பெண்மை எழுதும் கண் மை நிறமே!

கண் மை...
கண் மை...pixabay.com

பெண்மையும், கண் மையும் பிரிக்க முடியாத ஒன்றாகும். பெண்கள் தொன்றுதொட்ட காலம் முதலாகவே கண் மை இட்டு தன் காந்த கண்களால் அனைவரையும் மயக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருவள்ளுவர் பெண்ணின் கண்களை பற்றி கூறிய குறள்,

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளை மலர் இவளின் கண்களை கண்டால், இப்பெண்ணின் கண்களுக்கு தான் ஒப்பாக மாட்டேன் என்று எண்ணி தலை கவிழுமாம்.

இப்படி பெண்கள் தங்கள் கண்களை அழகுப்படுத்திக் கொள்வதில் ஆதியிலிருந்தே மிகவும் விருப்பம் காட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிதாக ஒப்பனைகள் ஏதும் செய்து கொள்ள விரும்பாத பெண்கள் கூட கண் மை வைத்துக்கொள்ள விரும்புவதுண்டு.

இந்தக் காலத்தில் நிறைய கண் மைகள் வந்துவிட்டன. காஜல், ஐ லைனர் என்று கண்களுக்கென்றே நிறைய அழகு சாதனப்பொருட்களும் வந்து விட்டது. எனினும் அது விலை அதிகமாகவும், ரசாயனம் கூடுதலாகவும் கலந்து வருவதால் கண்களுக்கு அதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

ரசாயனம் கலந்த கண் மைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

கண்களில் உள்ள சுரபிகளில் நோய்தொற்று ஏற்படும்.

கண்களில் எரிச்சல் ஏற்படும்.

கார்னியல் அல்சர்- கண் பார்வை இழக்க கூட வாய்ப்புள்ளது. கண்கள் வறண்டு போகக்கூடும்.

கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கிளைகோமா என்ற கண் நோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

இதனால் ரசாயன மிகுதியாக உள்ள காஜல், கண் மைகளை தவிர்த்து விட்டு இயற்கையாகவே நாமே தயாரித்து கண் மை இட்டு கொள்ளலாம். அப்படி இயற்கையாகவே கண் மை தயாரிப்பது எப்படியென்று பார்க்கலாம்.

அகல் விளக்கு – 1

காட்டன் திரி-1

சந்தனம்- தேவையான அளவு.

நெய்- தேவையான அளவு.

பாதாம் பருப்பு-1

முதலில் சந்தனத்தை காட்டன் திரியில் நன்றாக தடவி எடுத்து கொள்ளவும். இப்போது அகல் விளக்கில் நெய் ஊற்றி அதில் காட்டன் திரியை போட்டு அகலை பற்ற வைக்கவும்.

பாதாமை ஒரு போர்க்கில் எடுத்து கொண்டு அகலில் இருந்து வரும் நெருப்பில் காட்டி நன்றாக கருக்கவும். இப்போது பாதாமிலிருந்து வரும் கரியை ஒரு தட்டின் மீது படும்படி அமைத்து கொள்ளவும். பாதாம் நன்றாக கருகும் வரை இதை செய்யவும்.

இப்போது அந்த தட்டில் படிந்திருக்கும் கரியை ஒரு குடுவையில் சேகரித்து கொள்ளவும். அந்த கரியில் சிறிது நெய் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இப்போது வீட்டிலேயே செய்த ஆயூர்வேத கண் மை தயார்!

கண் மைகள்
கண் மைகள்pixabay.com

ஆயூர்வேத கண் மை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

இது மாய்ஸ்டரைஸராக பயன்பட்டு கண்களில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

கண்களில் உள்ள நரம்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துகிறது.

கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

கண்களில் உள்ள கருவளையங்களை போக்குகிறது.

எப்போதுமே அதிக விலையில் வரும் பொருட்கள் தரமானது என்றும் மலிவான விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றது என்ற எண்ணத்தை உடைத்து எறியுங்கள்.

உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com