
நாற்பதுகளின் நடுவில் கூந்தல் நரைக்க ஆரம்பிப்பது இயற்கை. ஆனால், 20 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினருக்கு ஏன் பித்த நரை வருகிறது? என்பதற்கான காரணங்களையும், அதைத் தடுக்கும் இயற்கை முறைகளையும் பற்றி இந்தப் பதிவில் கண்போம்.
1. பெற்றோர்களுக்கு சிறிய வயதில் முடி நரைத்திருந்தால் பிள்ளைகளுக்கும் அது போல இளம் வயதிலேயே முடி நரைக்கும்.
2. அடிக்கடி தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பது ஒரு முக்கிய காரணம். கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புவை உபயோகித்துக் கொண்டே இருப்பதால் முடி வலுவிழந்து நரைக்க ஆரம்பிக்கிறது. வாரத்திற்கு இரண்டு தடவைக்கு மேல் ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பவர்களுக்கும், அதிக அளவு ஷாம்புவை நீர் சேர்க்காமல் அப்படியே உபயோகப்படுத்துபவர்களுக்கும் மிக விரைவிலேயே இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்கும்.
3. இன்றைய இளம் வயதினர் ஃபேஷன் என்ற பெயரில் தலைக்கு தேங்காய் எண்ணெயை தடவுவதே இல்லை. எண்ணெய் தடவி தலை வாருவது பட்டிக்காட்டுத்தனம் என்று நினைத்துக் கொண்டு தம் தலை முடியின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
4. பள்ளியில் தேர்வில் அதிகமாக மதிப்பெண் பெற வேண்டும் என்றும், தான் மற்ற மாணவர்களைப்போல ஸ்மார்ட்டாக இல்லையே என்று கம்பேர் செய்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவதும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக தனக்கு வராத விஷயங்களில் மெனக்கெடுவதும் ஆக 20 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கு இளநரை வருகிறது.
இளநரை வராமல் தடுப்பது எப்படி?
1. தினமும் காலையில் வெளியில் செல்லும் போது சில சொட்டுகளாவது உச்சந்தலையிலும் தலைமுடியிலும் தேங்காய் எண்ணையை அழுத்தி தடவ வேண்டும். வெளியில் செல்லும்போது சூரிய ஒளி பட்டு, தலை முடி கருமை நிறத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும். கடந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் எல்லாம் நன்றாக எண்ணெய் தடவியதால் தான், இளநரை வராமல் இருந்தது. வயதான பின்பு தான் அவர்களுக்கு நரைத்தது.
2. என்னதான் வெளிப்புறத்தில் நாம் எண்ணெய் தடவினாலும் உடலுக்கு எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக மிக முக்கியம். ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்றவற்றை வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். சாம்பார் பொரியலில் இருக்கும் கருவேப்பிலையை தூர எறியக் கூடாது. கறிவேப்பிலைப் பொடி செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். இவை எல்லாம் செய்தாலே இளந்தரை வராமல் தடுக்கலாம்
3. தலைக்கு ஷாம்பு உபயோகிக்காமல் அரப்பு போட்டு தலைக்கு குளிக்கலாம். செம்பருத்தி இலைகளை அரைத்து இயற்கையான ஷாம்புவாக உபயோகிக்கலாம். கூட வெந்தயமும் சேர்த்துக் கொண்டால் தலைக்கு நல்ல குளிர்ச்சி. ஷாம்புவை எப்போதாவது மிக அரிதாக அவசரத்துக்கு மட்டும் உபயோகித்தால் போதும்.
மேற்கண்ட முறைகளை பின்பற்றினால், இளநரை வராமல் நிச்சயம் தடுக்கலாம்.