
நம் அனைவருக்குமே ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆரோக்கியமான கூந்தலுக்கு உணவு முறையை மட்டும் பின்பற்றாமல் கூந்தலை சிறப்பாக பராமரிப்பதன் மூலமாக முடிக்கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கூந்தலை பராமரிக்க சிலர் பிரஷ்ஷையும், இன்னும் சிலர் சீப்பையும் பயன்படுத்துவார்கள். இதில் எதை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நம்முடைய கூந்தலின் அமைப்பு, தன்மை போன்றவற்றை பொருத்தே முடிவு செய்ய வேண்டும்.
பிரஷ்ஷை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்.
கூந்தலை பராமரிக்க பிரஷ்ஷை பயன்படுத்துவது சீப்பை காட்டிலும் வேகமாக இருக்கும். பிரஷ்ஷில் Bristles என்று சொல்லக்கூடிய பற்கள் நிறைய இருப்பதால், சீப்பை விடவும் சுலபமாக சிக்குகளை நீக்க முடியும். பிரஷ்ஷை கூந்தலில் பயன்படுத்துவதன் மூலம் தலையில் இருக்கும் Natural hair oils சீராக பரவ உதவுகிறது, தலையில் இருக்கும் பொடுகுகளை நீக்குகிறது. அதுமட்டுமில்லாமல் பிரஷ் பயன்படுத்துவது தலையில் ஒரு நல்ல மசாஜ் செய்த உணர்வைக் கொடுக்கும்.
சீப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்.
தலைமுடி ஈரமாக இருக்கும் போது பிரஷ்ஷை விட சீப்பை பயன்படுத்துவதே சிறந்தது. முடி ஈரமாக இருக்கும் போது சுலபமாக உடையக்கூடிய தன்மையில் இருக்கும். எனவே, அகலமான பற்களைக் கொண்ட சீப்பை பயன்படுத்துவது கூந்தல் உடையாமல் பாதுகாப்பாக பராமரிக்க சிறந்த வழியாகும்.
கூந்தலில் சீப்பை பயன்படுத்தும் போது கீழிலிருந்து மேலாக சிக்கை எடுக்க வேண்டும். இதனால் கூந்தல் உடையாமலும், பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கலாம். கூந்தலில் இருக்கும் சிக்கை போக்க கன்டீஷனர் பயன்படுத்துவது சிறந்தது.
உலகில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீத மக்களுக்கு சுருட்டை முடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக சுருட்டை முடியில் பிரஷ்ஷை பயன்படுத்துவது தலைமுடியின் தன்மையை மாற்றுவதோடு கூந்தல் உடையவும் காரணமாக அமையும். சுருட்டை முடியை பராமரிக்க சீப்பை பயன்படுத்துவது சிறந்தது. நீளமான கூந்தல் உடையவர்கள் பிரஷ் மற்றும் சீப்பை இரண்டையுமே பயன்படுத்தலாம்.
எனவே, கூந்தல் பராமரிப்பில் சீப்பு அல்லது பிரஷ் எதை பயன்படுத்தினாலும் கூந்தலை மிருதுவாக கையாள வேண்டியது மிகவும் அவசியம். சிக்கு எடுக்கும் போது கவனமாகவும், பொறுமையாகவும் எடுக்க தொடங்குவது முடி உடைவதை தடுத்து ஆரோக்கியமாக இருக்க உதவும். கூந்தலை மென்மையாக பராமரிப்பதே ஆரோக்கியமாக கூந்தல் வளர்வதற்கு காரணமாக அமையும்.