கிளாசிக் ஃபேஷன்!

கிளாசிக் ஃபேஷன்!

தினந்தோறும் வீட்டில் சமைப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், சமைப்பது சுலபமா அல்லது  ஒவ்வொரு முறையும் என்ன சமைக்க வேண்டும் என்று முடிவு செய்வது சுலபமா என்று. பெரும்பாலானோர் முதல் ஆப்ஷனை தேர்வு செய்வர். ஏனெனில், ஒரே வாரத்தில் ஒரே வகையான உணவு பல முறை மீண்டும் சமைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சமைத்தால், சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்காது. இதே போல், என்ன உடை வாங்க வேண்டும் என்று, குறிப்பாக பெண்கள் தங்களின் பல மணி நேரங்களை ஜவுளிக் கடையில் செலவிடுகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆடையானது நிறைய நாட்களுக்கு ‘ட்ரெண்டில்’ இருக்குமா இல்லையா என்ற விஷயம் அவர்களின் முடிவெடுக்கும் திறனின் முக்கியக் காரணி.

கஸ்டமர் – கன்ஸ்யூமர் [Customer – Consumer] தமிழில் வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோர் என்று அர்த்தம். ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குபவரை கஸ்டமர் / வாடிக்கையாளர் என்றும், அந்தப் பொருளை உபயோகப்படுத்துபவரை கன்ஸ்யூமர் / நுகர்வோர் என்றும் அழைக்கிறோம். ‘நான் வாங்கும் பொருளை நான் தானே உபயோகப்படுதுகிறேன், அப்படியிருக்க இந்த கஸ்டமர் – கன்ஸ்யூமர் வித்தியாசம் எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கிறீர்கள்  தானே? எல்லா சூழ்நிலைகளிலும் அது சாத்தியமல்ல. உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் டயப்பர்களை பணம் கொடுத்து வாங்குவது  நீங்கள் தான். இருப்பினும், அவற்றை உபயோகப்படுத்துவது என்னமோ உங்கள் குழந்தைகள் தான். ஆகையால் இங்கு நீங்கள் கஸ்டமர் மட்டும் தான்; கன்ஸ்யூமர் உங்கள் குழந்தைகளே.  அதே போல், ஒரு ஆடையை வாங்கும் பொழுது நாம் வெறும் கஸ்டமரே. அதை உடுத்தும் பொழுது தான் கன்ஸ்யூமர் ஆகிறோம். அதே சமயம் அந்த குறிப்பிட்ட உடை ‘அவுட் ஃஆப் ஃபேஷனாக’ [Out of fashion] ஆகிவிட்டால் அதை நாம் உடுத்த மாட்டோம். மறுபடியும் கஸ்டமர்  என்ற கட்டத்திற்கு வந்து விடுகிறோம்.

குறுகிய கால கட்டத்திற்கு மட்டும் ட்ரெண்டில் இருக்கும் புதிதாக உதித்த செயல்பாடுகளை, பொருட்களை அல்லது உடைகளை ஃபேட் [Fad] என்பர். ஒருவேளை அவை பலரால் ஈர்க்கப்பட்டும், ஏற்கப்பட்டும் மேலும் பின்பற்றப்பட்டால் அவை ‘கிளாசிக் ஃபேஷன்’ [Classic Fashion] என்ற வகையில் புகுந்து விடும். இல்லையெனில், காலப்போக்கில் மக்களும் அதை மறந்து விடுவர். நாம் வாங்கும் உடைகள் ஃபேட் உடைகளா அல்லது கிளாசிக் ஃபேஷனா என்று வகைப்படுத்துவது மிக சுலபம்.‘கிளாசிக் ஃபேஷன்’ [Classic Fashion] என்பது இருபது வருடங்களுக்கு சின்ன சின்ன மாற்றங்களை ஏற்றுக்கொண்டு ட்ரெண்டில் நிலைத்து இருப்பது. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்ப கால படங்களில் பார்த்த கிராப் டாப்பும் [Crop Top] பெல் பாட்டம் ஜீன்ஸும் [Bell Bottom Jeans] இன்றைய புதிய படங்களிலும் காண முடிகிறது. அவை இன்னும் ட்ரெண்டில் இருக்கின்றன. ஒரு சில பாட்டர்ன்களை [Pattern] மட்டும் புரிந்து கொண்டால் நாமும் ஃபேஷன் மாடலாக ஜொலிக்கலாம். அந்த பாட்டர்ன்கள் அனைவருக்கும் பொருந்தும்.

1. முழு ஸ்லீவ் வைத்த வெள்ளை சட்டை: இந்த சட்டை அலுவலகம்,    திருமணம், பயணம் செய்யும் பொழுது என பல சந்தர்ப்பங்களில் உடுத்த வசதியாக இருக்கும். பெண்கள் இதை பேண்டுடனும் உடுத்தலாம் அல்லது ஸ்கர்ட்டுடனும் உடுத்தலாம்.

2. ப்ளைன் டி-ஷர்ட்: எந்தவொரு பிரிண்ட்டும் இல்லாத சாதாரண டி-ஷர்டும் கிளாசிக் ஃபேஷனில் அடங்கும். இதற்குப் பொருத்தமான லெக்கின்ஸ், ஜீன்ஸ் அல்லது ஸ்கர்ட் என எது வேண்டுமானாலும் உடுத்தலாம்.

3. சம்மர் டிரஸ்: முழங்காலுக்கு கீழ் வரை வரும் டிரஸ், கோடையில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் உடுத்த வசதியாக இருக்கும்.

4. எந்த வித பிரிண்ட்டும் இல்லாத ஜாக்கெட்டும், ப்ளேசரும் கூட இன்னும் ட்ரெண்டில் இருந்து விலகவில்லை. ஒருவேளை ஸ்ட்ரைப்ஸ் [stripes] போன்ற கோடுகள் இருந்தாலும், அவை மிகவும் மெல்லியதாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

5. ஒட்டுமொத்தத் தோற்றம் நம்மை நேர்த்தியாக காட்டினால் போதும். அதிக வேலைப்பாடுகள் உள்ள உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த விஷயம் எல்லா வித உடைகளுக்கும் பொருந்தும், சேலை, சுடிதார் மற்றும் குர்த்தி உள்பட. 

6. உடை மட்டுமல்ல, நாம் அணியும் மேக்கப்பும் அணிகலன்களும் கூட நேர்த்தியாக இருத்தல் அவசியம். சிறிய தோடுடன் மெல்லிய நெக்லசும் லேசான மேக்கப்பும் முழு தோற்றத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும்.

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால், அவுட் ஃஆப் ஃபேஷனாகி விடுமோ என்ற பயமின்றி உடைகளை வாங்கலாம். ஃபேட் போன்ற பொருட்களை வாங்க முடியாமல் போய் விட்டால் கவலை வேண்டாம். அவை என்றும் நிரந்திரமாக நிலைத்து நிற்பதில்லை. நீங்கள் வாங்கும் பெரும்பாலான பொருட்களின் கஸ்டமரும் நீங்களே; கன்ஸ்யூமரும் நீங்களே. முடிவில் உங்களுக்கு எது பொருந்தும், எது வசதியாக இருக்கும் என்று முடிவு செய்வதும் நீங்களே. ஃபேடை பின்பற்றா விட்டாலும் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லையே! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com