அழகு குறிப்புகள் - முடி பராமரிப்பு!

அழகு குறிப்புகள் - முடி பராமரிப்பு!

1. ன்றைய காலகட்டத்தில் நமக்கு சுத்தமான நீர் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. தலைக்கு குளித்தால் முடி கொட்டத்தான் செய்கிறது. ரசாயன கலப்பு நிறைந்த ஷாம்பூ, சோப்பு, கலப்படமான தண்ணீர் எல்லாம் சேர்ந்து 30 வயதிலேயே முடி கொட்டி ஆங்காங்கே மண்டை தெரிகிறது நிதர்சனமான உண்மை. இதற்கெல்லாம் கலங்காமல் நாம் இருக்கின்ற முடியை வளமாக, செழிப்பாக மேற்கொண்டு கொட்டாமல் வைத்துக் கொள்ள என்ன செய்வதென்று பார்க்கலாம். வீட்டு வேலை, ஆபீஸ் டென்ஷன், குழந்தைகள் பராமரிப்பு, வீட்டு பெரியோர்களை பார்த்துக் கொள்வது,  வேலையாட்களை வேலை வாங்குவது என டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில் முடி கொட்டுவது இயற்கை தான். இதற்கு இரவு படுக்கச் செல்லும் போது உச்சந்தலையில் சிறிதளவு விளக்கெண்ணையை வைத்துக்கொண்டு தூங்க நம் டென்ஷன் குறைந்து உடல் குளிர்ச்சி பெறும். 

2) கரிசலாங்கண்ணி எண்ணெயை உபயோகிக்க முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் தீரும்.

3) கறிவேப்பிலையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி இதனை கூந்தலுக்கு தடவி வர இளநரை வராமல் தடுக்கலாம்.

4) ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதன் சாறை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு முடிகளை நகர்த்தி மண்டை ஓட்டில் படும்படி எலுமிச்சை சாற்றை தலையில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முடியை அலச பொடுகு தொல்லை இராது.

5) தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து குளித்து வர இளநரை வராமல் பார்த்துக் கொள்ளலாம் . அத்துடன் சத்தான உணவு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

6) கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இதனை உணவில் அடிக்கடி துவையலாகவோ, கருவேப்பிலைச் சாறை சிறிது உப்பு, மோர் கலந்து அப்படியே பருகவோ செய்தால் உடலுக்கு மட்டுமல்ல நம் கூந்தல் கருமையாக வளர்வதற்கும் உதவும்.

7) சிலர் முடிகளை கர்லிங், ப்ளீச்சிங்,ஸ்ட்ரெயிட்டனிங் என செய்து முடிகளின் வேர்களை வலுவிழக்க செய்து விடுகிறார்கள். இதுவும் முடி உதிர்வதற்கான காரணங்களில் ஒன்று. இயற்கையான முறையில் கூந்தலை அழகு படுத்துவது தான் சிறந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

8) முடிக்கு ஆயில் மசாஜ் தினமும் 15 நிமிடங்கள் கொடுப்பது நல்லது. தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு சுட வைத்துக் கொள்ளவும்.அதனை பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் ஏற்பட்டு முடி  வளர உதவும்.

9) தலைக்கு குளித்ததும் ஹேர் டிரையரை உபயோகிப்பதை தவிர்க்கவும். ஹேர் டிரையர் உபயோகிப்பதால் முடி சூடாகி  உதிர்வது அதிகமாகும்.

10) தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் குளியல் வாரம் ஒரு முறை அவசியம் எடுத்துக் கொள்ளுதல் செழிப்பான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

11) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தலைமுடியை நுனியில் சிறிது வெட்டி விடுவது மிகவும் அவசியம். இதனால் பிளவுபட்ட மற்றும் சேதமடைந்த முடிகள் நீக்கப்படுவதால் கூந்தல் செழிப்பாக வளர உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com