ஆதிபராசக்தி அம்மனுக்கு விரதமிருக்கும் பெண்கள் அணியும் சிவப்பு புடவைகளை கவனித்து பாருங்கள். பெரும்பாலும் அவைகள் சுங்குடிச் சேலைகளாகத்தான் இருக்கும்.
அந்தக் காலம் முதல் இன்று வரை கிராமப்புற பெண்கள் மற்றும் நகரப் பெண்கள்வரை விரும்பும் புடவை வகைகளுள் ஒன்றாக உள்ளது சுங்குடிச் புடவைகள். இந்த வகை சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர்களாக உள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியும் மதுரை மாவட்டமும்.
சின்னாளபட்டியில் சுங்குடிச்சேலை தயாரிப்பு என்பது பாரம்பரியமிக்க தொழிலாகவே இருந்து வருகிறது. இந்த சேலைத் தயாரிக்க மொத்தமாக வரவழைக்கப்பட்ட வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர். அச்சு வேலை முடிந்த பின்பு, ஜவ்வரிசி கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர வைக்கின்றனர். சுங்குடிச் சேலை ரெடி. சிங்கிள், டபுள்கலர், முடிச்சு, கல்கட்டா, கைபுட்டா என பல்வேறு வகைகளில் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.
சுங்குடிச்சேலை தயாரிப்பில் கைத்தறியில் சேலை நெசவு முதல் சாயம் ஏற்றுவது, பிரிண்டிங் செய்வது என அனைத்துமே இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் மனித உழைப்பினால் மட்டுமே நடைபெறுகிறது என்பதால் சேலை தயாரிப்பது முதல் விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் வரை இத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சுங்குடிச்சேலை மட்டுமின்றி சின்னாளப்பட்டி பட்டு சேலைகளும் இங்கு தயாராகிறது.
அடுத்து மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் 400 ஆண்டுகளுக்கு முன் மஸ்லின் நெய்யும் மசூலிப்பட்டினக் கலைஞர்களை தமிழ்நாட்டின் மதுரைக்கு அழைத்து வந்தார். அவர்களே தமிழ்நாட்டின் பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகை இழைகளையும் சேர்த்து சுங்குடி என்ற புதிய துணிவகையை அறிமுகம் செய்தனர் என்பதே இதன் வரலாறு.
மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின்னணியில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும்.
இச்சேலைகள் 16 கஜம் புடவை முதல் இந்த காலத்துக்கு ஏற்ப பல்வேறு டிசைன்களில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற மாற்றங்களுடன் தற்போது தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெற்ற இச்சேலைகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் துணி வகைகளான "பாந்தினி" அல்லது "பந்தேஜி" புடவைகளுடன் ஒத்துள்ளவையாக கருதப்படுகிறது. சுங்குடிச்சேலைகளுக்கு புவிக்குறியீட்டு எண் தரப்பட்டு அவை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பு.
பெண்களுக்கென ஏராளமான நவீன உடைகள் வந்தாலும் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய சுங்குடி சேலைகளுக்கு இன்றும் மவுசு உள்ளது. தற்போதைய காலத்து பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் சுங்குடி சேலைகளை விரும்பி அணிவது குறிப்படத்தக்கது.