உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியை தரும் ஒரு அற்புத குளியல் பவுடர்தான் ஆரஞ்சு தோல் பவுடர். அதனை செய்யும் முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்ப்போமா?
உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள அதிக விலையிலான பாடி வாஷ்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி இழந்து, உடல் வியர்த்து கெட்ட வாடை வந்துவிடும். ஆகையால், அதற்கு பதிலாக இயற்கையாகவே ஆரஞ்சு தோல் குளியல் பவுடர் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு தோலின் நன்மைகள்:
ஆரஞ்சுப் பழத்தின் உள்பகுதியை விட, அதன் தோலில்தான் அதிக அளவிலான வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன.
ஆரஞ்சுத் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் அதன் வலுவான நறுமணம், வியர்வை மற்றும் அதன் மூலம் உருவாகும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, உடல் துர்நாற்றத்தை உடனடியாக நீக்குகிறது. குளித்த பிறகும் புத்துணர்ச்சியான சிட்ரஸ் வாசனையை இது உங்கள் உடலில் தக்கவைக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தின் மீது படிந்துள்ள இறந்த செல்களை மெதுவாக நீக்க உதவுகிறது. இதன் விளைவாக, சருமம் மாசு நீங்கிப் பளபளப்பாகிறது.
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு, ஆரஞ்சுத் தோல் பவுடர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி, பிசுபிசுப்புத் தன்மையைப் போக்குகிறது.
தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை
தேவையான பொருட்கள்:
1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
2. கடலை மாவு அல்லது பயத்த மாவு – 1 டேபிள்ஸ்பூன்
3. பன்னீர் (Rose Water) அல்லது தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சுத் தோல் பவுடருடன் கடலை மாவு அல்லது பயத்த மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், பன்னீர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்குக் குழைக்கவும்.
இந்தக் கலவையை உங்கள் சோப்புக்கு மாற்றாக உடல் முழுவதும் நன்கு தேய்த்து, மெதுவாக மசாஜ் செய்யவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
இந்தக் குளியல் பவுடரை தினமும் பயன்படுத்தலாம்.
இது செயற்கையான கெமிக்கல் சோப்புகளைப் போல் இல்லாமல், சருமத்தின் இயற்கையான PH அளவைப் பாதுகாக்க உதவுகிறது.
ஆரஞ்சுத் தோல் பவுடருடன் ரோஜா இதழ் பவுடரையும் (Rose Petal Powder) சேர்த்துப் பயன்படுத்தும்போது, வாசனை மற்றும் புத்துணர்ச்சி இன்னும் அதிகமாகும்.
இனி நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த பவுடரை பயன்படுத்தி குளியுங்கள்.