கயோலின் க்ளே முகச் சருமத்தில் செய்யும் நன்மைகள்!
முகச்சருமத்திற்கு பயன்படுத்தும் முல்தானி மெட்டி எப்படி ஒரு களிமண்ணோ அதேபோல்தான் இந்த கயோலினும் ஒரு களிமண்ணே. அந்தவகையில் இது முகச்சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கயோலினில் கயோலினைட் என்ற கனிமம் உள்ளது. இது அடுக்கான சிலிகேட்டை கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் இருக்கிறது என்றாலும், சீனாவில் உள்ள காவ் லிங் மலையில் அதிகம் எடுக்கப்படுகிறது. இந்த கயோலின் அனைத்து விதமான சருமத்திற்கும் நன்மை பயக்கும். இது அதிகம் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. சில நேரத்தில் பச்சை அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கலாம். கயோலின் களிமண்ணின் நிறம் வெண்மையாக இருக்கும்போதே, அதன் தரம் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கயோலின் நன்மைகள்:
1. சருமம் சுத்தமாக இருந்தாலே எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. அந்தவகையில் கயோலின் களிமண் இயற்கையாகவே ஒரு க்ளென்ஸராக செயல்படுகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
2. சில மாஸ்க்குகள் பயன்படுத்தும்போது நமது சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்களும் நீக்கப்பட்டுவிடும். ஆனால், கயோலின் களிமண் ஒரு மாய்ஸ்ட்ரைஸராக விளங்கி சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்கிறது.
3. இது ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகும். இயற்கையாகவே சரும துவாரத்தில் உள்ள செத்த செல்களை நீக்கி, புதிய செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4. ஆயில் ஸ்கின் உள்ளவர்களின் பெரும் தொல்லையான அதிகபடியான எண்ணெயை நீக்கி, தேவையான எண்ணெயை மட்டும் சருமத்தில் வைத்துக்கொள்ளும். இதனால் பருக்கள் குறையும்.
5. இதனை முகத்தில் மட்டுமல்ல தலை முடிக்கும் கூட பயன்படுத்தலாம். ஹேர் க்ளென்ஸராக விளங்கி, தலையில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும்.
6. இது உங்கள் சரும செல்களைத் தூண்டி, சருமத்தின் நிறத்தை சீராக வைத்துக்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
கயோலின் ஃபேஸ் பேக்ஸ்:
1. 2 தேக்கரண்டி கயோலின் களிமண்ணில், 2 தேக்கரண்டி குளிர்ந்த க்ரீன் டீ, அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் லாவண்டர் எண்ணெய் ( அத்தியாவசிய எண்ணெய் எதுவாயினும் பயன்படுத்திக்கொள்ளலாம்) ஆகியவை சேர்த்து கலக்கி முகத்தில் தடவலாம்.
2. அதேபோல் 2 தேக்கரண்டி கயோலின் களிமண்ணுடன் 3 டேபிள் ஸ்பூன் மசித்த அவகேடோ மற்றும் ரோஸ் வாட்டருடன் கலக்கவும். இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம்.
3. 2 தேக்கரண்டி கயோலின் களிமண்ணுடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் பேக் போடலாம்.
அதேபோல் குளிக்கும்போதும் தண்ணீருடன் கலந்து முகத்தில் தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு உங்கள் முகத்தில் கயோலின் களிமண்ணை பயன்படுத்தி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.