இயற்கையான மூலிகைகளை வைத்து தலை முடியை நன்றாக பராமரித்து பேன், பொடுகு, தலை வழுக்கை போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். இயற்கை கண்டிஷனர் ஆகவும் பயன்படுத்தி முடியை பாதுகாக்கலாம். அதற்கு நாம் சிறிது மெனக்கிட வேண்டும். அப்படி தலை முடியை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பொதுவான குறிப்புகள் இதோ!
தலையில் தயிர் தடவி ஊற வைத்துவிட்டு பின் குளிக்க சென்றால் பொடுகு நீங்கும்.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து பின் தலையை அலசினால் உடல் சூட்டை தணித்து கூந்தல் மென்மையாகும்.
ஊறவைத்த வெந்தயத்துடன் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி கருமையாக நீண்டு வளரும். உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
செம்பருத்தி பூவின் இலைகளை கொதிக்கும் நீரில் ஊற வைத்து நன்கு ஆறியவுடன் பார்த்தால் கொழ கொழவென்று இருக்கும். அதை தலையில் தேய்த்து குளித்தால் ஷாம்பு போல் நுரைவரும். உடலுக்கு குளிர்ச்சி தந்து உறக்கமும் நன்றாக வரும்.
தலை வழுக்கையாக இருந்தால் இலந்தை இலைச் சாற்றை அரைத்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் தலை வழுக்கை மறைய ஆரம்பிக்கும்.
வெள்ளை மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வசம்பை அரைத்த விழுதைக் கொண்டு தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன் தொல்லை குறையும்.
செம்பருத்தி பூவை அரைத்து தோசை அடை மாவில் கலந்து தோசை அடை வார்த்து சாப்பிட செம்பட்டை முடி மாறும்.
தலைக்கு முட்டை தேய்த்து குளிக்கும் பழக்கம் உடையவர்கள் அரை முடி எலுமிச்சம் பழச்சாற்றையோ அல்லது ஒரு தேக்கரண்டி வினிகரையோ நீரில் கலந்து குளித்தால் முடியில் நாற்றம் இருக்காது.
நீண்ட கூந்தல் வளர அவ்வப்போது அரைக்கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம்.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர குளிர்ச்சி கிடைப்பதுடன் முடி கருகருவென்று கேசம் வளரும்.
இரண்டு எலுமிச்சம் பழச்சாற்று உடன் ஒரு கப் தேயிலை நீர் இரண்டையும் நீரில் கலந்து கூந்தலை கடைசியாக அலசும்போது உபயோகப்படுத்தினால் கூந்தலுக்கு மெருகு உண்டாகும்.
மருதாணியையும் கருவேப்பிலையும் அரைத்து சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தடவி வர முடி கருமையாகவும், பளபளப்புடனும், நீண்டும் வளரும்.
கடுகு எண்ணெயை தடவி வர தலையில் உள்ள புழுக்கள் இறந்து முடி உதிர்வது நிற்பதுடன், புழுவெட்டு ஏற்பட்டு வழுக்கையான தலைக்கு நிவாரணம் கிடைக்கும்.
சோற்றுக்கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம். சோற்றுக்கற்றாழை அதிக குளிர்ச்சி உடையது .எனவே சம்மருக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.