அழகாக இருப்பது என்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட்டாகி வருகிறது. ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இனி ஜொலிக்கலாம் அழகாக!
ஆண்களுக்கு எதற்கு அழகு, ஆணாக இருப்பதே அழகுதான் என்று சொன்ன காலம் மலையேறி பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் இறங்கி விட்டார்கள்.
ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர் கட் என்று ஆண்கள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். சரும பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்த முகம் பொலிவடையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சரும பொலிவிற்கு:
மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்:
சருமத்தில் வறட்சியான தழும்புகளை தவிர்க்க வறண்ட சருமம் இருக்கும் ஆண்கள் சருமத்திற்கேற்ற மாய்ஸ்ரைசர் பயன்படுத்த சருமம் கடினமாவதை தடுப்பதுடன் முகத்தின் அழகும் கூடும்.
களிமண் ஃபேஸ்பேக்:
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு, முகத்தில் சிறுசிறு கட்டிகள் போன்றவை உண்டாகும். இதற்கு களிமண் கொண்டு ஃபேஸ்பேக் போடுவது சிறந்த பலனை தரும். களிமண்ணில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் சரும தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதுடன், இறந்த சரும செல்களை வெளியேற்றி சருமத்தை சுத்தமாக்கும்.
வால்நட் ஃபேஸ்பேக்:
சருமத்தின் பளபளப்பை பராமரிக்க வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பை ஃபேஸ்பேக்காக உபயோகிக்கலாம். இதில் விட்டமின் ஈ மற்றும் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளன. ஈரப்பதமான மற்றும் பளிச்சிடும் சருமத்தை பெற தினமும் சிறிதளவு வால்நட்டை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ஃபேஸ்பேக் தயாரித்தும் உபயோகிக்கலாம்.
இரண்டு மூன்று வால்நட் பருப்புகளை இரவு ஊற வைத்து காலையில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். இதனை சிறிது தண்ணீர், ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து சருமத்தில் தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ இறந்த சரும செல்களை அகற்றுவதுடன், சரும வறட்சி, முகப்பரு, வயதான தோற்றம் போன்றவற்றை தவிர்க்க உதவுவதுடன் சருமத் துளைகளை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
நீரேற்றமாக வைத்திருக்க:
நீரேற்றம் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கும்.தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க நம் சருமம் நீரேற்றமாக இருக்க உதவும்.
தாடியில் கவனம்:
தரமான ரசாயன கலப்பு இல்லாத ஷேவிங் பயன்படுத்துங்கள். உயர்தரமான ட்ரிம்மரை பயன்படுத்துவதும் நல்லது. தாடி வளர்க்க நினைப்பவர்கள் அதனை முறையாக பராமரிக்க வேண்டும். சீரான இடைவெளியில் ட்ரிம் செய்வதும் அழகைக் கூட்டும்.
பூஞ்சை தொற்றுகளிலிருந்து:
மழைக்காலத்தில் கடுமையான ஈரப்பதம் இருக்கும் பொழுது வெளியில் இருந்து வீடு திரும்பியதும் குளியல் எடுப்பது மிகவும் அவசியம். இது சருமத்தை சுத்தம் செய்வதுடன் பூஞ்சை தொற்றுகள் வராமல் தடுக்கும்.
இத்துடன் சருமத்திற்கேற்ற ஃபேஸ் பேக், டோனர், க்ளென்சிங் போன்றவற்றை பயன்படுத்த சருமம் பளிச்சென்று இருக்கும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இனி ஜொலிக்கலாம் அழகாக.