Activated Charcoal
Can Activated Charcoal Really Benefit Your Skin?

Activated Charcoal உண்மையிலேயே சருமத்திற்கு பலனளிக்குமா?

Published on

சருமம் என்பது நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு. இது வெளிப்புற சூழலில் இருந்து நம்மை பாதுகாப்பதுடன் உடலின் உள் உறுப்புகளுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தங்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சமீபகாலமாகவே சருமப் பராமரிப்பு துறையில் ஆக்டிவேட்டட் சார்கோல் மிகவும் பிரபலமாகி வருகிறது. முகப்பரு, பிளாக் ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருப்பதாக பலர் நம்புகின்றனர். ஆனால், ஆக்டிவேட்டட் சார்கோல் உண்மையிலேயே சருமத்திற்கு பலன் அளிக்குமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

ஆக்டிவேட்டட் சார்கோல் என்றால் என்ன? 

ஆக்டிவேட்டட் சார்கோல் என்பது மரக்கரி. குறைந்த அடர்த்தி கொண்ட மரங்களை, அதிக வெப்பநிலையில் காற்றில்லாத சூழலில் சூடுபடுத்தி தயாரிக்கப்படும் ஒரு பொருள்.‌ இந்த செயல்முறையின்போது கார்பன் அணுக்களுக்கு இடையே ஏற்படும் நுண்துளைகள் அதிகரித்து அதன் பரப்பு பல மடங்கு அதிகரிக்கும். இந்த நுண் துளைகளின் காரணமாகவே, ஆக்டிவேட்டட் சார்கோல் மற்ற பொருட்களை தன்னை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். 

ஆக்டிவேட்டட் சார்கோல் சருமத்திற்கு பலன் அளிக்குமா? 

ஆக்டிவேட்டட் சார்கோல், தன்னை நோக்கி அழுக்கு மற்றும் எண்ணெயை இழுக்கும் தன்மை கொண்டதால், இது சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அழுக்கு எண்ணெய் போன்றவற்றை திறம்பட நீக்குகிறது. இதனால், முகப்பரு, பிளாக் ஹெட்ஸ் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

ஆக்டிவேட்டட் சார்கோல் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாக்கும். மேலும், இது சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
சரும ஆரோக்கியத்திற்கு அழகு தரும் இயற்கை உணவுகள்!
Activated Charcoal

எதிர்மறை விளைவுகள்: 

என்னதான் இது சருமத்திற்கு பல நன்மைகளை செய்தாலும், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களையும் இது நீக்கிவிடுகிறது. இதனால், சருமம் உலர்ந்து இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். சிலருக்கு ஆக்டிவேட்டட் சார்கோல், அரிப்பு மற்றும் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தும். சிலருக்கு அதிகப்படியான சரும எரிச்சலை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் சருமத்திற்கு இது சரிப்பட்டுவருமா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சரும வகை, சருமப் பிரச்சனை ஆகியவற்றைப் பொறுத்து இதன் விளைவுகள் மாறுபடும். எனவே, ஆக்டிவேட்டட் சார்கோல் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு முன் ஒரு சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், இந்த தயாரிப்புகளை மிதமாகவே பயன்படுத்துவது முக்கியம். அதிகமாக பயன்படுத்துவது சருமத்தை பாதிக்கலாம்.‌ 

logo
Kalki Online
kalkionline.com