நீரில் வேப்பிலைகளை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை தலைமுடியில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.