
நம் வீட்டு பெரியவர்கள் பிறந்த குழந்தையை குளிப்பாட்ட பாரம்பரிய பொருட்களைக் கொண்டு தயாரித்த குளியல் பொடியையே பயன்படுத்தி வந்தார்கள். இந்த பாரம்பரிய குளியல் பொடியை குழந்தைகளுக்கு 3 வயது வரை பயன்படுத்தி வரலாம். பக்க விளைவுகள் அற்ற இந்தப் பொடியை உபயோகிப்பதால் சரும தொந்தரவுகள் அணுகாது. சருமம் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். இதை ஆண் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் உடலில் மஞ்சள் கலரை ஏற்படுத்தாது. எனவே தயங்காமல் ஆண் குழந்தைகளுக்கும் இதனை பயன்படுத்தலாம்.
குளியல் பொடி:
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பாசிப்பயறு 1/4 கிலோ
காய்ந்த ரோஜா இதழ்கள் 25 கிராம்
சந்தன கட்டை 25 கிராம்
ஆவாரம் பூ 1 கப்
வேப்பிலைக் கொழுந்து 1 கைப்பிடி
துளசி இலை 1 கைப்பிடி
எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் சலித்து காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இதனை தினமும் ஈரம் படாத ஸ்பூனால் எடுத்து உபயோகிக்க பூச்சி, வண்டுகள் வராது. ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
குழந்தையை குளிப்பாட்டும் சமயம் இந்த பொடியில் சிறிது எடுத்து தண்ணீர் விட்டு குழைத்துக்கொண்டு கண், காது போன்ற பகுதிகளில் படாமல் நன்கு தடவி குளிப்பாட்டவும். குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் குளியல் பொடியை அதிகம் பயன்படுத்தாமல் அளவாக எடுத்து பயன்படுத்துவது நல்லது.
குளியல்பொடி குழந்தையின் சருமத்தை பாதுகாத்து மென்மையாக வைத்திருக்க உதவும். வீட்டில் சுத்தமாக தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகள் எதுவும் இராது. கஸ்தூரி மஞ்சள் போன்ற மூலிகைகள் ஆன்டி ஆக்சிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு ஆரோக்கியத்தையும் மினுமினுப்பையும் தரும்.
குளியல் எண்ணெய்:
பிறந்த குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டும் பொழுது குழந்தையின் உடலில் லேசாக எண்ணெய் தடவி குளிப்பாட்டுவது சரும பிரச்னைகள் வராமல் தடுப்பதுடன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.
தேங்காய் எண்ணெயை லேசாக சுட வைத்து ஆறியதும் குழந்தைக்கு கண், காது பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து குளியல் பொடி உபயோகித்து குளிப்பாட்ட சருமம் பளபளப்பாக மின்னும். அதிக நறுமணம் மிக்க குளியல் சோப்புகளையோ எண்ணெய்களையோ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.