
சிலர் எப்பொழுதும் நடந்துகொண்டே இருப்பார்கள். அல்லது வெளியூர், வெளிநாடு என்று சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் உன் காலில் என்ன சக்கரமாக கட்டி இருக்கு. எப்பப் பார்த்தாலும் சுத்திக்கிட்டே இருக்கிறாயே? என்று கேட்பதுண்டு. மேலும் உடம்பில் தலையைத் தவிர வேறு இடங்களில் ரோமங்கள் அதிகமாக இருந்தால் அதை சிறப்பித்துக் கூறுவது இல்லை. ஆனால் ரோமங்கள் கூடிய கால்கள் என்ன சொல்கிறது? அப்படி பல்வேறு அமைப்பு உடைய கால்களைப் பற்றிய சிறப்புத் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் இதோ;
முழங்கால் மூட்டுக்கள் யானையின் மத்தகத்தைப்போல அமையப் பெற்றிருந்தால் நல்ல யோகசுகம் உண்டாகும். பருத்திருந்தால் நல்ல பதவி கிட்டும் என்கிறது கால்களைப் பற்றிய குறிப்பு.
முழங்கால் உரோமங்கள் வண்டுகளைப்போல கறுத்தும், மென்மையாகவும், வழவழப்பாகவும், பளபளப்பாகவும், நுண்மையாகவும் இருந்தால் பெரும் செல்வங்களும், பதவிகளும் கிட்டும். உரோமங்கள் நெருக்கமாக அமைந்திருந்தால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குவர். சுருள்களாகவும், அதிகமாகவும் ரோமங்கள் காணப்பட்டால் வீர தீரமுடையவர்களாக விளங்குவார்களாம்.
முழங்கால்கள் சதைப்பற்றுடையனவாகவும், எலும்புகள் அனைத்தும் உள் மறைந்ததாகவும் அதாவது உள் மறைந்த எலும்புகளை கொண்டனவாகவும், மானின் முழங்கால்களைப் போன்றும் மென்மையான உரோமங்களை உடையனவாகவும், முறையான அழகான அமைப்பும் உடையவர்களுக்கு செல்வ வசதிகளுக்குக் குறை இருக்காது என்கிறது முழங்கால் சாஸ்திரம்.
கால்கள் மிருதுவாக இருப்பவர்களுக்கு விசித்திர பிராப்தி உண்டாகுமாம். கால்களில் எந்த பக்கத்திலாவது சக்கரம் அமையப் பெற்றவர்கள் உலகம் சுற்றுபவர்களாக இருப்பார்களாம். நிலையாக ஓரிடத்திலும் தங்கி இருக்க மாட்டார்களாம். நல்ல காரியங்கள் செய்வதற்கு தயங்காதவர்கள் இவர்கள்தானாம்.
கால்கள் நீண்டிருந்தால் சத்ய தர்மம் உடையவராகவும், பாதயாத்திரை ஸ்தலயாத்திரை, க்ஷேத்ராடனம் செய்வதில் நாட்ட முடையவர்களாகவும், தன்மானம் மிக்கவராகவும், கம்பீரமான நடை உடை பாவனைகளை உடையவராகவும் விளங்குவார்கள். அதோடு பொதுமக்களின் மதிப்பைப் பெற்று திகழ்பவர்கள் இப்படிப்பட்ட கால்களை உடையவர்கள்தான் என்கிறது கால்களில் லட்சண சாஸ்த்திரம்.
முழங்காலுக்கு மேல் உயரமாகவும், அதற்குக் கீழ் குட்டையாகவும் அமையப்பெற்ற கால்களை உடையவர்களுக்கு வெளிநாடுகளில் உத்தியோகம் அல்லது வாணிபத்தொடர்பு உண்டாகுமாம்.
முழங்கால்கள் இரண்டும் வித்தியாசமின்றித் தசைப்பற்றுடன் கூடியனவாய்த் தசைப்பற்று சிறப்பாகவும், புஷ்டியாகவும் அமையப் பெற்றவர்களுக்கு அரசு செல்வாக்கும், அந்தஸ்தும், பூரண ஆயுளும் உண்டாகும். முழங்கால்கள் சிறியனவாகவும் அழகாகவும் திரண்டு உருண்ட சதைப்பற்றுடன் அமையப் பெற்றவர்கள் உலகப் புகழ்பெற்றவர்களாக திகழ்வார்கள்.
பின்னங்கால்கள் சிறந்து தசைப்பற்றுடன் குண்டாக இருந்து ரோமங்கள் மூடியனவாக அழகாக இருந்தால் அவர்களுக்கு ராஜயோகம் உண்டாகும். யானையின் துதிக்கையைப் போன்ற பின்னங்கால்கள் அமையப் பெற்றிருந்தால் தன, தானிய விருத்தி உண்டாகும்.
பின்னங் கால்கள் குட்டையாக அமையப் பெற்றவர்கள் அநேக சுகங்களை அனுபவிக்கும் பிரபுக்களாகத் திகழ்வார்கள் என்கிறது கால்களை பற்றிய சாஸ்திர குறிப்பு.
குதிகால்கள் சமமாக இருப்பது மிகுந்த நன்மை அளிக்கும். பெரியனவாக இருந்தால் தீர்க்காயில் உண்டாகும். குதிகால் அழகாகவும், குமிழைப் போலவும் அமையப் பெற்றிருந்தால் எடுத்த காரியம் எதுவாயினும் வெற்றி பெற்று ஜெயசீலராக விளங்குவார்கள்.
குதிகால்கள் பூச்செண்டைப்போல மென்மையாகவும், அழகாகவும் அமையப்பெற்றிருந்தால் அவர்கள் நீதிபதிகளாகவும், நியாய நேர்மைகளுக்கும், சத்திய தர்ம பரிபாலனத்துக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.
குதிகால்கள் முற்றிய கிழங்கைப்போல உருண்டு திரண்டு அமையப்பெற்று இருந்தால் செல்வங்கள் அனைத்தையும் பெற்று பெருமையுடன், புகழும் பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறது சோதிடம்.
கணுக்கால்களின் கரடுகள் உள்ளே அடங்கியனவாகவும், மறைவாகவும், தாமரை மொட்டைப் போலவும் அமைய பெற்றவர்கள் பெரும் செல்வர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம்.
சிலரின் பின்னங்கால்களை பார்த்தால் ஆமையின் முதுகை போல தோற்றம் உடையதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மக்களின் மதிப்பைப் பெற்ற தலைவர்களாக விளங்குவதுடன், மிகவும் சாமர்த்தியசாலிகளாகவும், புத்தி நுட்பம் உடையவர்களாகவும், பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது சாஸ்திரம்.
உடல் எடையை சரியாக பராமரித்து வந்தால் முழங்காலுக்கு சுமையிராது. முழங்கால்கள் பலமாக இருந்தால் கணுக்கால்களில் வலி வராது. கடைசி வரை நன்றாக நடந்து நம்முடைய வேலைகளை நலமாக செய்து வாழலாம். ஆதலால் உடல் பருமனை குறைத்து கால்களுக்கு வலுவூட்டி, நிதானமாக நடந்து எல்லா வளமும் நலமும் பெற்று திகழ்வோம் ஆக!