Beauty care...
Beauty care...Image credit - osheaherbals.com

நம்மை ஆக்டிவ்வாக வைப்பது மட்டுமல்ல, அழகுபடுத்தவும் காபித்தூள் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா?

Published on

தினமும் காலையில் காஃபி குடித்து விட்டு அன்றைய நாளை சுறுசுறுப்பாக தொடங்குபவர் பலர். சற்றே சோம்பலாக உணர்ந்தாலும் ஒரு கப் காஃபியை குடித்துவிட்டு வேலையை தொடருபவர்கள் நிறைய இருக்கிறார்கள். காபி, அருந்துவதற்கு அருமையான பானம் மட்டுமல்ல,  நம்மை அழகுப்படுத்தவும் எப்படி உதவுகிறது என இந்தப் பதிவில் பார்ப்போம்.

கருவளையம் போக்கும்;

இரவில் சரியாக தூங்காவிட்டால் கண்களுக்கடியில் கருவளையம் தோன்றி முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.  காபியில் உள்ள காஃபின் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். சிறிதளவு காபித்தூளை ஆலிவ் ஆயில், மற்றும் தண்ணீரில் கலந்து கண்களுக்கு கீழே கவனமாக அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின்பு பார்ப்பதற்கு முகம்  ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

தலைமுடி ஆரோக்கியம்

காபி உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டும். முடி  உதிர்தலைத் தடுக்கும். தலை முடியை மென்மையாக மாற்றுவதற்கு காபிப்பொடி பயன்படுகிறது. தலையில் நிறைய ஷாம்பு உபயோகிப்பதால் முடி கொட்டிக் கொண்டே இருக்கும். தலைமுடியை நேர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்ற காபிப்பொடியை தண்ணீரில் கரைத்து தலையில் பேஸ்ட் போல அப்ளை செய்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறியிருக்கும்.

காபி  ஸ்க்ரப்

காபித்தூளில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் இயற்கையான எக்ஸ்போலேட்டிங் குணங்கள் சருமத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து அதனுடன் சிறிதளவு காபித்தூளை  சேர்த்து கலக்கவும். அதை முகத்தில் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் அதை கழுவி விட வேண்டும். இது இறந்த சரும செல்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

காபியில் உள்ள காஃபின் ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் தோலை இறுக்கவும் உதவுகிறது.  முகத்தில் உள்ள நிணநீர் வடிகாலை ஊக்குவிக்கிறது. இதனால் முகத்தில் உள்ள சதை தொங்காமல் முகம் டைட்டாக இருக்கும். இதனால் இளமையான  தோற்றம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சுருக்கம் இல்லாத 8 கோடைக்கால பயண ஆடைகள்!
Beauty care...

காபித்தூள் ஃபேஸ் மாஸ்க்

காபியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஃப்ரீ ரேடிக்கிள்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஏற்படும் கேடுகளைத் தடுத்து சருமத்தைப்  பாதுகாக்க உதவுகிறது. சிறிதளவு தயிர், தேன், கற்றாழை ஜெல், கொஞம் காபித்தூள் போன்றவற்றை கலந்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விடவேண்டும். முகம் பளபளப்பாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கும்.

காபித்தூளின் இதர பயன்கள்;

குளிர்சாதனப் பெட்டிகளில் சில சமயம் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உரித்து வைக்கும்போது அதிலிருந்து ஒரு விதமா நாற்றம் வீசக்கூடும். சில காபிக்கொட்டைகளை ஒரு கப்பில் வைத்து அல்லது சிறிதளவு காபித்தூளை ஒரு கப்பில் போட்டு பிரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்ட வாடை அகன்றுவிடும்.

கோடை காலத்தில் வீட்டில் எறும்பு மற்றும் ஈக்களின் தொல்லை ஜாஸ்தியாக இருக்கும். ஒரு சின்ன கிண்ணத்தில் காபி கொட்டைகள் அல்லது சிறிதளவு காபித்தூளை நிரப்பி பூச்சிகள் நடமாடும் இடத்தில் வைத்துவிட்டால் அவை வீட்டை விட்டு ஓடிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com