

களிமண் முகமூடிகள் (Clay masks) சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, துளைகளை சுத்தப்படுத்தி, சருமத்தை புத்துணர்ச்சியூட்ட உதவுகின்றன. இவை சருமத்தை மென்மையாக்கவும், மேம்படுத்தவும், எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவும், முகப்பரு போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகின்றன. ஒவ்வொரு சருமம் வகைக்கும் ஏற்றவாறு பலவகையான களிமண் முகமூடிகள் உள்ளன.
1) களிமண் முகமூடிகளின் வகைகள்:
a) பெண்டோனைட் களிமண் முகமூடி (Bentonite Clay):
எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புக்கு உள்ளான சருமத்திற்கு மிகவும் ஏற்றது. எரிமலை சாம்பலில் இருந்து பெறப்படும் இக்களிமண் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளன. இவை முகப்பரு வெடிப்புகளுக்கும், எண்ணெய் பசை சரும வகைகளுக்கும் ஏற்றது.
b) முல்தானி மிட்டி:
புல்லர்ஸ் எர்த் என்றும் அழைக்கப்படும் இந்த களிமண், மந்தமான சருமத்தை மேம்படுத்த உதவும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. எண்ணெய் மற்றும் அசுத்தங்களை உறிஞ்சுவதற்கு பயன் படுத்தப்படும் ஒரு பாரம்பரிய களிமண்ணாகும்.
c) வெள்ளைக் களிமண்(Kaolin):
இது பொதுவாக வெள்ளைக் களிமண் என்று அழைக்கப்படும் ஒரு மென்மையான களிமண் வகை. இந்த களிமண் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கும், வறண்ட சருமத்திற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.
d) பச்சைக் களிமண்(French Green clay):
இது கடலின் களிமண் என்றும் அழைக்கப்படுகிறது. நச்சு நீக்கும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. எண்ணெய் சருமத்திற்கு சீபத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. சருமத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சி, நச்சுக்களை நீக்குகிறது.
e) இளஞ்சிவப்பு களிமண்:
இது சிவப்பு மற்றும் வெள்ளை களிமண்ணின் மென்மையான கலவை. சருமத்தை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் எரிச்சலைக் குறைக்கிறது. உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மென்மையானது மற்றும் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
f) மொராக்கோ ரஸ்ஸோல் களிமண்:
இது முதிர்ந்த சருமத்திற்கு உதவும் களிமண் வகைகளில் ஒன்று. சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
2) எவ்வாறு பயன்படுத்துவது?
களிமண் நன்றாக ஊடுருவ உதவும் வகையில் சுத்தமாக வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு மோதிர விரல் அல்லது ஒரு அப்ளிகேட்டரை பயன்படுத்தி மெல்லிய சீரான அடுக்காக தடவி, 10 நிமிடங்கள் உலரவிடவும். வறண்ட சருமமாக இருந்தால் எரிச்சலை தவிர்க்க விரைவில் அகற்றலாம். வறட்சியை தடுக்கவும், சருமம் மாய்ஸ்சரைசரை உறிஞ்சவும் உதவும் வகையில் முகமூடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் நன்கு உலர்ந்ததும், சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
3) இவற்றின் நன்மைகள்:
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி விடுகிறது. துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் பாக்டீரியா போன்ற துளைகளை அடைக்கும் அசுத்தங்களை நீக்கி, அவற்றை சுத்தப்படுத்துகிறது. லேசான முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைத்து, தோற்றத்தை மேம்படுத்துகிறது. சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.
4) கவனிக்க வேண்டியவை:
a) வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்துவது சருமத்தை எரிச்சல் அடையசெய்யும்.
b) வறண்ட அல்லது உணர்திறன் அதிகம் உள்ள சருமம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இவை சில சரும வகைகளுக்கு எரிச்சலூட்டும். எனவே தோல் வகைக்கு ஏற்ற சரியான களிமண் முகமூடியை தேர்ந்தெடுப்பது அவசியம்.
c) களிமண் முகமூடியை பயன்படுத்திய பிறகு, சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் இருக்க ஒரு மாய்ஸ்சரைசர் அல்லது சீரம் பயன்படுத்துவது அவசியம்.
d) களிமண் முகமூடிகள் முகப்பருவின் மூலக்காரணமான ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்யாது. எனவே கடுமையான முகப்பருக்கள் இருந்தால் மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.