பண்டைய காலத்து தமிழர்கள் வீரத்திற்கு மட்டும் பெயர் போனவர்கள் கிடையாது. விதவிதமான தங்க அணிகலன்களை அணிவதிலும் சிறந்து விளங்கினர்.
தமிழர்களின் அணிகலன்களை தலையணிகள், செவியணிகள், கழுத்தணிகள், மார்பணிகள், கையணிகள், இடையணிகள், காலில் அணியும் அணிகலன்கள் என்று பிரிக்கலாம்.
தலையணிகளில் தொய்யகம், பூரப்பாளை, புல்லகம் ஆகியவை உள்ளது. தொய்யகம் என்றால் நெத்திச் சுட்டியாகும். நெற்றியில் சுட்டிக்காட்டுவது போல அமைந்ததால் நெத்திச்சுட்டி என்று பெயர் பெற்றது. ஆனால் பழங்காலத்தில் இதற்கு பெயர் தொய்யகம். பூரப்பாளை என்பது நெத்திச்சுட்டியின் இரண்டு பக்கத்திலும் மாலை போல செயின் வருவதைக் காணலாம். அதற்கு பெயரே பூரப்பாளையாகும். புல்லகம் என்றால் சூரிய பிரபை, சந்திர பிரபையாகும். தலை வகுடு எடுத்த பின்பு இருபுறமும் பொருத்தக்கூடியது. இது சூரிய வடிவில் இருந்தால் சூரிய பிரபை, சந்திர வடிவில் இருந்தால் சந்திர பிரபையாகும்.
காது வளர்க்கும் பழக்கம் தமிழர்களிடம் அதிகமாக இருந்தது. இப்படி காதை வளர்த்த பிறகு அந்த ஓட்டையில் பனையோலையை சுருட்டி வைத்ததாக ஒரு மரபை சொல்வார்கள். குதம்பை, குழை இரண்டுமே காதை ஒட்டி போடக்கூடியதாகும். குண்டலம் என்றால் தற்போதைய ஜிமிக்கி கம்மல்தான். இதில் மகர குண்டலம், வியாழ குண்டலம் என்று நிறைய வகை உண்டு.
கழுத்தணிகளில் கண்டிகை, சரப்பளி, சவுடி, மணியாரம், சன்னவீரம் ஆகியவை இருந்தது. கண்டிகை என்பது கழுத்தை ஒட்டி போடக்கூடிய அணிகலன். இந்த காலத்து சோக்கர் போன்ற அணிகலன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள். அதை ஒட்டியிருப்பதால், கண்டிகை என்ற பெயர் பெற்றது. சரப்பள்ளி என்பது இருக்குற செயினிலேயே நீளமாக போட்டு கொள்ளும் ஒரு அணிகலன்.
நிறைய பெண்களுக்கு நீளமாக செயின் போட்டுக் கொள்வதில் விருப்பம் உண்டு. காசுமாலை, மாங்காய் மாலை நீளமாக இருந்தால் எப்படியாருக்குமோ அதுவே சரப்பள்ளியாகும். சவடி என்பது ரொம்ப தட்டையாக அணியக்கூடிய அணிகலன். இது கழுத்தை ஒட்டியும் வராது மிகவும் நீளமாகவும் வராது. மணியாரம் என்பது மணிகளால் கோர்க்கப்பட்டு ஆரமாக அமைவது. இதில் ஒரு சரம், இரு சரம், முச்சரம் என்று இருக்கிறது. சன்னவீரம் என்பது பிராமணர்கள் அணியும் பூணூல் போன்று இருக்ககூடியதாகும். அடுத்த பார்க்க விருப்பது மார்பணிகள். பூணூல், உரஸ்சூத்திரம், ஸ்தன சூத்திரம், உதரபந்தமாகும்.
கையணிகளின் வகைகள் தோல்வளை, கடகவளை, கைவளை, கைசரி, பரியகம், மோதிரங்கள். தோல்வளை என்பது திருமண வீடுகளில் அணிந்திருக்கும் அணிகலன்களை பார்த்தால் தெரியும் வங்கி என்று பெண்கள் கைகளில் அணியக்கூடியதாகும். கடகவளை முழங்கையை ஒட்டிவரக்கூடிய அணிகலன். தோல்வளையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால் கடகவளையில் வேலைப்பாடுகள் செய்திருக்காது. கைவளை என்பது வலையல்கள்தான். கைமணிக்கட்டு அருகே அணியக்கூடிய அணிகலன். கைச்சரி என்பது கைவிரல் மோதிரங்களுடன் சூடகம் அதாவது பிரேஸ்லெட்டுடன் இணைப்பது தான் சூடகம். கைச்சரி நடுவிலே பதக்கம் போல வந்தால் அதை தான் பரியகம் என்று சொல்கிறோம். கைவிரல் மோதிரங்கள் நம் அனைவருக்குமே தெரியக்கூடிய ஒன்றுதான் விரல்களில் அணிவது.
இடையணிகள் இரண்டு உண்டு, மேகலை அரைப்பட்டிகை என்பதாகும். மேகலை என்பது பெண்கள் அணியக்கூடிய ஒட்டியாணமாகும். ஆண்கள் அணிவதற்கு பெயர் அரைப்பட்டிகை.
கடைசியாக கால்களில் அணியக்கூடிய அணிகலன்கள், பரியகம், பாடகம், வீரக்கழல், சிலம்பு, கிண்கிணி ஆகியவையாகும். பாடகம் என்பது தண்டை போன்ற அணிகலன். கால் மோதிரத்துடன் இணைவது போல் அமைந்தால் பரியகம். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் பரியகம் அணிந்தார்கள். ஆண்கள் அணிவது வீரக்கழல். பெண்கள் அணிவது சிலம்பு. கொலுசிலேயே அதிகமாக முத்து வைத்திருப்பதைதான் கிங்கிணி என்று சொல்வார்கள். பண்டைக்காலத்து தமிழர்கள் இத்தனை வகையான அணிகலன்களை அணிந்திருந்தார்கள் என்பது ஆச்சர்யத்தை கூட்டுகிறது.