நமக்கு சிறு வயதில் கையில் தோலுரியும் போது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அதை காண்பித்தால் "வளர்வதற்காக அது உரியலாம்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். வளர்ந்த பின், வலியில்லாததால் என்னவோ, கைகளில் தோலுரிவதை நாம் பெரிய விசயமாக எடுத்துக் கொள்வதில்லை. அதை அப்படியே விட்டுவிட்டால் 2 முதல் 3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். இருந்தாலும், கைகளில் தோலுரிதல் சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதை உரித்து எடுக்கும் வரை நிம்மதியாக இருக்க முடியாது. கைகளில் தோலுரிதல் ஏன் ஏற்படுகிறது? அதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும், தோலுரிவதை தடுக்கும் வழிகளையும் இந்த பதிவில் காணலாம்.
கைகளில் தோலுரிவதற்கான காரணங்கள்:
கெமிக்கல்ஸ் நிறைந்த சோப், க்ரீம்கள் போன்ற சருமப் பராமரிப்புப் பொருள்களை பயன்படுத்தும்போது, அதன் விளைவாகக் கூட கைகளில் தோலுரியலாம்.
சுத்தம் செய்தல், துணி துவைத்தல், பாத்திரங்கள் துவைத்தல் போன்ற அன்றாட வேளைகளில் நம் பயன்படுத்தும் கெமிக்கல்ஸ் கலந்த துப்பரவு பொருள்கள், கரைப்பான்கள் போன்றவற்றின் எதிர்வினையாலும் கைகளில் அலர்ஜி ஏற்பட்டு தோலுரியலாம்.
வறண்ட மற்றும் குளிர் காலங்களில் சருமம் வறண்டு போவதாலும் தோலுரிதல் ஏற்படலாம்.
கைகளை சுத்தப்படுத்த வலுவான க்ளென்சர்களைகப் பயன்படுத்துவதும் தோல் உரிவதற்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமன்றி பாக்டீரியா தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு, எக்ஸிமா, சொரியாசிஸ், வைட்டமின் சமநிலையின்மை, அக்ரல் பீலிங் போன்ற நோய் மற்றும் குறைபாடுகளினாலும் கைகளில் தோல் உரியலாம்.
கைகளில் தோல் உரிதல் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை:
ஒரு கப் தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதில் கைகளை 10 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். வெறும் தண்ணீரிலும் கூட கைகளை ஊறவைக்கலாம். இதன் மூலம் கைகளை ஈரப்பதத்துடன் வைக்க முடியும்.
கைகளுக்கு விட்டமின் ஈ எண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு மஜாஜ் செய்யலாம். அல்லது இரவில் தூங்கப் செல்வதற்கு முன் காற்றாழை சாறை தடவி மஜாஜ் செய்திட்டு காலையில் எழுந்து கைகளை கழுவ வேண்டும்.
கெமிக்கல் நிறைந்த சோப்புகள் மற்றும் கிரீம்களைத் தவிர்த்து சருமத்தை மென்மையாக்கும் கிரீம்கள், சோப்புகள் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம்.
கைகள் வறண்டு போவதைத் தடுக்க பகலில் முடிந்தவரை ஷியா வெண்ணெய் மற்றும் கொக்கோ வெண்ணெய் கொண்ட மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம்.
இரசாயனங்கள் மற்றும் கெமிக்கல்களை கையாளும் போது பாதுகாப்புக்காக கையுறைகளைப் பயன்படுத்தலாம்.
கைகளில் தோலுரியும்போது வலி தென்பட்டாலோ, தோல் உரிதல் தொடர்ந்தாலோ, வீட்டு வைத்தியமோ அல்லது கடையில் கிடைக்கும் சிகிச்சைகளோ நிவாரணம் அளிக்கவில்லை என்றாலோ உடனடியாக சரும மருத்துவரை அணுகவும்.